பதவி நீக்க விசாரணையில் முன்னிலையாக அதிபர் டிரம்ப் மறுப்பு

விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லை என கூறி பதவி நீக்க விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுத்துவிட்டார். அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார்.

இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் போர்டு உறுப்பினராக உள்ளார்.  இங்கு எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை  பதவி நீக்கக் செய்யக்கோரி உக்ரைன் அதிபரிடம், ஜோ பிடென் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் கடந்த ஜூலை 25ம் தேதி கூறியுள்ளார்.

மேலும், இந்த உதவியை செய்வதற்காகவே உக்ரைனுக்கு வழங்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு நிதி 400 மில்லியன் டாலரை நிறுத்தி வைத்து கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரியை பழிவாங்க, தனது அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி, உக்ரைன் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதால், அந்தக் கட்சி, அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது. இதன் விசாரணை அமெரிக்க நாடாளுமன்ற அறையில் கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த விசாரணை மூடப்பட்ட அரங்கத்துக்குள் நடந்து வந்தது.

அதன்பிறகு விசாரணையின் வெளிப்படை தன்மையை உணர்த்தும் வகையில் விசாரணை நடவடிக்கைகள் டி.வி.யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. நேரலை விசாரணையில் ஆஜரான அமெரிக்க தூதர்கள் 2 பேர் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். ஆனால் அவர்களின் சாட்சியத்தை ஏற்க மறுத்த டிரம்ப், தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வந்தார். ஆனால் தற்போது இந்த பதவி நீக்க விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் விசாரணையில் அதிபர் டிரம்ப் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக வேண்டுமென நாடாளுமன்ற விசாரணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லாததால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது வக்கீல்கள் பதவி நீக்க விசாரணையில் ஆஜராகமாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.