” நீறு பூத்த நெருப்பாக  ”  அரகலய

350 Views

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய ஜனாதிபதி பதவியேற்றபின் இலங்கையின் பொருளாதாரா நிலைமைகள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு  இலங்கையின் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எம். கருணாரட்ண  வழங்கிய சிறப்பு செவ்வி….

கேள்வி :-

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையின் அரசியல் பொருண்மிய நிலைமைகள் எப்படி இருக்கின்றன?

பதில் :-

இலங்கையின் ஜனாதிபதியாக தாம் பதவியேற்க வேண்டுமென்பது ரணில் விக்கிரமசிங்கவின் நீண்ட கால கனவாக இருந்தது.அந்தக் கனவு இப்போது நனவாகி இருக்கின்றது.”அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர நண்பர்களும் இல்லை” என்பார்கள்.அது இப்போது நிதர்சனமாகி இருக்கின்றது.ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் எல்லாரும் அமைச்சர் பதவிக்காகவும், வேறு சலுகைகளுக்காகவும் இப்போது அவரது புகழ்பாடத் தொடங்கி இருக்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் ஊழல் தொடர்பில் ரணிலின் பெயர் பலமாக அடிபட்ட நிலையில் இது குறித்து கடுமையாக விமர்சித்தவர்கள் இப்போது பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போய், நாய்க்குட்டியைப் போன்று ரணிலின் காலைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.ஜனாதிபதி ரணிலின் காட்டில் இப்போது மழை பெய்து கொண்டிருக்கின்றது.பல்வேறு  நெருக்கீடுகளுக்கும் மத்தியில் அரசியலமைப்பின் அடிப்படையில் அவர் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ரணில் ஜனாதிபதியாகியுள்ளதைத் தொடர்ந்து எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றையும் கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் காத்திருந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்திருக்கின்றது. எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு QR என்ற ஒரு முறைமை கையாளப்பட்டு வருகின்றது.

இம்முறைமையின் ஊடாக வாரத்திற்கு ஒரு முறை வாகன உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்தோடு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை ரணில் ஜனாதிபதியான கையோடு குறைத்திருக்கின்றார் மேலும் எரிபொருள்,  போக்குவரத்து கட்டணங்கள் என்பவற்றிலும் ஒரு சிறிய தொகையினை.

குறைப்பதற்கான நடவடிக்கையில் ரணில் களமிறங்கி இருந்தார்.இதன் காரணமாக ஆரம்ப கட்டத்தைக் காட்டிலும் ஓரளவு ரணில் குறித்த எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே வலுப்பெற்று காணப்படுகின்றது என்பது உண்மையாகும். இவற்றுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடையை ஜனாதிபதி நீக்குவதற்கு மேற்கொண்ட முடிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றபோதும் பலர் இதனை வரவேற்றுப் பேசி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.தடை நீக்கப்பட்டமை சிறப்பானதேயாகும்.

இதேவேளை தடை நீக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை புலம்பெயர் உறவுகள் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாட்டில் வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவுகளின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வர வேண்டும் என்ற முக்கியஸ்தர்களின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.ஏனைய தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்டு நல்லிணக்க சூழ்நிலைக்கு வித்திடப்படுதல் வேண்டும்.

ரணில் தனது அரசியல் இருப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தான் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அபிவிருத்தி கருதியும் சமகாலத்தில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வருவது துலாம்பரமாகத் தெரிகின்றது.எனினும் இது தொடர்ந்தும் சாத்தியமாகுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இலங்கை கடன் சுமைகளுக்கும் மத்தியில் சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.இவற்றுள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது.சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுவது குறித்து ஆராய்ந்து வரும் அதேவேளை பல்வேறு நிபந்தனைகளையும் இலங்கைக்கு விதித்திருப்பதாக தெரிய வருகின்றது.

இந்நிபந்தனைகள் நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில்  வரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. அத்தோடு அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு குறித்தும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் மீதான செல்வாக்கு சரிவடையக்கூடும். இது அவர் சார்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒரு வீழ்ச்சியாகவே அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.எனவே சமகால நிலைமைகள் ரணிலுக்கு சாதகமாகத் தோன்றினாலும் எதிர்காலம் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.

கேள்வி :-

மக்கள் முன்னெடுத்து வந்த அரகலய போராட்டத்தின் தற்போதைய  நிலை எப்படி இருக்கின்றது?

