ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் அபூர்வம். ஆனால் சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும் காப்பியங்களையும் படைத்தாலும், எந்த ஒரு அரசனும் அவ்வாறு படைத்ததாக வரலாறு இல்லை. அவ்வாறான தத்துவ அரசன் (philosopher king) என்ற பட்டம் ஒருவருக்கு அளிக்கப்படக்கூடியத் தகுதி இருக்கிறதென்றால், அது பிரபாகரன் அவர்கள் மட்டுமே. அரேலியசின் [1] நூலைப் படிக்கும்பொழுதுதான் எவ்வளவு தூரம் அரேலியசும் பிரபாகரனும் ஒரே பண்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று விளங்குகிறது. உதாரணமாக அடக்கம், ஒழுக்கம், வீரம், பயனில சொல்லாமை, கடமையைக் கண்ணாகக் கருதுதல், இறப்பைத் தூசுபோலக் கருதுதல், அன்பு, குடும்பம், வாழ்க்கைத் துணை, இயற்கையை ஒன்றி வாழ்தல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் பக்குவம், அறம் போற்றுதல், மூடநம்பிக்கையை வெறுத்தல், அமைதி, பற்றற்று இருத்தல், எளிமை, நேர்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை, சிந்தித்து செயலாற்றல், இன்பத்தைவிட ஒழுக்கத்திற்கு முதன்மை, புலன்களை அடக்குதல், எதற்கும் கலங்காத அமைதி, மேடை அடுக்குமொழி பேச்சுக்களில் பங்குகொள்ளாமை, அனைவரிடமும் எளிமையாகப் பழகுதல், காலத்தை வீணடிக்காமை, நீதி தவறாமை, ஒருவரின் செயலுக்கேற்ற பரிசையோ தண்டனையோ உடனுக்குடன் வழங்குதல், புகழ்ச்சியை வெறுத்தல், கூர்ந்து கவனித்தல், தூரநோக்கான பார்வை, தெளிந்த சிந்தனை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் செய்யவேண்டியதைச் செய்தல், தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அரேலியசின் தத்துவம் என்பது: இந்த பிரபஞ்சத்தின் முடிவிலா கால அளவில் நமது வாழ்க்கை என்பது கண் இமைக்கும் நொடிப்பொழுதே. இதில் ஒருவர் இருபது வயதில் இறக்கிறாரா அல்லது நூறு வயதில் இறக்கிறாரா என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பதே முக்கியம். அவ்வாறான அர்த்தமுள்ள வாழ்க்கையை எந்த எதிர்ப்பிற்கும் பயப்படாமல், ஒழுக்கத்துடன் தனது கடமையைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலமே அடைய முடியும், மாறாக புலன்களின் `வழியாக இன்பத்தை நாடுவதன் மூலம் அல்ல.
“If you apply yourself to the task before you, following the right reason seriously, vigorously, calmly, without allowing anything else to distract you, but keeping your divine part pure, as if you might be bound to give it back immediately; if you hold this, expecting nothing, fearing nothing, but satisfied with your present activities according to nature, and with heroic truth in every word and sound which you utter, you will live happily. And there is no man who is able to prevent this.” [1]
“Never value anything as profitable that compels you to break your promise, to lose your self-respect, to hate any man, to suspect, to curse, to act the hypocrite, to desire anything that needs walls and curtains.” [1]
பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை இத்தத்துவத்திலிருந்து பெரிதாக வேறுபட்டது அல்ல. இவ்வுலகில் மாற்றங்கள் சூறாவளிபோல நிகழ்வது. தத்துவ பிடிப்பு இல்லாத ஒருவரால் நீண்டகாலம் ஒரு திசையில் பயணிக்கமுடியாது.
அரேலியசு தனது வாழ்க்கைத் தத்துவங்களை தனது சுய குறிப்புக்காக எழுதினார். பின்பு அது அவரின் இறப்புக்குப் பின்னர் நூலாக மற்றவர்களால் வெளியிடப்பட்டது. இன்று அது ஒரு தலைசிறந்த தத்துவநூலாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. பிரபாகரன் அவர்கள் அரேலியசைப் போன்று அடக்கமானவர். அரேலியசு தனது தத்துவங்களைத் தானாக முன்வந்து நூலாக வெளியிடாதபொழுது, பிரபாகரனும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒன்றை உறுதியாகக் கூற முடியும்: பிரபாகரன் அவர்கள் இறுக்கமான பிடிப்பு கொண்ட தத்துவ மேதை. அவரை எதைக்கொண்டும் மாற்ற முடியாது.
