பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் காடுகளும், மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர்மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள்  ஆய்வு என்ற பெயரில் புத்தர்சிலை வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிக்கான முன்னாயத்தங்கள் நடைபெற்று வருவதுதான் சார்ச்சைக்கான விடயமே.

IMG 20210309 141338 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

ஆக்கிரமிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார்

காலம் காலமாக தமிழ் மக்கள் வழிபாடு செய்துவந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் குருந்தூர்மலையில் உள்ளது. இது மக்களுடைய வழிபாட்டு இடமாகவும், முறிப்பு பகுதியில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கான களமாகவும் இச் சிவனாலயம் அமைந்துள்ளது. இக் குருந்தூர்மலையில் பல தொல்லியல் ஆதாரங்கள் காணப்படுகின்றது என கூறிக்கொண்டு அதனை சிங்கள பௌத்த அடையாளங்களாக சித்தரித்து குருந்தூர்மலையில் பௌத்த விகாரையை அமைக்கும் முயற்சி 1980ளின் தொடக்கத்திலையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நிலையில் 1982ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த ஆலயத்திற்கு மக்கள் செல்வதற்கும், வழிபாடுகளை  மேற்கொள்வதற்கும்  முழுத்தடை விதிக்கப்பட்டிருந்தது.   33 வருடங்களாக தொடர்ந்து வந்த போரினாலும், இடப்பெயர்வுகளாலும், குருந்தூர்மலையை சூழ்ந்து இராணுவம் தங்கியிருந்ததனாலும் மலை உச்சியில் உள்ள  இவ் ஆலயத்திற்கு மக்களால் சென்றுவர முடியவில்லை. பின்னர்  2015ஆம் ஆண்டு மக்கள்  மீண்டும் குருந்தூர்மலைக்கு சென்று வழிபாடுகளை  மேற்கொண்டு வந்திருந்தனர்.

IMG 20210130 174842 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

போர் முடிவுக்கு வந்த பின்னர் பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும், அதிகாரமும் வழமையாக மாறியிருக்கின்றன. அதாவது தமிழ் மக்களின் வழிபாட்டிடமான செம்மலை நீராவியடிப்பிள்ளையார் இன்று பௌத்தர்களின் விகாரைகளாக வேரூன்றியிருக்கின்றது, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு, இன்று பௌத்தர்களின் இராஜ்ஜியமானது.  இப்போது குருந்தூர்மலையிலும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது.

IMG 20210309 141256 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

அதுமட்டுமன்றி குமுழமுனை கிராமத்தில் மலை ஒன்றின் மேல் – குன்றின்மேல் – குமரன் முருகன் ஆலயம் அமைவு பெற்றுள்ளது. இதற்கு காவல் தெய்வமாக பழமைவாய்ந்த ஸ்ரீபாதாள வைரவர் எனும் இறைவன் வீற்றிருக்கின்றார். இது பலகால பழமை வாய்ந்தது எனவும், இதில் வீற்றிருக்கும்  வைரவருக்கும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இருக்கும் தெய்வத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக  முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். குருந்தூர்மலையில்  மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணி இவ் ஆலயத்திலும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.

IMG 20210309 WA0015 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

புராதன விகாரைகள்  இருந்த இடங்கள் என்ற பெயரில் தொல்பொருள் ஆய்வு என்ற வடிவத்தினை பயன்படுத்தி வெறும் தூண்களையும், கற்களையும் வைத்துக்கொண்டு அங்கு புராதன விகாரைகள் இருந்ததாக புதிய விகாரைகள் அமைக்கும் ஆக்கிரமிப்புக்களும், முயற்சிகளும்  இன்று  வட கிழக்கில் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையிலையே குருந்தூர்மலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் மறுக்கப்படும் அதேவேளை, அங்கு சிங்கள பௌத்த அடையாள சின்னங்களை நிறுவும் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் முயற்சி இன்று தொடக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடாத்தப்படும் கட்டுமானப் பொருட்களும் இன்று குவிக்கப்பட்டிருக்கின்றன.

