நவகாலனித்துவ மேலாதிக்கம்-  சமூக ஆய்வாளர் சந்திரமோகன் செவ்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு ஈழத் தமிழர்கள் குறித்த சமூக ஆய்வாளர் கி.சந்திரமோகனுடன் ஒரு  செவ்வி,

‌கேள்வி:-
சிங்கள பௌத்த. ஸ்ரீ. லங்கா குடியரசு தன்னிச்சையாக பிரகடனப்படுத்தப்பட்டதன் 51 ஆண்டு கால விளைவுகள் என்ன?

பதில் :-

இலங்கை 1948 ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.அதாவது அந்நிய நாட்டு ஆதிக்கத்தில் இருந்து மீண்டெழுந்த வருடமாக நாம் இதனைக் கொள்ள முடியும்.ஒரு நாடு அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாக தலைநிமிர்கின்றது என்றால்  அந்நாடு புதிய ஒரு பாதையில் பிரவேசிக்கப் போகின்றது.இதனால் நாட்டு மக்கள் பல வழிகளிலும் நன்மையடைவார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எதிரொலிப்பது இயல்பாகும்.

இலங்கையின் மக்களிடையேயும் இந்த எதிர்பார்ப்பு முன்னதாகக் காணப்பட்ட நிலையில் இலங்கை வாழ் சிறுபான்மை மக்களிடையே இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே காணப்பட்டது.ஏனெனில் சிறுபான்மையினர் அந்நியர் ஆட்சியில் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்தமை இதன் முக்கிய ஏதுவாகும்.எனினும் சுதந்திரம் எதிர்பார்த்த சாதக விளைவுகளை சிறுபான்மை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. ஒரு கவிஞர் கூறியதைக் போன்று, ” பட்டுவேட்டிக் கனவில் இருந்தவர்களின் கட்டி இருந்த கோவணமும் களவாடப்பட்ட ” ஒரு நிலையையே இலங்கையின் சுதந்திரம் ஏற்படுத்தி இருந்தது.நவ காலனித்துவ போக்கில் சுதந்திரத்தின் பின் இலங்கை பயணித்த நிலையில் சிறுபான்மையினரின் நெருக்கீடு மென்மேலும் அதிகமாகியது.

இது ஒரு புறமிருக்க 1972 இல் இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு முன்வைக்கப்பட்டது.1947 ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட சோல்பரி அரசியல் திட்டம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக இலங்கை அரசியல் தலைவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.சிரி லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும் இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்களும் இக்குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாகவே முன்வைத்தனர்.

சோல்பரி அரசியல் திட்டம் இலங்கை மக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படவில்லை.முற்றாக பிரித்தானியரான சோல்பரியினால் உருவாக்கப்பட்டது.பாராளுமன்றம் சட்டவாக்கம் தொடர்பாக போதிய இறைமையைக் கொண்டிருக்கவில்லை.அரசியல் யாப்பின் 29 வது பிரிவு, நீதிமன்றங்களுக்கு இருந்த நீதிப் புனரமைப்பு அதிகாரம், மகாதேசாதிபதியிடம் இருந்த சட்டங்களுக்கு கையொப்பமிடும் அதிகாரம் எனப்பலவும் முதலாவது குடியரசு யாப்பு உருவாக ஏதுவானதாக கூறப்பட்டது.

எனினும் பிற்காலத்தில் இந்த யாப்பிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகக் கூறி 1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டதும் தெரிந்தாகும்.இந்த இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பிதாமகனாக காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவே விளங்கினார்.முதலாவது குடியரசு அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்துள்ளன.சிங்கள பௌத்தத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த அரசியல் யாப்பு முன்வைக்கப்பட்டது.

இது  நாட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படவும் உந்துசக்தியாக அமைந்ததெனலாம்.இலங்கை பல்லின மக்களும் வாழுகின்ற ஒரு நாடாக விளங்குகின்றது.இங்கு பன்மைக் கலாசாரம் நிலவுகின்றது.எனவே சகலருக்கும் சமவாய்ப்புக்கள், சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதோடு அவ்வாறு அடிமையாக அடங்கி நடக்கவேண்டிய அவசியமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் நோக்குகையில் இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு இன நல்லிணக்கத்துக்கு அல்லது இன் ஒற்றுமைக்கு எந்தளவுக்கு வலுசேர்த்தது என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் பன்மைக் கலாசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.ஆயினும்  இலங்கையில் பன்மைக் கலாசாரம் கருத்தில் கொள்ளப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா? என்று கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது .

இலங்கையின் 1972 ம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பாக இருக்கட்டும் அல்லது சமகாலத்தில் நடைமுறையில் உள்ள 1978 ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பாக இருக்கட்டும் இந்த யாப்புகள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை உரியவாறு நிறைவேற்ற தவறியுள்ளன.நாட்டு மக்கள் ஐக்கியத்துடன் கை கோர்த்து ஒன்றாக செயற்படும் போதே நாட்டின் அபிவிருத்தி சாத்தியமாகும்.எனினும் இலங்கையின் குடியரசு யாப்புகளில் காணப்படும் குறைபாடுகள் அபிவிருத்தியை மறுதலிப்பதாகவுள்ளன என்பதே உண்மையாகும்.எனவேதான் புதிய  அரசியல் யாப்பின் அவசியம் தொடர்பில் இப்போது அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாகவே  இனவாதம் அதிகளவில் தலைவிரித்தாடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.இனவாத சக்திகள் இலங்கையின் எழுச்சிக்கு தடையாக உள்ளனர்.

தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பல்வேறு உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த இனவாத செயற்பாடுகளே முட்டுக்கட்டையாக விளங்குகின்றன. சிறுபான்மையினருக்கு  ” அள்ளிக் கொடுக்காவிடினும் கிள்ளிக் கொடுப்பதற்கும் ”  இனவாதிகள் தயாராக இல்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பு நிலவிய இனவாதப் போக்குகளில் இப்போதும் ஒரு மாற்றம் ஏற்பட்டதாக இல்லை.அதனிலும் அதிகரித்த இனவாதப் போக்கினையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.இலங்கை இனவாதத்தால் பல்வேறு சவால்களையும் சந்திக்க நேர்ந்தது.இதனால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இன்னும் மாறியதாக இல்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு இதுகாலவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.இது தொடர்பில் இதயசுத்தியுடனான செயற்பாடுகள் காணப்படவில்லை என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.எனவே இனியும் காலம் தாழ்த்தாது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

1972 ம் ஆண்டு யாப்பின் ஊடாக தொகுதிவாரி தேர்தல் முறை முன்வைக்கப்பட்ட நிலையில் இது சிறுபான்மையினருக்கு பெரும் பாதகமாகவே அமைந்தது என்பதும் தெரிந்த விடயமாகும்.பெரும்பான்மை வாக்காளர் விரும்பாத ஒருவர் உறுப்பினராக தெரிவு செய்யப்படக் கூடிய நிலை தொகுதிவாரி தேர்தல் முறையில் காணப்பட்டது.

ஜனநாயகத்துக்கு முரணான தேர்தல் முறையாக தொகுதிவாரி தேர்தல் முறை விளங்கியது.நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கும் பாராளுமன்றத்தில் அவை பெறும் ஆசனங்களுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாட்டுத் தன்மை நிலவியது.இத்தகைய நிலைமைகள் புதிய தேர்தல் முறைக்கு வித்திட்டிருந்தன.எனினும் 1978 யாப்பின் ஊடாக முன்வைக்கப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் எதிர்பார்த்த சாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிந்ததேயாகும்.

சுருக்கமாக கூறுமிடத்து 1972 ம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட தொகுதிவாரி தேர்தல் முறை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தின் வீழ்ச்சிக்கே அடித்தளமிட்டதெனலாம்.ஒரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவ வீழ்ச்சியானது அச்சமூகத்தின் அபிவிருத்தியை பல்வேறு வழிகளிலும் தடைப்படுத்தும் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறாக பல வழிகளிலும் 1972 ம் ஆண்டின் குடியரசு யாப்பு சிறுபான்மையினரின் வாழ்வில் தாக்க விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தி இருந்தது.

கேள்வி:-
தன்னாட்சி உரிமைகளை பயன்படுத்த முடியாத எல்லைகளில் வாழும் மக்களாக  தமிழ் மக்கள் உள்ளனர்.இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:-

மனித வாழ்வில் உரிமைகள் மிகவும் முக்கியமானவை.உரிமைகளின்றி எந்தவொரு மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாது என்பதும் புத்திஜீவிகளின் கருத்தாகும்.இந்த வகையில்” உரிமைகளை யாரும் தங்கத்தட்டிலே வைத்து வெறுமனே தந்துவிடப் போவதில்லை.போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும்” என்று கூறுவார்கள்.இந்த வகையில் நோக்குகையில் தன்னாட்சி உரிமைகளை பயன்படுத்த முடியாத வகையில் எல்லையில் வாழும் மக்கள் இருந்து வருவது புதிய விடயமல்ல.இம்மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இவர்கள் இதிலிருந்து மீட்சி பெற்று சகல உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அல்லது சந்தர்ப்பம் உருவாக்கிக் கொடுக்கப்படுதல் வேண்டும்.ஆட்சியாளர்கள் இது குறித்து பூரண கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.”இலங்கையர்”, என்ற பொதுவரையறையுடன் செயற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். இதேவேளை தொடர்ச்சியாக இம்மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு காணப்படுகின்றபோது மாற்று வழிமுறை குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே இத்தகைய ஒரு நிலைமையை மேலெழும்பவிடாது இதயசுத்தியுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.சகல இனங்களும் ஐக்கியத்துடன் கை கோர்க்கும் நிலைக்கு வித்திடப்படுதல் முக்கியத்துவம் மிக்கதாகும்.இதனால் சாதக விளைவுகள் அதிகமாகும் என்றார்.