பதில்:-

ஊழலுக்குப் பேர்போன ஆட்சியாளர்களான ராஜபக்ஷாக்களை  அரசியலில் இருந்து விரட்டியடித்து நாட்டில் ஜனநாயகத்தையும் ஊழலின்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்கள் நாட்டுப்பற்றுடனும் அர்ப்பணிப்புடனும்  இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த விதம் குறித்து சர்வதேச நாடுகளும் பாராட்டு தெரிவித்திருந்தன.காலிமுகத்திடலில் ஆரம்பித்த போராட்டம் பின்னர் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட நிலையில் மக்களின் அமோக ஆதரவும் இதற்கு கிடைத்திருந்தது.

போராட்டத்தின் மூலமாக பசில் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ கோத்தபாய ராராஜபக்ஷ போன்றவர்கள் அரசியலில் இருந்தும் தூக்கியெறியப்பட்டார்கள்.எனினும் இலங்கையின் அரசியலை இன்னும் பின்புலத்தில் இருந்தும் இவர்கள் இயக்கி வருவதாக விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

ஊழல்வாதிகளான ராஜபக்ஷாக்களை விரட்டியடிக்கும் நிலைக்கு இளைஞர்களால் உத்வேகமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் இப்போது ஜனாதிபதியாக கோலோச்சி வருகின்றார்.அரகலய போராட்டக்காரர்களின் அழுத்தம் காரணமாகவே  ரணிலுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.எனினும் ஜனாதிபதி ரணில் இப்போது அதனை மறந்து அரகலவில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் அல்லது கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.இது பிழையான ஒரு அணுகுமுறையாகும்.ரணில ஏறிய ஏணியையே எட்டி உதைப்பதாகவே நான் கருதுகின்றேன்.இது நல்லதல்ல.

அரகலவில் ஈடுபட்டோரை ஒடுக்கும் நிகழ்வுகள்   என்னதான் முன்னெடுக்கப்பட்டாலும் ” நீரு பூத்த நெருப்பாக”  இன்னும் அரகலய இருந்து கொண்டுதான் இருக்கின்றது. தண்டனைகளுக்கு போராட்டக்காரர்கள் பயந்தவர்களல்லர்.நாட்டின் நலனுக்காக அவர்கள் எத்தகைய துன்ப துயரங்களையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றனர்.

நாட்டில் அராஜக ஆட்சி மீண்டும் தலைதூக்குமானால் அல்லது மக்களின் நலன்கள் புறந்தள்ளப்பட்டு ஊழல்கள் அதிகரிக்குமானால் அரகலய போராட்டக்காரர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒன்றுபட்ட சக்தியின் ஊடாக நல்லாட்சியும் ஜனநாயகமும் மலர்வதற்கு அவர்கள் பூரண பங்காற்றுவார்கள்.எனவே காலிமுகத்திடல் வெறிச்சோடியுள்ளது என்பதற்காக அரகலய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று யாரும் கருதலாகாது.

கேள்வி :-

தற்போதைய இலங்கை அரசு தொடர்பாக சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?

பதில் :-

இலங்கை அரசாங்கம் இன்னும் ஸ்திரமற்ற ஒரு நிலையிலேயே இருந்து வருகின்றது.புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியேற்றுள்ளபோதும் பழைய பாராளுமன்றமே இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

இப்பாராளுமன்றத்தில் நாட்டு மக்களின் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுஜன பெரமுனவின் பலமே காணப்படுகின்றது.

இந்த நிலையில் பாராளுமன்றம் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கத் தவறியுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.ஜனாதிபதி தெரிவு பாராளுமன்றத்தில் இடம்பெற்றமை தொடர்பிலும் அதிருப்தியான வெளிப்பாடுகளே இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.இவ்வரசாங்கம் ஆறு மாத காலத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதோடு  இதன் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இத்தகைய ஒரு சூழலில் சர்வகட்சி அரசாங்க நிர்மாணம் கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்த நம்பகத்தன்மை படிப்படியாக செல்வாக்கிழந்து வருவதோடு தமது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கும் ஒரு வாய்ப்பாக சர்வகட்சி அரசாங்கம் அமைந்துவிடுமோ என்ற இயல்பான அச்சமும் பலரது மனங்களிலும் எதிரொலிக்கின்றது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் நீண்ட கால இருப்பு தொடர்பில் ஒரு நிச்சயமற்ற நிலையே காணப்படுவதோடு பொதுத்தேர்தல் ஒன்றே சமகால இலங்கையின் நெருக்கடிக்கு சுமுகமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று சிங்கள மக்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

Leave a Reply