தொடரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்- டெல்லியை முற்றுகையிடத் திட்டம்

533 Views

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட மின்சார மசோதா ஆகியவற்றை  எதிர்த்து, நவம்பர் 26 முதல் டெல்லியில் காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய விவசாய சங்கங்கள் அறிவித்திருந்துள்ளன.

பஞ்சாபிலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள்   டெல்லிக்கு வருவார்கள் என்றும், மூன்று சட்டங்களையும் இரத்து செய்வதற்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, டெல்லியிலேயே இருப்பார்கள் என்றும்  அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்கள்  அறிவித்துள்ளனர்.

மேலும் நவம்பர் 13ம் திகதி நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, மேலும்  பேச்சுவார்த்தை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர், டிசம்பர் 3 ஆம் திகதி அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு விவசாய சங்கங்களை அழைப்பு விடுத்துள்ளார் என்று வேளாண் செயலாளர் சுதன்ஷு பாண்டே  தெரிவித்துள்ளார்.

அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள தர்ஷன் பால்,  தி இந்து நாளிதழுக்கு   இந்த போராட்டம் குறித்துக் கூறுகையில், “பஞ்சாப் விவசாயிகளின் சங்கங்கள், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு எதிரானவை அல்ல. ஆனால் அது இணக்கமான சூழ்நிலையில் நடத்தப்பட வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் சாலை மற்றும் இரயில் மறியல்கள், ராஞ்சியில் ராஜ் பவனை நோக்கி பேரணி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் போன்றவைகளைச் செய்ய உள்ளோம். மேலும், தொழிற்சங்கங்களும் சில சில்லறை வியாபாரிகளின் சங்கங்களும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply