தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தற்போது தடை விதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வை நடத்தக் கோரி இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு மனு அளிக்க சென்ற போது இயக்குநரும், நடிகருமான கௌதமன் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
32 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை இந்த ஆண்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான கௌதமன் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மனு கையளிக்கச் சென்றார். பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் சென்ற அவர், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா பாதுகாப்புக் கருதி தூதரக வாசலில் வந்து மனுவை கையேற்பார்கள் என்று காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மனுவை தூதரக அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர்.
இதனை எதிர்த்து கௌதமன் அவர்கள் அந்த இடத்தில் நின்று உரையாற்றினார். அவர் தனது உரையில், “தமிழ்நாட்டு தமிழர்களின் வரிப்பணத்தில் எங்களின் நிலத்தில் இருக்கும் தூதரகத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் தமிழர் உரிமையை கேட்க முனைந்த எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. உலகத்தில் ஒன்றரைக்கோடி சிங்களவர்கள் தான் உள்ளார்கள். இலங்கை மண்ணை தமிழன் ஆண்டான் என்பது தான் வரலாறு. கோத்தபாயா அரசு இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரை கட்டுகிறான். கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
இறுதி யுத்தத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை சிங்களவன் கொன்று விட்டான். இதற்கான பண, படைப் பலத்தை இந்திய அரசு வழங்கியது. தற்போது தமிழக அரசு, தமிழக காவல்துறை சிங்கள அரசிற்கு ஆதரவாக இருக்கின்றது. தமிழீழத்தில் சிங்கள அரசு தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறித்தது போல, இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டிலுள்ள மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்கிறது. இலங்கை அரசு சீனாவுடன் உறவு வைத்துள்ளது. இந்தியாவை சீனா தாக்கும் போது தான் தமிழீழத்தை தொலைத்தது எவ்வளவு தவறு? விடுதலைப் புலிகளை அழித்தது எவ்வளவு தவறு? பிரபாகரன் இந்தியாவிற்கு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தார் என்பது இந்தியாவிற்குத் தெரியும்.
8கோடி தமிழன் தமிழ்நாட்டில் உள்ளான். 12கோடி தமிழன் உலகத்தில் உள்ளான். ஒன்றரைக்கோடி சிங்களவன் தான் உலகில் உள்ளான். எங்கள் உறவு முக்கியமா? அல்லது சிங்களவன் உறவு முக்கியமா என்பதை இந்திய அரசு சிந்திக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழீழ தமிழ் மக்கள் திலீபன் நினைவு நிகழ்வை நடத்துங்கள். நாங்களும் தமிழகத்தில் நடத்துவோம்.
ஒரு காலம் வரும். இயற்கை கை நீட்டும். அப்போது தமிழீழத்தை எமது இளைய தலைமுறை பெற்றெடுக்கும். ஜல்லிக்கட்டிற்காக உலகத் தமிழினம் எழுந்து போராடியது. தமிழீழத்தைப் போல தமிழ்நாட்டின் விடுதலையும் பறிக்கப்பட தமிழினம் ஆழிப்பேரலை போல எழும். எம்மை அடக்க நினைப்பவர்களை விரட்டும் காலம் வரும்” என்று கூறினார்.
சிறந்த தமிழ் உணர்வாளராக அறியப்பட்ட இவர், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர். தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.