தேர்தல் நெருங்கும் வேளையில் விடுதலைப்புலிகளை அழித்தது யார் என்பதில் சிங்கள வேட்பாளர்களிடம் போட்டி

569 Views

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்தது அலிசாகிர் மௌலானாவும், எமது பிரதர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் என அமைச்சர் பி.ஹரிஸன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆயிரக் கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் கே.டபிள்யூ.தேவநாயகம் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளின் பின்னர் தற்போதைய அரசாங்க காலத்தின் பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீங்கள் முப்பது வருடகால போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் போரில் ஈடுபட்டவர்கள் எதனையும் அடைந்து கொள்ளவுமில்லை.

மக்களுக்கும் எந்தப் பயனும் கிடைக்கவுமில்லை. இந்த இடத்திலே நண்பர் அலிசாகிர் மௌலானாவை நினைவுகூர வேண்டியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற இயல்பு நிலைக்காக அவர் பாரிய பங்காற்றியுள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ததையடுத்து ஆயிரக் கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையை ஏற்படுத்த எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் தலைமை வகித்தார்.

அவரது தூர நோக்கான சிந்தனை கொண்ட நடவடிக்கையில் தான் போரினை விரைவாக முடிக்கக் கூடியதாக அமைந்தது.

முப்பது வருடகாலப் போரினால் நாம் எமது இளைஞர்களை இழந்தோம். அபிவிருத்திகளை இழந்தோம். அபிவிருத்தியில் மூன்று தசாப்த காலம் பின்னடைவில் உள்ளோம். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு அபிவிருத்திப் பணிகள் மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் நான்கு ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்திப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply