துயிலும் இல்ல சிரமதானத்தில் ஈடுபடுவோருக்கு உதவினால் சூடு – புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

403 Views

மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவோருக்கு தண்ணீரோ, தேநீரோ வழங்கவேண்டாம். அவ்வாறு வழங்கினால் சுடுவோம் என்று இராணுவப் புலனாய்வு என்று தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் எச்சரித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதையொட்டி தமிழர் தாயகம் எங்கும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் அருகேயுள்ள வீடுகளுக்குச் சென்றசிலர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர். இவ்வாறு அறிமுகம் செய்தவர்கள் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்வோருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது. அவர்களுக்கு தண்ணீரோ, தேநீரோ கொடுக்கக்கூடாது. அவ்வாறு மீறிக் கொடுத்தால் உங்களைச் சுடுவோம் என்று எச்சரித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவீரர்களை அஞ்சலிக்கும் காணிக்குள் எவரும் நுழையாதவாறு வேலி அடைக்குமாறு புலம்பெயர் நாடு ஒன்றில் வசிக்கும் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்து நேற்றைய தினமே அந்த காணியில் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply