நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பிக்குவின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும் அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது இன்றைய தினம் (03.10.2019) மாநகர பதில் முதல்வரும் பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் அவர்களால் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணாக வகையில் விகாரை ஒன்றினை அமைத்தமை மற்றும் நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை ஓரமான மரணித்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.