இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகளில் சிக்கி 72 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நேற்று வரையிலான வன்முறைகளில் மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் நாகா, குக்கி பழங்குடி இன மக்களுக்கும் மைத்தேயி இனமக்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. நாகா, குக்கி பழங்குடிகளைப் போல மைத்தேயி இன மக்களைப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் முயற்சிக்கு எதிராக இந்த வன்முறை வெடித்தது.

மைத்தேயி இனமக்களை குறிவைத்து குக்கி இனமக்கள் தாக்குதல்கள் நடத்தினர். இதில் மைத்தேயி இன மக்கள் உயிரிழந்தனர். அம்மக்களில் பலர் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக மணிப்பூர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். குக்கி இன மக்களுடன் பயங்கரவாதிகளும் சேர்ந்து மைத்தேயி மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்பது மணிப்பூர் மாநில அரசின் குற்றச்சாட்டு ஆகும்.

மணிப்பூரில் நேற்று வரையிலான வன்முறைகளில் மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 பேர் பயங்கரவாதிகள் என அம்மாநில முதல்வர் பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் மணிப்பூரில் ஆயுதங்களை ஏந்தி இருக்கும் குக்கி இனமக்கள், மாநில அரசு தங்களது பாதுகாப்புக்கு உறுதி அளித்தால் அவற்றை கைவிடுவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் மணிப்பூர் மாநிலத்துக்குள்ளேயே மைத்தேயி இனமக்கள் தலையீடு இல்லாத தன்னாட்சி கவுன்சில் அல்லது தனி மாநிலம் ஒன்றை தங்களுக்கு உருவாக்க வேண்டும் என்பதும் குக்கி இனத்தவர் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.