அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில் தமது மனப்பதிவுகளை இலக்கு ஊடகத்திடம் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் சிலர்….
சகாயம் திலிபன், இணைப்பாளர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம், மன்னார்
“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்”
இலங்கையின் போரியல் வரலாற்றில் நீண்ட கால யுக்தியாக “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” என்பது இலங்கையின் அரச படைகளால் மட்டுமல்லாது அரசாங்க ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களாலும் பல தசாப்தங்களாக இடம் பெற்று வருகின்ற ஓர் மனித உரிமை மீறலாகும்.
தமிழின அழிப்பைக் குறித்து நிற்கும் 2009ம் ஆண்டிற்கு முட்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை வான் கடத்தல்,இரானுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்கள், வயது வித்தியாசம் இன்றி கைது செய்யபட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு போவதை நாம் பார்க்கின்றோம்.
இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்ப கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச்செய்தல் எனும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இன்றும் வீதியோரங்களில் கொட்டகைகள் அமைத்து வயோதிப தாய்,தந்தையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமான உயிரோட்டமானதொரு போராட்டத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான ஒரு பொறிமுறையினை முன்வைக்கவில்லை. இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கிதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையிலே நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்குற்றங்கள் சர்வதேச ரீதியல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கு பூகோள அரசியல் இடம்தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அலுத்தங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் எந்தவிதமான நன்மைகளும் அல்லது நீதியான விசாரனைகளுக்கான எந்த முன்னெடுப்புக்கலும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009 ம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்நாட்களில் இருந்து இற்றைவரை 115க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடி மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மரணத்துள்ளனர். இவர்களது மரணம் சாதாரணமல்ல. வலிகளை சுமந்த சாட்சியங்கள், இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்ற நிலைக்கே வரவேண்டியுள்ளது. இன்று சமூகத்தில் உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் மிகவும் பாதிக்கப்படும் ஒருதரப்பாகவும் குறிப்பாக கணவர் காணாமலாக்கப்பட்டு பிள்ளைகளுடன் வாழும் இளம் தாய்மார்களின் இன்றை நிலை பெண்தலைமைக்குடும்பங்களாக சொல்லமுடியாத துயரங்களை சுமந்து வாழ்ந்து தங்களின் உறவுகளுக்காக தொடர்ந்தும் போராடி வருகின்ற தாய்மார்களின் நிலையினை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இவர்களுடைய உறவுகளை தேடிய போராட்டத்தில் பொதுமக்களும் பங்குதாரராக மாறவேண்டும். காணாமல் ஆக்கப்படும் சந்தர்பங்கள் தனி குடும்பங்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் அல்ல. மாறாக இது யுத்தத்தின் ஒரு வகை தந்திரோபாய செயற்பாடாகவே கருதுகின்றோம்.
இறந்துபோணவர்களுக்கு ஒரு நினைவேந்தல் செய்வதன் மூலம் உளவியல் ரீதியாக ஆறுதல் கிடைக்கும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது. உண்மைநிலையை கண்டறிவதற்கான உறவுகளின் இந்தப் போராட்டத்தில் இன்று அப்பாவின் முகங்களை மறந்த சின்னஞ்சிறார்களும் கடைசி காலத்தில் செய்யவேண்டி கடமைகளை கூட செய்வதற்கு பிள்ளைகளின்றி வாழும் பெற்றோர்கள் என நீண்டுகொண்டே போகும் வலிகளின் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த அறவழி போராட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை இந்த உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது முழுமையான ஒத்துழைப்புக்கள் இருக்கும்.
“என் கணவர் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”- குணசுந்தரி
பல கஷ்டங்களுடன் வாழ்ந்து வருகிறோம். கணவன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என திருகோணமலை –
தம்பலகாமத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஒருவரான சுந்தரலிங்கம் குணசுந்தரி தெரிவித்தார்.
1975ம் ஆண்டு சின்னையா சுந்தரலிங்கம் என்பவரை திருமணம் செய்தேன் இவர் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றி வந்தார்.
இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்தார்கள் சந்தோசமான குடும்ப வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்து வந்தோம் 1985 ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக மட்டக்களப்புக்கு சென்றோம் எனது கணவர் கொழும்பு கல்முனை பேருந்து சாரதியாக கடமை புரிந்து வந்த நிலையில் 1990 களில் மீண்டும் தம்பலகாமத்திற்கு பிள்ளைகளுடன் வந்தோம்.
பிறகு கந்தளாய் திருகோணமலை பேருந்து சாரதியாக இருந்த தருணம் 15 நாட்கள் கடந்து வந்த நிலையில் 1990.6.13 திருகோணமலை பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி வரும் வழியில் தம்பலகாமம் சந்தியில் இரானுவத்தினால் கடத்தப்பட்டார். இதனை கணவருடன் கூட வந்த ஒருவரே எமக்கு கூறினார்.
