நாமலின் அறிவிப்பு நம்பிக்கை தருகின்றது; அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்

205 Views

இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலானது தமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எமது உறவுகள் மீதான குற்றத் தண்டனைக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்த பின்பும் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் செய்திருக்கக் கூடிய செயற்பாடுகளுக்காக அவர்களது பாதி வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற் தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புமிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம். அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம்.

நிச்சமயமாக நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையினை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்ற மையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வினை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம். இது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply