இலங்கைக்கான இந்தியாவின் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கைக்கான இந்தியாவின் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை, இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ‘கார்டிலியா குரூஸ்’  ( cordelia cruises )கப்பல், இலங்கையின் துறைமுகங்களில் தரித்து நின்று, சுற்றுலா தலங்களுக்கு பிரயாணிகள் செல்லும் வகையில் பக்கேஜ்களையும் அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுலா பயணிகள் சென்னை திரும்புவதற்கு முன், இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களுக்கு விஜயம் செய்து சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் யால அல்லது உடவளவை தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்வையிடவும் ஆமை குஞ்சு பொரிக்கும் பண்ணைக்கும் செல்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காலி, டச்சு கோட்டை மற்றும் தியலும நீர்வீழ்ச்சிக்கு செல்லமுடியும் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில், திமிங்கலத்தைப் பார்ப்பது, டொல்பின்களைப் பார்ப்பது, புறா தீவுக்கு செல்வது ஆகியவற்றையும் இறுதியாக, யாழ்ப்பாணத்தில், சுற்றுலாப் பயணிகள் அமைதியான கடற்கரையில் ஓய்வெடுக்கலாம் என்பதுடன், இலங்கையின் புனிதமான கோவில்களை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.