நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- சேமசிங்க

விவசாயிகள் மீதான கடன்கள் உட்பட நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சொத்துக்களையே இழக்கச் செய்யும் அளவிற்குத் தாக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்கள் பிரதமரின் தலைமையில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் நடைபெற்றுள்ளன என்றும் மேற்படி வங்கிகளிடமிருந்து உரிய அறிக்கைகள் கிடைத்ததும் அடுத்த வாரத்திற்குள் சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது மேலும் குறிப்பிடுகையில்:

கடந்த அரசாங்கத்தில் பொருத்தமான செயற்பாடுகள் காணப்படவில்லை. அதுவே கடந்த அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.

ஆனால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் தேர்தல் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தே அதிகாரத்திற்கு வந்துள்ளோம். நாம் அதைப் பின்பற்றுவோம்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் எல்லோருமே அடுத்த ஐந்து வருடங்களுள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றைச் செயற்படுத்துவோம்.

இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் தலைமைத்துவங்களுடன் பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளோம்.

இதன் நோக்கமானது, எதிர்கால முதலீட்டுச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்காக இவ் வங்கிகளின் பொருளாதார நிலைமையை ஆராய்வதாகும்.அதன்படி அவர்கள் இவ்வாரத்தினுள் தமது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பார்கள்.

Leave a Reply