இதனை தொடர்ந்து கணவன் காணாமல் போனமை தொடர்பில் கந்தளாய் காவல்துறையில் முறைப்பாடு செய்தேன். இற்றை வரைக்கும் எந்த தகவலும் இன்றி பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றேன் . 2006.3.23 ம் திகதி எனது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 39.
முறைப்பாடு செய்யாத இடமில்லை. எங்களுக்கு நீதியை பெற்றுத் தாருங்கள். இழைத்த கொடுமைக்கு பதில் கூற வேண்டும். அரசாங்கமே பொறுப்புச் செல்ல வேண்டும். என காணாமல் போன தனது கணவரான சின்னையா சுந்தரலிங்கத்தின் மனைவி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.
எனது கணவர் தான் வேண்டும்,வேறு எதுவும் தேவையில்லை._காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஒருவர் கண்ணமுத்து
எனது கணவரை இரானுவ சீருடையில் வந்து அழைத்துச் சென்றார்கள். இன்றும் அவர் எங்களுடன் இல்லை என திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் அரபா நகரை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் ஒருவரான சிதம்பரநாதன் கண்ணமுத்து எனும் ஒரு வயோதிப தாய் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தனது மனக் கவலையை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
“எனது தகப்பனார் மற்றும் தாயார் இராசம்மாவுடன் தம்பலகாமத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது அப்பா விவசாயம் செய்து குடும்பத்தை பராமரித்தார். எங்களது குடும்பத்தில் எட்டு பிள்ளைகள் .ஒரு நடுத்தர குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். காலம் கடந்து போகையில் 1977 ம் ஆண்டு பதுளையை சேர்ந்த சிதம்பரநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். கணவர் சில்லறை கடை வியாபாரம் மூலமாக வாழ்வாதாரத்தை நடாத்திச் சென்று கொண்டு வந்தார்.எங்களுக்கு மூன்று பிள்ளைகள் (ஆண் 2,பெண் 1)
1990ல் நடைபெற்ற இனப் பிரச்சினை காரணமாக இடம் பெயர்ந்து குறித்த கிராமத்தை விட்டு முள்ளியடிக்கு இடம் பெயர்ந்து சென்றோம். சிறிய தேனீர் கடை மூலம் வாழ்வாதாரத்தை நடாத்திச் சென்றோம்.
ஒரு நாள் 1990_07.06 இரவு எட்டு மணியளவில் தங்களது கடை வாசலில் வைத்து இரானுவ உடையில் வந்தவர்கள் என் கணவரை அழைத்தார்கள். அவரை சிங்கள மொழியில் ஏதோ கதைத்து அழைத்து சென்றார்கள் ஆனால் என்ன கதைத்தார்கள் என்று எனக்கு தெரியாது. மறு நாள் அவர் வரவில்லை.
15 நாட்களாக கணவர் வருவார் என காத்திருந்தேன்.ஆனால் கணவர் வரவில்லை. பின்னர் கிராம சேவகர் ஊடாக காவல்துறையில் முறைப்பாடு செய்தேன். அதற்கு அவர்கள் உன் கணவர் காணாமல் போகவில்லை. இயக்கத்திற்கு சென்று விட்டார்கள் என்னைத் திட்டி துரத்தினார்கள்.
நான் மறுபடியும் சென்று முறைப்பாடு செய்தேன். செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு எல்லாவற்றிலும் முறைப்பாடு செய்தேன். தீர்வு கிடைக்கவே இல்லை.
மூன்று வருட காலம் முள்ளியடியில் இருந்து மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்பினோம். சொந்தவூருக்கு வரும் போது வீடு அழிந்து காடு மண்டிக் காணப்பட்டது. பின்னர் வீட்டுத் திட்டம் தரப்பட்டது.முன்னர் அகதிகளாக சூரங்கல், தம்பலகாமம் பகுதியில் வாழ்ந்து வந்தோம்.
எனது 02 மகன்களையும் இரானுவத்தினர் இயக்கம் (விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள்) எனக்கூறி அழைத்துச் சென்று அடிக்கடி துன்புறுத்தி சித்திரவதை செய்தார்கள். அப்போது என் மகன்களுக்கு 18_20 வயது இவ்வாறு பெரும் சிரமப்பட்டு கூலித் தொழில் செய்து பிள்ளைகளை வளர்த்து வந்தேன். இப்போது மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்துள்ளார்கள்.
தற்போது கூட காணாமல் ஆக்கப்பட்ட என் கனவருக்காக நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டமைக்கான முறைப்பாட்டு பிரதி மாத்திரமே மிகுதி . தற்போது இருதய நோயுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறேன்.
எங்களுக்கான நீதியை பெற்றுத் தாருங்கள். வேறு எதுவும் தேவையில்லை. எனது கணவர் தான் வேண்டும் என்றார்.