தை பிறந்து விட்டது வழி பிறக்குமா?

தை பிறந்து விட்டது. புதிய ஓராண்டு காலத்துள் ஈழத்தமிழினம் அடியெடுத்து வைத்துள்ளது. பொங்கலோ பொங்கல் என ஆரவாரித்து, எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியிலும் புதிய காலத்துள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் நம்பிக்கையுடன் ஈழத்தமிழ் மக்கள் வாழப்புறப்பட்டு விட்டனர்.

“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் – மூண்டிருக்கும் இந்நாள் நிகழ்ச்சியும் – நாளை நாடுறு பெற்றியும் – தேர்கிலார் பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்” என்ற பாரதி காலத்து கவித்துவப் பிரகடனத்தில் பெரிதான மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் தமிழர்களின் கல்வி தொடர்கிறது. இந்தப் போக்கே எத்தனை தை பிறந்தாலும் வழி பிறக்காத இனமாக ஈழத்தமிழினத்தை மாற்றி விடுகிறது.

ஈழத்தமிழனின் சிந்தனையை சாதி மத பிரதேச உணர்வுகளால் திசை திருப்பும் அவனுடைய வாழ்க்கை முறைகளில் இருந்து அவன் விடுபடுவதாக இல்லை. நாளாந்த பொதுவாழ்வில் அறிவியல் அணுகுமுறையுடன் சமய இலக்கிய வரலாற்று மீள்பார்வைகளை தொடங்கி தொன்மையின் உண்மைகளைத் தொடர்ச்சியில் காணும் தன்மையை உருவாக்கினாலே அடிமைச் சிந்தனையில் இருந்து ஈழத்தமிழினம் விடுபடும். இது மனித உரிமைப் பேணலுக்கான அடித்தளமாகவும் உள்ளது.

சிந்தனைத் தெளிவுள்ள மனிதனால்தான் தான் சுதந்திரமானவன் என்ற உறுதியுடன் எந்த அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகச் செயற்பட முடியும்.
மேலும் தமிழர்களுடைய தாயகத்தில் தமிழர்களாகிய அவர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதன் வழி தங்களுடைய பாராளமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தைச் சிங்கள பௌத்த மேலாண்மைக்குள் வளர்த்தெடுத்துச் இனத்துவச் சிறுபான்மையினர்களால் எதுவுமே செய்ய முடியாத சட்டங்களைக் கொண்டு வருவது என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் 1948 முதலான தொடர் அரசியல் செயற்திட்டம்.

இதில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையை ஈட்டிட வைக்கும் முயற்சிகளில்; இன்றைய அரசு மிக வேகமாக ஏப்ரல் வரை செயற்படும் காலமாகத் தமிழர்களின் இப்புத்தாண்டின் முதல் நான்கு மாதங்கள் தொடரப்போகின்றது.

இந்நேரத்தில் தமிழர்கள் தங்கள் சனநாயகமாம் வாக்குப் பலத்தை உறுதிப்படுத்தும் பொது வேலைத் திட்டம் ஒன்று கண்டறியப்பட்டு செயற்பட்டாலே ஈழத்தமிழர்களின் மிகமிக மெலிதான சனநாயகக் குரலையாவது தக்க வைத்துக்கொள்ளலாம். இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் ஒருங்கிணைப்பு ஒன்று, சனநாயக ரீதியாக இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வாக்குப் பலத்தை ஒருங்கிணைக்கவும் ஒருமைப்படுத்தவும் உடன் தேவையாகிறது.

அதே வேளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும். உலகத் தமிழர்களாக அவரவர் வாழும் நாடுகளின் குடியுரிமையுள்ள அந்த அந்த நாட்டின் இனத்துவச் சிறுபான்மையினராக அரசியல் பலம் பெற்றுள்ள புலம்பெயர் தமிழர்களும், தங்களின் நிதிவளமும் மதி வளமும் ஈழத் தமிழர்களுக்கான வறுமையை நீக்கும் சமுக மூலதனமாகவும் அவர்களின் அறியாமைகளை நீக்கும் செயற்திட்டங்களாகவும், சனநாயக வழிகளில் அவர்களின் மனித உரிமைகைளயும் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையும் வென்றெடுக்கும் சக்தியளித்தலாக மாற்றிட உறுதி பூணுதல் வேண்டும்.

இதற்கு உலகத் தமிழர்களாகத் திகழும் புலம்பெயர் தமிழர்கள் தங்களிடை உள்ள “மாறுபாடுகளின் வேறுபாடுகளின் உண்மைத் தன்மைகளை ஏற்று மதித்த நிலையில்” பொதுவேலைத் திட்டங்கள் மூலம் ஒன்றிணைந்து செயற்படல் மிகமிக அவசியமாகிறது.

இவற்றையெல்லாம் தனிமனித நிலையிலும் பொதுமனித நிலையிலும் எந்த அளவுக்கு விரைவாகவும் உறுதியாகவும் தமிழினம் வடிவமைத்துக் கொள்கிறதோ அந்த அளவுக்குப் பிறந்த தை நிச்சயமாக பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டும்.