நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் – மக்களின் கருத்து என்ன? – மட்டு.நகரான்

இலங்கையில் காலத்திற்கு காலம் போராட்டங்களையும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளையும் முடக்குவதற்கு இலங்கையின் சிங்கள அரசுகள் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தியே வருகின்றது.
தமிழர்களின் அனைத்துவிதமான போராட்டங்களையும் அடக்குவதற்கு சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம் தொடர்ச்சியான சட்டங்களை நடைமுறைப்படுத்தியேவந்தது.

அகிம்சை ரீதியான போராட்டமாக இருக்கலாம் ஆயுத ரீதியான போராட்டமாக இருக்கலாம்,இராஜதந்திர ரீதியான போராட்டமாக இருக்கலாம் அனைத்துவிதமான போராட்டங்களையும் அடக்குவதற்கான ஒரு ஏற்பாடாகவே இவ்வாறான சட்டங்களை பார்க்கமுடியும். வடகிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமது இருப்பினை தக்கவைப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் அத்துமீறில்கள் உட்பட தமக்கான உரிமைகளை நிலைநாட்டுமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழர்களின் போராட்டமானது இன்று சர்வதேசத்தினை இலங்கை மீதான அழுத்தங்களை ஏற்படுத்தும் நிலைக்குதள்ளியுள்ளது.அதன் காரணமாக சட்டங்களை கொண்டுவந்து தமிழ் மக்களின் போராட்டங்களை முடக்கும் வகையிலான செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த மயமாக்கல் அதிகரித்துவரும் நிலையில் அவற்றிற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடராத நிலையினை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

கடந்தகாலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தமிழர்கள் மீது பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிவழங்கிய இந்த அரசாங்கம் அண்மையில் மாவீரர் தினம் அனுஸ்டித்ததற்காக 11பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி சிறையில் அடைத்தது. இதேபோன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது தமது உரிமையினை வலியுறுத்தி போராட்டம் நடாத்திய பண்ணையாளர்கள்,பொது அமைப்புகள்,ஊடகவியலாளர்கள் மீது வழங்கு பதிவுசெய்யப்பட்டது.

மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடாத்திய யாழ்-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டனர்.

இவ்வாறு ஏற்கனவே சட்டங்கள் உள்ளபோதே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் இந்த அரசாங்கம் புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்ற இரண்டு சட்டங்களை கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளைகளை நசுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் கிழக்கில் தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்காக குரல்கொடுத்துவரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பல்சமய பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துவருகின்றனர்.இவ்வாறான சட்டங்கள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அவர்களின் கருத்துகளின் தொப்பாக இந்த கட்டுரை அமைகின்றது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது ஒட்டு மொத்த மனித குலத்திற்கே மிக மோசமான அந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது.மிகவும் ஜனநாயக விழுமியங்களை காலில் போட்டு மிதிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

Sivayaokanathan நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் - மக்களின் கருத்து என்ன? - மட்டு.நகரான்ஏனென்றால் அந்த சட்டத்தின் மூலமாக ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றது அரசியல் அமைப்பின் 14 15 16 ஆகிய அடிப்படை உரிமைகள் கூட அதில் மீறப்படுகின்றது. ஒன்று கூடும் சுதந்திரம்,பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம்,சிந்தனை சுதந்திரம் அனைத்துமே அடிப்படையில் மீறப்படுகின்ற சட்டமாக இருப்பதினால் எதிர்காலத்தில் ஜனநாயகம் மிக மோசமான ஒரு கேலிக்கூத்தான இடத்தில் போய் நிற்கும் என்பதில் எது வித ஐயமும் இல்லை.

அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் மூன்று மாதத்தில் விடுதலை செய்யப்படலாம் என கூறினாலும் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை போலீசார் நீதிமன்றத்திற்கு வழங்குகின்ற பரிந்துரையினை பொறுத்து தான் அவர் விடுதலை செய்யப்படுவார்.ஆகவே இது மிக மோசமாக எதிர்காலத்தில் அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.ஒரு செய்தியை கூட ஒருவருக்கு பகிர்ந்தால் கூட என்னை கைது செய்யலாம.; அதில் இருக்கின்ற மிக ஒரு ஆபத்து என்னவென்றால் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஐந்து பேர் கொண்ட அந்த குழுவினருக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதனால் அவர்கள் நினைத்தது போல் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் மிக மோசமாக தமிழ் மக்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விடுதலை செய்யப்படாமலும் இருக்கின்றார்கள.; பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அழுத்தங்கள்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மற்றும் ஜி எஸ் பி பிளஸ் போன்ற சர்வதேச அழுத்தங்கள் இருந்ததன் காரணத்தினால் அந்த நாடுகளை ஏமாற்றுவதற்காக நாங்கள் அந்தச் சட்டத்தை நீக்குகின்றோம் என்று கூறி விட்டு அந்த சட்டத்தை நீக்கிய அதே கையோடு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமலுக்கு வருவதாக அறிய முடிகின்றது. கடந்த கால வரலாற்றைப் பொறுத்த வரைக்கும் மிக மோசமாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வரலாறு அதோடு சேர்த்து அதில் இருக்கின்ற மிகுதி விடயங்களையும் கைது செய்வதற்காக நிகழ்நிலை காப்புச் சட்டமும் பயன்படுத்தப்பட போகின்றது.

இந்த சட்டம் ஊடகத்துறையிலும் தாக்கம் செலுத்தும் என மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் செயலாளர் செல்வகுமார் நிலாந்தன் தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

Nilanthan நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் - மக்களின் கருத்து என்ன? - மட்டு.நகரான்ஊடகவியலாளர்களை ஊனமுற்றவர்களாக மாற்றுவதற்கான செயற்பாடே இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் ஆகும்.ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை நீதிமன்றங்கள் ஊடாக அடக்குவதற்கான அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.இவ்வாறான சட்டங்கள் ஊடகவியலளார்களை வீடுகளுக்குள் முடக்கும் சட்டங்களாகவே அமையப்போகின்றது.கடந்த காலத்தில் ஊடகவியலளார்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் பல பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள்.பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட நிலையும் இருந்தது.

நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சட்டமாகவே இதனை பார்க்கின்றோம் என வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்; தலைவி திருமதி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

Amalanayaki நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் - மக்களின் கருத்து என்ன? - மட்டு.நகரான்தொடர்பாடல் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறும் நிலையேற்படப்போகின்றது. தொலைபேசியில் ஒரு செய்தியை பகிர்ந்தாலே அதனை வைத்து கைதுசெய்து எங்களை குற்றவாளியாக மாற்றும் வழிமுறை அதில் உள்ளது.நாங்கள் வீதிகளில் போராட்டங்கள் நடாத்தும்போது நாங்கள் வீதிகளை மறித்ததாக கூறி பொய்யான வழக்குகளை பதிவுசெய்யும் நிலைமைகள் காணப்படுகின்றது.எங்கள் தொடர்பில் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அதனைக்கொண்டு எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.

எங்களது பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் என எங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டமூலமாகவே இதனை பார்க்கவேண்டும்.

எதிர்காலத்தில் போராட்டங்களை நடாத்தமுடியாது சூழ்நிலையும் ஊடகங்கள் ஊடாக எங்களது கருத்துகளையும் எமது கோரிக்கைகளையும் வெளிக்கொணரமுடியாத சூழ்நிலையினை இந்த சட்டம் கொண்டுவருகின்றது. வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை நீர்த்துப்போகச்செய்வதற்காகவே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது.ஏனென்றால் இன்று சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பல சவால்களை வலிந்துகாணாமல்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்படுத்திவருகின்றனர்.எங்களது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்றாது வெறுமனே சட்டங்களை கொண்டுவந்து எங்களை அடக்குவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றது.சர்வதேச சமூகமும் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்போவதில்லை.பாதிக்கப்பட்ட சமூகமாக எங்களை கஸ்டங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான சட்டங்கள் ஒரு ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரல் வளையை நசுக்குவதற்காக கொண்டுவரப்படும்போது சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாமலிருப்பது கவலைக்குரியது. எதிர்காலத்தில் இந்த நிலைமையினை இல்லாமல்செய்ய சர்வதேசம் முன்வரவேண்டும் என்றார்.