தொடரும் நெருக்கீடுகள் – துரைசாமி நடராஜா

மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர் மீதான நெருக்கீடுகளின் அதிகரித்த தன்மையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்ற ஒரு நிகழ்வாகும். இத்தகைய நிலைமைகளைச் சமாளிப்பதற்கு சிறுபான்மையினரிடையே ஒரு ஐக்கியம் மிக்க சக்தியினைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகியுள்ள போதும், இது கால்வரை இது சாத்தியமாகவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இதனால் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் மழுங்கடிப்பிற்கு உள்ளாகும் நிலையே மேலெழுந்து காணப்படுகின்றது.

இலங்கைக்கு இனவாதம் புதியதல்ல. அது சுதந்திரத்திற்கு முன்னரும் சரி, அல்லது பின்னரும் சரி இனவாதத்தின் கோரப்பிடி சிறுபான்மையினரை அழுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. 1947ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தினர் பெற்றுக் கொண்ட வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியினரின் கண்களை உறுத்திய நிலையில் அது இம்மக்களின் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறித்தெடுக்கப்படுவதற்கு உந்து சக்தியாகி இருந்தது. இதன் தழும்புகள் இன்றும் மறைந்தபாடில்லை என்பதும் யாவரும் அறிந்த ஒரு விடயமேயாகும். 1948 இற்கும் 1988 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதி இம்மக்களின் சோதனைக் காலமாக இருந்தது. பிரசாவுரிமை இல்லாத நிலையில் அரசாங்க உத்தியோகம் ஒன்றிற்கு விண்ணப்பத்தினைக் கூட அனுப்ப முடியாத நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். அதைப் போன்றே வாக்குரிமை இல்லாத நிலை இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மழுங்கடிக்கச் செய்வதாகவே இருந்தது.

அரசியல் பிரதிநிதித்துவம்

13647 1 தொடரும் நெருக்கீடுகள் - துரைசாமி நடராஜா

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது. இதனால் பல பின்தங்கிய சமூகங்கள் மேல் நிலைக்கு வந்திருக்கின்றன என்பதும் உண்மையாகும். எனினும் மலையக சமூகத்தின் வாக்குரிமை இல்லாத நிலையானது இம்மக்களின் அரசியல் எதிர்பார்ப்பு குறித்த கனவினைச் சிதறடித்திருந்தது. இம்மக்களின் பிரதிநிதி என்று சொல்லக் கூடிய வகையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாராளுமன்றத்திற்கு நியமன எம்.பி. யாக தெரிவு செய்யப்பட்டு மலையக மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் பெற்றுக் கொடுத்திருந்தார். கல்வி அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி போன்ற பல துறைகளிலும் கவனம் செலுத்தி, இம்மக்களின் மேம்பாட்டுக்கு வித்திட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக மலையகத்தில் வீறுநடை போட்டு, மலையக மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது. பிற்காலத்தில் ஏற்பட்ட கட்சிப் பெருக்கங்களின் காரணமாக தொழிலாளர்களின் ஒற்றுமை சீர்குலைந்ததோடு இம்மக்களின் உரிமைகளும் கேள்விக் குறியானமை  வேறு விடயமாகும்.

மலையக மக்கள் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன இல்லாது இருந்த நிலையில் இம்மக்களை அரசியல் சக்திகள் ஏறெடுத்துப் பார்க்காத ஒரு நிலையே காணப்பட்டது.  மழைக்குக் கூட லயத்தில் ஒதுங்குவதற்கு சிலர் தயங்கினர் என்று புத்திஜீவிகள் இந்த நிலையினை தனது ஆக்கங்களில் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். எனினும் இந்த நிலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கு காவலனாக இருந்து தோள் கொடுத்து வந்தது. இது ஒரு முன்மாதிரியான செயற்பாடேயாகும். மலையக மக்களின் பிரசாவுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தெடுத்து அம்மக்களை நிர்வாணப்படுத்துவதில் ஆர்வம் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, அதன் கோர எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டது. இதற்குப் பிராயச்சித்தமாக 1988ஆம் ஆண்டில் மீண்டும் பிரசாவுரிமையையும், வாக்குரிமையையும் இம்மக்களுக்கு வழங்கி இக்கட்சி தனது கையை சுத்தப்படுத்திக் கொண்டது. இருந்தபோதும், இதனால் ஏற்பட்ட கறைகள் இன்னும் மலையக மக்களுக்கு நீங்கியதாக இல்லை.

1956ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களை மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்களுக்கும் பாதக விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தி இருந்தது. அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றுக் கொள்வதில் தமிழர்களுக்கு இருந்த வாய்ப்புக் கதவு இதனால் மூடப்பட்டது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளும் பறிபோவதற்கு தனிச் சிங்களச் சட்டம் வழிவகுத்தது என்பதனை மறுப்பதற்கில்லை. 1972ஆம் ஆண்டு காணிச் சுவீகரிப்பு சட்டம், 1983ஆம் ஆண்டு வன்செயல் என்று இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவொடுக்கல் செயற்பாடுகளை பட்டியல்ப்படுத்திக் கொண்டே செல்லலாம். இவற்றினால் மலையக சமூகத்தின் தழும்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இனவாத சிந்தனைகளால் வேரறுக்கப்பட்ட மலையக சமூகத்தின் வரலாறு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இச்சமூகத்தினர் உட்பட சிறுபான்மைச் சமூகத்தினர் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது கேள்விக்குறியான விடயமாகும். மலையக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், இவர்கள் ஒருவருக்கொருவர் சேறு பூசிக் கொள்வது வழக்கமாக உள்ளது. கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளும் வலுவடைந்து வருகின்றன. வாரிசுக் கலாசாரத்தை மையப்படுத்தி மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள்  செயற்பட்டு வருகின்ற நிலையில், சமூக நலனை சிந்தித்து செயற்படாத ஒரு நிலையே காணப்படுகின்றது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சவால்கள்

punduloya2 தொடரும் நெருக்கீடுகள் - துரைசாமி நடராஜா

மலையக மக்கள் பல்வேறு சவால்களையும் இப்போது சந்தித்து வருகின்றனர். வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தொழில் வாய்ப்பு, சமூக வாழ்க்கை என்று எந்தத் துறையினை எடுத்துக் கொண்டாலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. தொழிலாளர்களின் லயத்து வாழ்க்கை இம்மக்களின் பின்னடைவிற்கு அதிகமாக வலுச்சேர்க்கின்ற நிலையில், தனிவீட்டுக் கலாசாரத்தினை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டின் தகவல் ஒன்றின்படி மலையகப்  பெருந்தோட்டப் பகுதிகளில் இரட்டை லயன் காம்பராக்கள் 104556   அலகுகள் காணப்பட்டன. ஓற்றை லயன் காம்பரா அலகுகள் 108825 ஆகவும், குடிசைகள் தற்காலிக குடில்கள் 22410 அலகுகளாகவும், தற்காலிக வீடுகள் 35100 அலகுகளாகவும் காணப்பட்டன. இம்மக்களின் வீட்டுத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. குடிசைகள் மற்றும் தற்காலிக குடில்களில் பல்வேறு சிக்கல்களுக்கும் மத்தியில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இக்கட்டான நிலைமையே காணப்படுகின்றது. இவற்றில் இருந்து மேலெழும்புவதற்கு ஐக்கியம் மிக்க செயற்பாடுகள் அவசியமாகின்றன. எனினும் இது சாத்தியமாவதாக இல்லை.

unnamed 5 தொடரும் நெருக்கீடுகள் - துரைசாமி நடராஜா

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பல்வேறு இழுபறிகளுக்கும் மத்தியில் இப்போது சாத்தியமாகியுள்ள போதும், வேலை நாட்கள் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் இழுபறியான ஒரு நிலையே காணப்படுகின்றது. சம்பள நிர்ணய சபை ஆயிரம் ரூபாவுக்கு வித்திட்டுள்ள நிலையிலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஏனைய சலுகைகள் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலும் கூட்டு ஒப்பந்தம் இனியும் சாத்தியமாகுமா? என்பது கேள்விக் குறியேயாகும். கூட்டு ஒப்பந்தம் சாத்தியப்படா விட்டால், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் பறிபோகும் அபாய நிலை ஏற்படும். இந்த இழுபறி நிலைக்கு மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின் ஐக்கியமற்ற செயற்பாடுகளே  உந்து சக்தியாக அமைந்துள்ளன. இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஒரு சமூகம் தாழ்வடைவதற்கு வலுச் சேர்த்திருக்கின்றது. அதிகரித்த தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் நெருக்கமானது அடுத்த கட்ட முன்னோக்கிய நகர்விற்கு முட்டுக் கட்டையாகி இருக்கின்றது. பல்வேறு வளர்ச்சிப் படிகளையும் எட்டவுள்ள ஒரு சமூகத்திற்கு ஐக்கியமின்மை என்பது மிகப்பெரும் சவாலாக அமையும் என்பதே உண்மையாகும். இது விரும்பத்தக்கதல்ல.

இனவாத சிந்தனைகள், வேரறுப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில், மலையக சமூகம் தன்னைச் சார்ந்தவர்களின் பிளவு நிலையின் காரணமாக மென்மேலும் வீழ்ச்சி நிலையை நோக்கிச் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின் முரண்பாடான செயற்பாடுகள் தாமே தமக்கு குழி தோண்டிக் கொள்ளும் ஒரு நிலைக்கு ஒப்பானதாகும். இந்நிலை களையப்பட்டு ஐக்கியத்திற்கு வித்திடப்படுதல் வேண்டும். இவற்றோடு புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயம் இப்போது முக்கிய பேசுபொருளாகி இருக்கின்றது. புதிய அரசியலமைப்பின் ஊடாக விசேட உதவிகளை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் காய் நகர்த்தல்கள் இடம்பெற வேண்டும். இதுபோன்று பல விடயங்களையும் சாதகமாக்கிக் கொள்ள புரிந்துணர்வுடன் கை கோர்ப்பதே அவசியமாகும். சிறுபான்மைச் சக்திகள் தமக்கிடையே வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாது இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.