தீர்க்கதரிசனமற்ற தமிழ் தலைவர்கள், இந்திய வம்சாவளி தமிழரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினார்கள்-மனோ கணேசன்

530 Views

இந்தியாவில் வாழும் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும்…இந்த நொடியில் என் மனதில் ….

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்கள் தோற்று போனமை அல்லது எதிர்பார்த்த இலக்கை அடையாமை ஆகியவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும், முதற்காரணம் என நான் ஆய்ந்து அறிந்தது, தமிழர்களின் ஜனத்தொகைதான்.

இந்நாட்டில் தமிழர் ஜனத்தொகை குறைய, குறைய அவர்களது அரசியல் பலம் குறைகிறது. அரசியல் பலம் குறைய, குறைய அவர்களது போராட்டங்கள் தோல்வியடைகின்றன.

இன போராட்டங்களை தாக்கு (WITHSTAND) பிடிக்குமளவுக்கு ஒரு இனத்தின் ஜனத்தொகை இல்லாவிட்டால், அவ்வினத்தின் போராட்ட இலக்குகள் வெறும் கனவு மட்டும்தான்.

1948ல் இருந்த இந்நாட்டு அனைத்து ஜனத்தொகை இன, மத விகிதாசாரம் இன்று மாறி சிங்கள மக்கள் 75 % அடைந்து விட்டார்கள். பெளத்தர்களின் விகிதாசாரமும் கூடி விட்டது. தமிழர் விகிதாசாரம் குறைந்து விட்டது.

ஆரம்பத்தில் இங்கு வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழரின் ஜனத்தொகை, பூர்வீக தமிழரின் ஜனத்தொகையை விட அதிகமாக இருந்தது. அதைக்கண்டு பதட்டமடைந்த சில தீர்க்கதரிசனம் இல்லாத சுயமுனைப்பு ஆதிக்க மனோபாவம் மட்டுமே கொண்ட இலங்கை தமிழ் தலைவர்கள், இந்திய வம்சாவளி தமிழரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினார்கள்.

தந்தை எஸ்ஜேவி செல்வாவுக்கு மட்டுமே தீர்க்கதரிசனம் இருந்தது. ஆனால், அவர் விழித்து எழுந்து கட்சி அமைத்து எழுவதற்குள் இந்திய வம்சாவளி தமிழரை வெளியேற்றும் காரியம் வெகு தூரம் போய் விட்டது.

தமிழரின் ஜனத்தொகை குறைவுக்கு இனமாற்றம், வெளியேற்றம் ஆகியவையே பெரும் காரணங்களாக அமைந்து விட்டன.

இவற்றில் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரக்கூடிய நிலையில் இருப்பது இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள்தான்.

இவர்கள் சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்ததால் வெளியேற்றப்பட்ட தமிழர் அல்ல. 1983 கலவர காலத்துக்கு பின் வெளியேறிய இலங்கை தமிழ் பிரஜைகள்.

மேற்கு நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களை “மீண்டும் வாருங்கள்” என்று சொன்னால் சண்டைக்கு வருகிறார்கள். “யாரை நம்பி நாம் அங்கே வருவது, வந்தால் எமது உயிருக்கு யார் உத்தரவாதம் தருவது?” என்று கேட்கிறார்கள். “இங்கு இன்று இலங்கையில் வாழும் தமிழர் நாங்கள் யார் உத்தரவாதம் தந்து வாழ்கிறோம்?” என திருப்பி கேட்டால் பதில் இல்லை.

“முழுமையாக சகஜ நிலைமைக்கு நாடு திரும்பவில்லை. என்றாலும் கூட நிலைமை முன்னனமையை போல் இல்லை, இன்று நிலைமை எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆகவே வாருங்கள்” என்று சொன்னாலும் கேட்கும் நிலைமையில் பெரும்பாலான புலம் பெயர்ந்த மேற்கு நாட்டு தமிழர் இல்லை. ஆகவே இது பற்றி நான் இப்போது பேசுவதில்லை.

சிங்கள மக்களும் வெளிநாட்டை நோக்கி சென்றாலும், தமிழ் மத்தியிலேயே இந்த விகிதாசாரம் அதிகம்.

புலம் பெயர்ந்த மேற்கு நாட்டு தமிழர், இந்நாட்டில் இன்னமும் எஞ்சி இருக்கும் தம் உறவுகளையும் தாம் இன்று வாழும் நாடுகளுக்கு அழைத்து கொள்ளாமல் இருந்தாலே போதும் என்ற நிலைமை உருவாகி விட்டது.

இதற்கிடையில் குறிப்பாக, வடக்கில் வாழும் இளம் தமிழ் பெண்களை வெளிநாட்டில் வாழும் தமிழ் ஆண்களுக்கு திருமணம் செய்வித்து, இவர்களையும் குடும்பம் குடும்பமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை கட்டுப்பாடின்றி நடக்கிறது.

இதுபற்றி வடக்கின் தமிழ் தலைவர்களும் பெரிதும் பேசுவதில்லை. தமிழ் தலைவர்களின் குடும்ப உறவினர்கள் கூட எல்லோரும், இந்நாட்டில் இல்லை. மேற்கு நாடுகளில் வாழ்ந்து இடைக்கிடை வந்து போகிறார்கள் என அறிகிறேன். அப்புறம் என்ன..?

ஆகவேதான் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை கொடுக்கவில்லை என்ற கோப கூச்சலுக்குள் நான் இணையவில்லை. வேண்டுமானால் அவர்களுக்கு இலங்கை-இந்திய இரட்டை குடியுரிமை கொடுங்கள் என்றுதான் நான் இந்திய அரசை நோக்கி கோரிக்கை விடுக்கிறேன்.

என்றாவது ஒருநாள் அவர்கள் இலங்கை தாய்நாட்டுக்கு திரும்பி வரவேண்டும் என விரும்புகிறேன். வந்து இங்கு எமது ஜனநாயக பலத்தை கூட்ட வேண்டும்.

இவற்றை உணராமல், இங்கும் சிலர் இந்திய அரசை திட்டி தீர்த்து “குடியுரிமை கொடு” என கூச்சல் இடுவதை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் வாழும் இலங்கை தமிழருக்கு குடியுரிமை கொடு என்ற கோஷம் எனக்கு உடன்பாடானதல்ல.

Leave a Reply