பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிய பின் மீண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் தேவையில்லை-டிலான் பெரேரா

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிய பின்னர் மீண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் தேவையில்லை. பயங்கரவதா நடவடிக்கையை தடுப்பதற்கு தண்டனைச் சட்டத்தின் ஒரு பகுதியாக அதற்கு தேவையான சட்டங்களை உள்வாங்க முடியும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்னர் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பயங்கரவாத நடவடிக்கை ஒன்றை அவசரமாக தடுப்பதற்கு தேவையான நிலை ஏற்பட்டால் அவசரகால சட்டத்தை கொண்டுவந்து அதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே எமக்கு சரியான திசைக்கு பயணிக்க முடியும்.

அத்துடன் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டி இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தேவை நாட்டில் இருக்கிறது.

ஆனால் அந்த திருத்தம் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கோ ஊடகங்களை அடக்குவதற்கோ இலக்காக அமையக்கூடாது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்ற ஊடகவியலாளர்களும் அடக்கப்படுவார்கள்.

அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

21தடவை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பொன்றே எமக்கு இருக்கிறது. எனவே நீதி அமைச்சர் பயங்கரவாத திருத்தச் சட்டமூலம் தயாரிப்பதற்கு பதிலாக அரசியலமைப்பொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம்.

மேலும் அரசியலமைப்பு திருத்தத்தின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை அல்லாமலாக்கினால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுக்கு இடமில்லாமல்போகும்.

இன்று நாட்டை நிர்வகிப்பது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராகும். அதனால் ஆளும் எதிர்க்கட்சி அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.