நைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அரசுடனான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீவிரவாதிகள் மாணவிகளை விடுவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் அந்நாட்டில் மாணவகர் கடத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் நேற்று பள்ளி ஒன்றில் நுழைந்து ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அங்கிருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. கடத்தலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் நடத்தப்பட்ட மோதலில் போலீஸார் ஒருவர் பலியானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.