பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகள்  வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம். அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.

தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியது அவசியமாகும். தேசிய கொள்கையை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

எனினும் மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.