நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய தங்களது புதிய ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டதை வடகொரியா வியாழக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய பக்குக்சாங்-3 ரக ஏவுகணை கிழக்குக் கடலோரப் பகுதியில் கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான வடகொரியாவின் திறனை, இந்த ஏவுகணை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
வடகொரிய இராணுவத்தின் வலிமை, இந்தப் புதிய ஏவுகணையின் மூலம் அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பக்குக்சாங்-3 ரக ஏவுகணை சோதனையின் படத்தையும் அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும், வடகொரியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகள் எவை என்பது தொடர்பாக கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் நேரடியாக எதையும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக, அமெரிக்க காவல் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வடகொரியா பலமுறை கூறி வந்துள்ளது நினைவு கூரத்தக்கது. அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வடகொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும், அந்த நாட்டிற்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
எனினும், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்து வருவதால், அந்தப் பேச்சுவார்த்தை தடைப்பட்டிருந்தது. எனினும், வரும் சனிக்கிழமை (05) முதல் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக அமெரிக்காவும், வடகொரியாவும் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தன.
இந்தச் சூழலில், மேலும் ஒரு ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்ததாகவும், அந்த ஏவுகணை நிர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய ரகமாகத் தெரிவதாகவும் தென்கொரியா புதன்கிழமை தெரிவித்தது. அந்தத் தகவலை வடகொரியா தற்போது உறுதி செய்துள்ளது.
தங்களது எல்லைக்கு வெகு தொலவில் இருந்தும் தங்களால் தாக்குதல் தொடுக்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதன் மூலம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதை வடகொரியா உணர்த்தியுள்ளது என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.