IMG 20210309 141209 2 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் தொடர்பான ஆக்கிரப்புக்களின் ஆரம்பம்

IMG 20210309 141135 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

குருந்தூர்மலையில் புராதன விகாரை இருந்தது என கூறிக்கொண்டு பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்தினரின் துணையுடன் புத்தர் சிலை அமைக்க முயன்றபோது, அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அதற்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. 06.09. 2018 அன்று முதலாவது வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்படி 13.09.2018 வரை எவரும் குறித்த மலைக்கு செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டு, 13.09.2018 அன்று மீண்டும் இவ்வழக்கு  மேலதிக விசாரணைகளுடன் எடுத்துக்கொள்ளப்பட்டு குறித்த வழக்கில்  கிராம மக்கள் குறித்த இடத்தில் இயற்கையான கிராமிய  வழிபாட்டினை  நடாத்த எவ்வித தடையுமில்லை என  அனுமதி வழங்கப்பட்டதுடன், குறித்த இடத்தில் புதிய கட்டுமானங்களை , அகழ்வுபணிகளை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டும், குறித்த மலையில் தொல்லியல் ஆய்வினை மேற்கொள்வதாயின் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுதுறை ஆய்வாளருடன் இணைந்தே ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நீதவானால் கட்டளையிடப்பட்டது.

IMG 20210309 141148 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

இவ்வாறு வழக்குகள் இடம்பெற்று தமிழ் மக்கள் தம் வழிபாட்டு உரிமைகளை  நிரூபித்திருப்பினும் இன்று நீதிமன்ற கட்டளைகளை மீறி  மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்  குருந்தூர்மலையில் புராதன விகாரைகளின் எச்சங்கள் இருப்பதாக கூறி 18.01.2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அப்பகுதிக்கு வருகைதந்த அகழ்வாரய்ச்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அரசின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்

குருந்தூர்மலைத மிழர்களின் பூர்வீக பகுதியே! அதில் உள்ள தெய்வங்களை அக்கிராம மக்கள் பூர்வீகமாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். இதற்கு அங்குள்ள எச்சங்களும், சிதைவுகளும் வரலாற்று ரீதியாக பறைசாற்றுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் 2300 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பத்மநாதன் உறுதியாக கூறியிருக்கின்றார். ஆனாலும்  குறித்த இம் மலையில் இருக்கும் சிதைவுகளும், எச்சங்களும்  பௌத்தர்களது என ஒரு கூட்டம் அதிகாரமாக கூறிக்கொண்டிருக்கின்றது.

குருந்தூர்மலைப் பகுதியில் லிங்க வழிபாடுகள் இடம் பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும், இன்று அவ் ஆதாரங்கள் பௌத்தர்களது என போலியான ஆதாரங்களை சித்தரிக்கின்றார். எல்லாவல மேதானந்த தேரர் 05.02.2021 அன்று ஊடக அறிக்கைக்கு வழங்கிய செவ்வியில், “குருந்தாகம எனும் பௌத்த விகாரை இன்று குருந்தூர் என மாறிவிட்டது எனவும், வட கிழக்கில் காணப்படும் மலைகள் பௌத்த விகாரைகளை அடிப்படையாக கொண்டது எனவும் கூறியிருக்கின்றார் , மேலும் விகாரைகள் இடிக்கப்பட்டே ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும்,  வட கிழக்கில் 99% ஆனவை பௌத்தர்களின் மரபுரிமை எனவும் கூறியவாறே  திட்டமிட்டு தம் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கின்றனர்.

அண்மைய நாட்களாக மக்கள் குறித்த மலைக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ள இராணுவத்தினர் தடை விதித்திருக்கின்றனர். இந் நிலையில் 17.01.2021 வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வன்னி தமிழ் ஊடகவியலாளர்கள்  குறித்த மலைக்கு களப்பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறித்த மலைக்கு யாரும் செல்ல முடியாது என மலையடிவாரத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, ஊடகவியலாளர்கள் உட்செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்து, பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே பல  நிபந்தனைகளுடன் உள் அனுமதித்தனர்.

ஆனால்  17.01.2021 அன்று குறித்த மலைக்கு அமைச்சர் ஒருவர் வருகை தருவதனை முன்னிட்டு குருந்தூர்மலை அலங்கரிக்கப்பட்டு, பாதைகளும் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தடைபெற்றுக்கொண்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுமிருந்தது.  பரம்பரையாக வழிபட்டுவந்த அக்கிராம மக்களோ, ஊடகவியலாளர்களோ குறித்த மலைக்கு உட்செல்ல முடியாது. ஆனால் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும், மக்களும் எவ்வாறு குறித்த மலையினுள்  உள் அனுமதிக்கப்படுகின்றார்கள்?

