பிக்குகளின் கட்சியான ‘அப்பே ஜனபலா பக்ஷய’வின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களையடுத்து, அதற்கான தேசியப்பட்டியல் ஆசனத்தை ரத்துச் செய்யுமாறு ரமன்ன மகா நிக்காயாவின் நிறைவேற்றுக்குழு தேர்தல் ஆணைக்குழுவிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத;த யாருக்கு வழங்குவது என்பதில் மூன்று புத்த பிக்குகள் தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் செயலாளர் தலைமறைவாகியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் புத்த பிக்குகளான கட்சித் தலைவர்கள் மிகவும் அநாகரீகமாகவும், பௌத்த வழிமுறைகளுக்கு விரோதமாகவும் தேசியப்பட்டியலைப் பெறுவதற்காக மோதல்களில் ஈடுபட்டுவருவதால், அந்தத் தேசியப்பட்டியல் ஆசனத்தை ரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசியப்பிரியவை ராமன்ய நிக்காயாவின் பிரதம சங்க நாயக்கரும், அதன் நிறைவேற்றுக்குழுவும் கேட்டுக்கொண்டிருப்பதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வண. அத்துரலிய ரத்ன தேரர், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் அபே ஜனபல பக்ஷய கட்சியின் இணைத் தலைவர்களாக உள்ளனர். வண வெடிமக விமலதிஸ்ஸ தேரர் இதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்த மூவருமே தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.