தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.
சுரேந்திரன் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?
தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.
மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.
தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?
ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.