பிரபாகரன் அவர்கள் ஒரு தலைவராக உலகம் வியக்கும் சாதனைகள் புரிந்தவர் என்றாலும், வாழ்க்கையில் அவர் ஒரு துறவியே. அவரை எளிதாக திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோர் வரிசையிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
“Nearly two millennia after Marcus set down his thoughts, they speak with undiminished eloquence, giving us pause to wonder a man who stood at the pinnacle of worldly power yet preserved the inner life of a saint.” [1]
ஒரு நாட்டின் ஒழுக்கம் தனி மனித ஒழுக்கத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒழுக்கமில்லாத மக்கள் ஒழுக்கமான நாட்டை எதிர் பார்ப்பது என்பது கானல் நீரே. புலிகளின் ஈழம் உலகில் மிகச்சிறியது என்றாலும், உலகில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்தனர். அந்த வெற்றிகளின் ஊற்று இந்த தனிமனித ஒழுக்கத்திலிருந்தே பிறந்தது.
Civic virtue is a mirage unless anchored in the inner virtue of each citizen [1]
பெரும்பாலான மாவீரர்கள் முப்பது வயதுக்குள் விதையாயினும், அவர்கள் சாதித்தது ஆயிரம் ஆண்டுகளானாலும் நினைவு கூறப்படும். அவர்கள் வாழ்ந்தது நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கை.
ஒரு நாட்டின் பொற்காலம் என்பது செல்வச்சிறப்பினால் உருவாவது என்று பார்ப்பது தவறான பார்வை. என்று ஒரு சமூகத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு சிறக்கிறதோ, அன்று தான் பொற்காலம் ஏற்படுகிறது. செல்வச்செழிப்பு என்பது அதன் ஒரு விளைவுதானே ஒழிய காரணமல்ல. அந்த வகையில் பார்த்தால் புலிகளின் ஈழ நாடு செல்வத்தில் குறைந்திருந்தாலும், தேவையான மற்ற அனைத்திலும் நிறைந்திருந்தது. அது பொற்காலம் படைக்கத் தேவையான அனைத்து அடிப்படைக் கூறுகளைக் கொண்ட ஒரு அர்த்தமுள்ள நாடு.
ஒரு நல்ல சமூகம் தனது மாவீரர்களை முதலில் போற்றும், அதன்பின் அதன் அறிவாளர்களைப் போற்றும். அதை உலகின் தலைசிறந்த முதல் பத்து பரிசில்கள் பிரதிபலிக்கின்றன [3]. இன்று நமது சமூகத்தில் மாவீரர்களும் அறிவாளர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று புகழ் என்பது பொய்யான திரைப்படத்தில் நடிப்பவர்களை நோக்கிப் பாய்கிறது. இது ஒரு சமூகக்கேடாக மாறி நிற்கிறது. இன்றைய நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு இந்தப் புகழின் திரிபும் ஒரு காரணம் [13]. புகழ் என்பது அறம் சார்ந்து அறிவு சார்ந்து நிற்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சமூகம் சீரழிய வாய்ப்புகள் அதிகம். பண்டைய தமிழர் நாகரீகத்தில் புகழ் என்பது வாழ்விற்கு முக்கியமான வீரம், அறிவு, அறம், ஈதல், கலை, நாடகம், நடனம், இலக்கியம் ஆகியவற்றை ஒட்டி அமைந்தது. அது மாபெரும் படைப்புகளையும் வீரத்தையும் உருவாக்கியது. புலிகள் அந்த பண்பாட்டு சிறப்பை மீண்டும் கொண்டு வந்து பல சாதனைகளைப் படைத்தனர். மாவீரர் நாள் தமிழரின் நாட்காட்டிகளில் இருப்பதிலேயே முக்கியமான நாளாக என்று சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ, அன்று நாம் சாதனைகள் படைக்கும் தன்மை கொண்ட சமூகமாக மாறி நிற்போம்.
