நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கிழக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கிழக்கு ஆளுநர் நேற்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகின்ற நிலநடுக்கம் தொடர்பிலும் அதனை எதிர் கொள்ளக்கூடிய வகையில் மாணவர்கள் உட்பட ஏனைய தரப்பினரையும் தயார்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடாத்துமாறு கிழக்கு ஆளுநரினால் நேற்று (14) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போது அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களினுடைய செயலாளர்களுக்கும் அறிவித்துல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைக்காலமாக திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலநடுக்கம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எடுத்துக்காட்டாக 15.09.2018 அன்று திருகோணமலை துறைமுகத்தை அண்டியும், 19.02.2021 அன்று பாணமை கடல் பிராந்தியத்திலும், 19.03.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும், 11.09.2023 அன்று மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளதுடன், அண்மையில் 12.11.2023 அன்று திருகோணமலை கோமரன்கடவல பகுதியிலும் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர். கிருபராஜா கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற நில நடுக்கம் தொடர்பாகவும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார் இந்த நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.