நீரில் மூழ்கிய வெனிஸ்; பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு

642 Views

இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான்.

காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளால் ஆனது. ஒவ்வொரு சிறு தீவும் வாய்க்கால்களால் பிரிக்கப்படுகிறவை. நூற்றுக் கணக்கான பாலங்கள் இந்நகரின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கின்றன. இந்த சிறப்பியல்பாலும், அழகிய கட்டடக் கலையாலும் உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது இந்த நகரம்.

ஆனால், வரலாறு காணாத வெள்ளத்தால் வெனிஸ் நகரின் புகழ் பெற்ற செயின்ட் மார்க் பேசிலிகா உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது வெளியில் மட்டுமல்ல தற்போதைய வெள்ளத்தால் கட்டங்கள் உள்ளேயும் நீர் புகுந்தது.

இந்த வெள்ளம், பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என்று வெனிஸ் நகர மேயர் லூய்கி புருக்னேரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “தற்போது அரசு கவனிக்கவேண்டும். இவையெல்லாம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள். இதற்காகத் தரும் விலை அதிகமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக வெனிஸ் நகரில் நீர் மட்டம் 1.87 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது என்று ஓத கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. அதிகாரபூர்வமாக புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படுவது 1923ல் தொடங்கியதில் இருந்து ஒரே முறைதான் இந்த அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 1966ல் நடந்த அந்த நிகழ்வில் 1.94 மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது.

Leave a Reply