நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மஹிந்த ஏற்கவேண்டும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

458 Views

அமைச்சரவை அமைச்சர்கள் நாட்டைப் பலிகொடுத்தாவது தங்களின் அமைச்சுப் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொண்டு நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை பிரதமர் ஏற்க வேண்டும். அரச சேவை முழுமையாகப் பலவீனமடைந்துள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் அரசும் பலவீனமடையும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

“கொரோனா வைரஸ் முதலாம் அலை தாக்கத்தின் போது அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட்டது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முறையாகப் பின்பற்றினார்கள். இதன் காரணமாக நெருக்கடி நிலையை அப்போது வெற்றி கொள்ளமுடிந்தது. ஆனால், தற்போது அவ்வாறு இல்லை.

கொரோனா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயல்படவில்லை. கொரோனா வைரஸ் சாதாரண ஒரு தடிமன் என்று நாட்டு மக்கள் அலட்சியப்படுத்தும் அளவுக்கு சுகாதார அமைச்சு பொறுப்பற்ற வகையில் செயல்பட்டது. வைரஸின் தாக்கம் குறித்தும், முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் எவ்வித திட்டங்களும் வகுக்கப்படவில்லை.

புத்தாண்டு காலத்துக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சுகாதார அமைச்சின் பலவீனத்தன்மை கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையின் ஊடாக வெளிப்பட்டுவிட்டது. அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவது சிறந்தது. அவ்வாறே அரச சேவை குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவர்கள் அனைவரும் நாட்டை பலி கொடுத்தாவது தங்களின் அமைச்சு பதவிகளை பாதுகாக்க முயற்சிப்பார்கள். நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பாரதூரமான நிலை குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதை அவர்களின் செயல்பாடுகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும். இந்தியாவின் தற்போதைய நிலைமை அபாயகரமானது. ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனைகளைப் பெற வேண்டும். கொரோனா விவகாரம் தொடர்பிலான அனைத்துப் பொறுப்புக்களையும் ஜனாதிபதி, பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டு மக்களைபாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு மாத்திரம் உண்டு. நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து நாட்டையும், மக்களையும் அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு முழுமையாக உள்ளது” என்றார்.

Leave a Reply