பயங்கரவாதி சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விசாரணைக்குட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை முன்வைக்க விருப்பதாக பிரதியமைச்சர் நளின் பண்டார நேற்று தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் என்னுடன் இடம்பெற்ற விவாதத்தில் பயங்கரவாதி சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்ததை ரம்புக்வெல எம்.பி ஏற்றுக்கொண்டார். இது மிகவும் விபரீதமானது. அவர்களது அரசாங்கமே சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாத குழுவை உருவாக்கி போஷித்தது. எனவே ரம்புக்வல எம்.பியை அழைத்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்,என்றும் அவர் கூறினார்.
முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் உருவாகினர். கடந்த அரசாங்கமே அதற்குரிய காரணம். பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்துவிட்டு இப்போது பாம்பு கொத்துவதாக முறையிடுவதால் என்ன பயன் என்றும் பிரதியமைச்சர் கேள்வி எழுப்பினார்.