பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவின் வருகையால் நாமல் ராஜபக்ஷ ஓரங்கட்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ராஜபக்ஷ குடும்பத்துக்குள் உருவாகியிருக்கும் பனிப்போரையும் பஸிலின் வருகை தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். இலங்கைக்கு பஸில் வருவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பல சந்தர்ப்பங்களில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மொட்டு அணி எனப்படும் பொதுஜன பெரமுன துண்டு துண்டாக உடைந்து சிதறியுள்ள நிலையில், அதனை ஒருங்கிணைப்பது, மற்றொரு தோ்தலுக்குத் தயாராவது என்பனதான் அவருக்கு முன்னாலுள்ள சவால்களாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு வருவதற்கு முன்னா் ரணிலுடன் பஸில் நடத்திய பேச்சுக்களின் போது முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தற்போது நடைபெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதம், இதன் போதான வாக்கெடுப்பில் மொட்டுவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது என்பன குறித்து ரணிலுடன் அவா் முக்கியமாக ஆராய்ந்திருக்கின்றாா். அதேவேளை ரணில் பதவியில் தொடா்வதற்கு மொட்டுவின் ஆதரவு தொடரும் என்ற உறுதியும் பஸிலால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் மொட்டின் மீதான ஆதரவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. அத்துடன், ராஜபக்ஷக்களின் அதிகாரம் படிப்படியாக இழக்கப்படுவதும் பஸில் எதிர்கொள்ள வேண்டிய பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மொட்டு அணியினா் அண்மையில் மேற்கொண்ட இரகசிய கள ஆய்வு ஒன்றின்போது பொதுஜன பெரமுனலின் ஆதரவு தீவிரமாக வீழ்ச்சியடைந்துவருலது அவதானிக்கப்பட்டது. அதனையடுத்தே மாவட்ட ரீதியில் நடத்துவதற்கு ஆரம்பித்த மீளெழுச்சிப் பேரணிகளை பொதுஜன பெரமுன இடைநிறுத்தியிருக்கின்றது.
இதன் காரணமாக கடந்த காலங்களில் மூழ்கடிக்கப்பட்ட பொது ஜன பெரமுனவின் பலத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்காவில் இருந்தே திட்டத்தை தயாரிக்க பஸில் நடவடிக்கை எடுத்தார். அதில் முதலாவதாக இதுவரையில் யாப்பு இல்லாமல் அலைந்து கொண்டிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பசிலின் திட்டத்தில் தற்போது புதிய யாப்பு தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் யாப்பு இல்லாமல் ராஜபக்ஷக்களின் வாய் வார்த்தையில் யாவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிற கட்சிகளைப் போன்று முடிவெடுக்க செயற்குழுவோ, மத்திய குழுவோ இல்லை. அதனால் தான் கட்சி தீர்மானத்திற்கு புறம்பாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ச்சியாக முன்வைக்கப்பட்டுவந்த போதிலும், ராஜபக்ஷக்களின் அதிகாரத்தை அது பாதிக்கும் என்பதால் அதில் அக்கறை காட்டப்படவில்லை.
இதன்படி, பசிலின் ஆலோசனையின் பேரில் புதிய கட்சி யாப்பு மற்றும் அதன் அதிகாரபூர்வ சபை, செயற்குழு, ஒழுக்காற்று விவகாரங்கள் உள்ளிட்ட முறையான அமைப்பு ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் பஸில் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தை கைப்பற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி அம்பாந்தோட்டையில் இருந்து தொகுதிக் குழு ஊடாக கூட்டங்களை நாமல் நடத்த தொடங்கி மாவட்ட மட்டத்திற்குச் செல்ல முயற்சித்த போதிலும், மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் நிலவுவதால், சபை உறுப்பினர்கள் நாமலை அழைத்து தமது மாவட்டங்களுக்கு வர வேண்டாம் என்று அறிவித்ததால் அது தோல்வியடைந்தது.
அதன்படி, கட்சியுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாமலின் திட்டம் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. நாமல் அண்மையில் முஸ்லிம் இளம் பெண் ஒருவரை கட்சியின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்தார். இத்தகவலை நாமல் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டார். ஆனால், கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாகவே பொதுஜன பெரமுன கட்சியில் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்று மேற்படி இளம் முஸ்லிம் பெண் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட வேண்டியதாயிற்று.
எவ்வாறாயினும், கட்சியின் ஆறாவது பொது மாநாட்டை இந்த நவம்பர் மாதம் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு முன்னதாக பஸில் திட்டமிட்டிருந்தார். அதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் திட்டமிட பஸில் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், நவம்பரில் கட்சி மாநாட்டை நடத்த நாமல் விரும்பவில்லை. கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றி அதன் பின்னர் கட்சியின் பொது மாநாட்டை நடத்துவதே நாமலின் திட்டமாக இருந்தது.
அதன்படி நாமல் தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சி மாநாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைத்தார். பஸிலின் தலைமையில் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்று, கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் கட்சி மாநாட்டை நாமல் நடாத்துவதற்கு தயாராகவுள்ளார். ஆனால், தற்போது கட்சியின் புதிய யாப்பை தயாரித்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துடன் நாமலின் திட்டங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய தலைவர் ஜி.எல்.பீரிஸை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை கொண்டு வரவும் பஸில் தீர்மானித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கட்சியின் பின்வரிசை இளைஞர் உறுப்பினர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி அவர்களை பலப்படுத்தவும் தேசிய அமைப்பாளராக கட்சியில் தொடர்ந்து இருக்கவும் பஸில் தற்போது தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பஸிலின் இந்தத் திட்டம் நாமல் ராஜபக்ஷவுக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
தேசிய அமைப்பாளா் பதவியில் தன்னைப் பலப்படுத்திக்கொள்வதும், அதன்பின்னா் அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்துவிட்டு ஜனாதிபதித் தோ்தலில் குதிப்பதும் பஸிலின் இலக்காக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது மஹிந்த தரப்புக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அடுத்து வரப்போகும் தோ்தலில் ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு ராஜபக்ஷக்களிடையே உடன்பாடு உள்ளது. அதன்மூலமாகவே தம்மை கட்டியெழுப்ப முடியும் என்பது அவா்களது கணிப்பு. ஆனால், அடுத்த பாராளுமன்றத்தில் நாமலை எதிா்க்கட்சித் தலைவராக்குவதன் மூலம் அவரது ஆறுமையையும் செல்வாக்கையும் கட்டியெழுப்பி 2029 இல் நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தோ்தலில் நாமலை களமிறக்குவதுதான் மஹிந்தவின் திட்டம்.
ஆனால் பஸில் முன்னெடுக்கும் நகா்வுகள் மஹிந்வின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கிவிடலாம் என்ற கருத்து மொட்டு அணியினரிடையே காணப்படுகின்றது.
இதேவேளை ராஜபக்ஷக்களின் தந்தையாரான மறைந்த டி.ஏ.ராஜபக்ஷவின் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளளாததது சகோதரரா்களிடையில் உருவாகியிருக்கும் பனிப்போரை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் மறைந்த ராஜபக்ஷவின் 55 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பு உரை வியாழக்கிழமை நடைபெற்ற போது கோட்டாபய ராஜபக்ச அதில் கலந்து கொள்ளவில்லை. பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில், கோட்டாபய ராஜபக்சவும் இதில் கலந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்றனர். மேலும் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இது ஒருபுறம் ராஜபக்ஷ சகோதரா்களிடையேயான பனிப்போரை வெளிப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் ராஜபக்ஷக்களுடன் நெருக்கமாக அரசியல் நடத்தும் ரணிலின் உபாயத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.