நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஓமானில் பணிபுரியும் இலங்கைப் பெண்கள் கோரிக்கை

ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப் பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமானில் பணிபுரியும் இலங்கைப்பெண்கள், தாம் மீண்டும் நாடு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 8 ஆம் திகதி முதல் சுமார் இருவாரகாலமாக ஓமானில் உள்ள இலங்கைத்தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த 8 ஆம் திகதி சுமார் 10 பேரால் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் 9 ஆம் திகதி மேலும் 10 பேரும், 14 ஆம் திகதி மேலும் 5 பேரும் இணைந்துகொண்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் பலர், தாம் பணிபுரியும் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தப்படுவதாகவும் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன் தம்மை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டிலுள்ள இலங்கைத்தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண்களின் நிலை குறித்து ஓமானுக்கான இலங்கைத்தூதுவர் ஸபருல்லா கான் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சுமார் 25 பேர் உள்ளடங்கலாக பாதுகாப்பான தங்குமிடத்தில் இருந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஓமானின் தொழில் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்நாட்டுப்  காவல்துறையினரால் கடந்த செவ்வாய்கிழமை அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாகவும்  விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.