தமிழினம் மீண்டு எழவேண்டுமானால், அது தனிமனித ஒழுக்கத்தை நிராகரித்துவிட்டு செய்ய முடியாது. அவ்வாறான ஒழுக்கத்தை கற்க பின்பற்ற நாம் வேறெங்கும் சென்று தேடி அலையவேண்டியதில்லை. பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்து, கூடவே திருக்குறளையும் கற்பித்தால் போதுமானது. பிரபாகரனின் வாழ்க்கை என்பது திருக்குறள் கூறுவதிலிருந்து பெரிய வேறுபாடு இல்லை என்றுதான் கூறவேண்டும். சிலர் திருக்குறள் பிடிக்கும் ஆனால் பிரபாகரனைப் பிடிக்காது என்பர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்று பிரபாகரனின் தத்துவம் தெரியாது அல்லது திருக்குறளேத் தெரியாது என்றே கூறவேண்டும். அதேபோல சிலர் பெரியாரைப் பிடிக்கும், ஆனால் பிரபாகரனைப் பிடிக்காது என்பர். அவர்களுக்கும் அதே போன்ற பதில்தான் பொருந்தும். பிரபாகரனுக்குள் பெரியார் அடக்கம். பிரபாகரனின் தத்துவங்கள் இன விடுதலை[4], தனிமனித ஒழுக்கம், பண்பாடு [ 8], போரியல் மற்றும் உத்திகள் [5, 6,7,9,10], உலக அரசியல்[4], தலைமைத்துவம் [11] என்று சமூகம் சார்ந்த அனைத்து பரிணாமங்களைக் கொண்டுள்ளது. பிரபாகரன் என்ற பாத்திரம் மிகப் பெரியது; அதை திருக்குறளைக் கொண்டோ அல்லது பெரியாரைக் கொண்டோ நிரப்பிவிட முடியாது. பிரபாகரனின் தத்துவங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவை உலகம் அனைத்தும் காணும்படி செயல்முறைப் படுத்தப்பட்டு உலகம் வியக்கும் வெற்றிகளை அடையக் காரணமாக அமைந்தது. நாம் அவற்றை நம்பி பயன்படுத்தலாம். ஆனால் இந்த சிறப்பு நூல்களில் உள்ள தத்துவங்களுக்குக் கிடையாது.
சிலர் பிரபாகரன் அவர்கள் சில ஆதாரமில்லாத தவறுகளை செய்திருக்கிறாரென்று காரணம் கூறி அவரை நிராகரிக்கின்றனர். உலகில் தவறு செய்யாத மனிதனே கிடையாது. தத்துவமேதையாகக் கருதப்படும் அரேலியசே தனது ஆட்சியில் கிறித்தவர்களைத் துன்புறுத்தினார், ஆனால் அதன் காரணமாக அவரது உண்மையான தத்துவ பங்களிப்பு நிராகரிக்கப்படவில்லை. அதே கிறித்துவ உலகம் அவரை ஒரு சிறந்த கிருத்துவ உள்ளம் கொண்ட தத்துவமேதையாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபாகரனின் உண்மையான பங்களிப்பை நிராகரிப்பது அறிவுடைமை ஆகாது.
A man who, for reasons of state, possibly sanctioned the persecution of Christians achieved a genuinely Christian depth of humility… “what an affinity for Christianity had this persecutor of the Christians!”. [1]
ஈழப்போர் என்பது தமிழர் வரலாற்றின் மாபெரும் பரிணாமம். அது தனக்கு முந்தைய மற்றும் பண்டைய வரலாற்று, பண்பாட்டு, அறிவுக் கூறுகளை உள்வாங்கியது மட்டுமில்லாமல் புதுமையைப் படைத்தது. ஈழப்போரின் விளைவாக தமிழ்த்தேசியம் பாரிய முன்னேற்றங்களை இன விடுதலை, பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம், போரியல் உத்திகள், தலைமைத்துவம், உலக அரசியல், சமூகம் என பல துறைகளில் கண்டுள்ளது. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரனும் மாவீரர்களும் கட்டிவிட்டனர்[12]. இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. அதை செய்து முடிக்க வேண்டுமானால், அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ நினைத்தால் மட்டுமே முடியும்.
குறிப்பு: அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் போரிடுவது மட்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது.
இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் என்றுமில்லாத பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம். ஒரு தத்துவ மேதையாக அவரைப் பார்த்தால் அவரின் சிந்தனையைத் தெளிவாக உணரலாம்: “எப்பொழுதும் போல நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்“. நாம் நம் கடமையைச் செய்கிறோமா என்பதுதான் ஒவ்வொரு தமிழரும் இந்த மாவீரர் நாளில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான முதற்படி.
- Aurelius, Marcus. Meditations.
- Goldstein, Rebecca. Plato at the Googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
- Top Ten Most Prestigious Medals, https://www.historyandheadlines.com/top-ten-prestigious-medals/
- பரணி கிருஷ்ணரஜனி, நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம், http://eeladhesam.com/?p=5459
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 6
- சு.சேது, பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்
- சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்
- சு.சேது, ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு
- Popper, Karl. The open society and its enemies. Routledge, 2012.