IMG 20210309 141256 1 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

அண்மையில் குறித்த மலையில் குருந்தாவ புராதன விகாரைகள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணியில் சிவலிங்க வடிவை ஒத்த லிங்கம் ஒன்று காணப்பட்டது. அதனை  பௌத்த விகாரையின் எச்சம் என  கூறுகின்றார்கள் சிலர். ஆனால் குறித்த மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்பட்டை (எட்டுமுகம்) தாரலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

குறித்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் காலத்து லிங்க வடிவமைப்பில் இருக்கும் தார லிங்கம் தென்னிந்தியாவின் பல்லவர் கால கோயில்களில் இருக்கும் லிங்க வடிவமைப்பாகவே காணப்படுகின்றது. அதாவது பனைமலை தாளகிரீசுவரர், காஞ்சி கைலாசநாதர், கும்பகோணம் கூந்தூர் முருகன் போன்ற ஆலயங்களில் காணப்படும் லிங்கங்களின் அமைப்பை ஒத்ததாகவே காணப்படுகின்றது.

அதுமட்டுமல்ல, தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் கூந்தூர் முருகன் ஆலயம் உள்ளது. இங்கு இருக்கும் லிங்கத்தினை ஒத்ததாகவே முல்லைத்தீவு குழமுனை குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனர்  கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட லிங்க அமைப்பும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தென்னிந்தியா கும்பகோண ஆலயத்தின் பெயர் கூந்தூர் முருகன், முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார். ஆகவே குறித்த இடத்தின் ஆலய பெயர் தமிழ்மக்களின் அடையாள காரணப்பெயராக கூட இருக்கலாம்.

27.01.2021  அன்று வடக்கினை சேர்ந்த சைவசமய குழுக்கள்  25 பேர் கொண்ட சைவ அமைப்பு உறுப்பினர்கள் குறித்த மலைக்கு சென்றபோது, அவர்கள் தடுத்து நிறுத்தி இரண்டரை மணிநேரம் விசாரணை செய்த இராணுவம், மலையில் வழிபாடு செய்ய முடியாது என பல கட்டுப்பாடுகளுடன் நிபந்தனைகளை விதித்தே அவர்களை உட்செல்ல அனுமதித்தனர். இராணுவத்தினர் அவர்களுக்கு தேவாரம் பாடமுடியாது, பூஜைகள் செய்யமுடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை கூட மலையில் ஏறும்போது உச்சரிக்க கூடாது என நிபந்தனைகளை அடுக்கி சைவசமய அமைப்பினரை புலனாய்வாளர்களும், இராணுவத்தினருமே ஆலயத்திற்கு அழைத்து சென்றார்கள்.

இது திட்டமிட்ட அரசின் செயற்பாடே! 

இவ்வாறு ஒரு புறம் இருக்க குறித்த மலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு  தென்னிலங்கை மக்கள், அமைச்சர்கள் வந்து இரகசியமாக வழிபாட்டினை மேற்கொள்வதோடு, இராணுவத்தினரும், தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து ஆய்வுகளை முன்னெடுத்து வருவதோடு, குறித்த மலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன், ஐயனாரின் சூலம் உடைக்கப்பட்டதோடு, வழிபாட்டு எச்சங்களும்  இன்று எரிக்கப்பட்டுள்ளன.

குறித்த மலை தொடர்பாக சிலர் தம் ஆதிக்கத்தால் போலியான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து செயற்படுவது தமிழர்களின் பகுதிகளை அபகரிக்கும் செயற்பாடே! இன, மத முரண்பாடுகளை தூண்டிவிடும் செயற்பாடு என்றே கூறவேண்டும். இவர்களின் அநாகரீகமான செயற்பாடுகளால் இன்று குமுழமுனைக் கிராம மக்களின் ஆணிவேராக இருந்த வரலாற்று பொக்கிஷம் கைநழுவும் நிலையில் கேள்விக்குறியாகிருக்கின்றது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  காணப்படும் தொன்மை சின்னங்கள்

IMG 20210309 141234 1 பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

குறித்த இவ் ஆலயத்தில் பல நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த தொன்மை சின்னங்கள் காணப்படுவதனாலே இன்று பலர் உரிமை கோரும் நிலைக்கு வந்திருக்கின்றது.

குறித்த மலையில் நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்களும்,  செங்கட்டிகளால் அமைக்கப்பட்டுள்ள இடிபாடுடைய கட்டடங்களும் காணப்படுவதுடன், இடிபாடடைந்த  கட்டிடத்தில்  பிராமி, வட்ட வடிவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் வழிபாட்டு சின்னங்களில் பல பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அண்மையில் பல்லவர் காலத்திற்குரிய லிங்க வடிவ அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.