திரையரங்குகளுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்க – தமிழக அரசிற்கு இந்திய உள்துறை  உத்தரவு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க, கடந்த 4ம் திகதி பிறப்பித்த உத்தரவை உடனே இரத்து செய்யும்படி  தமிழக அரசுக்கு இந்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் 2020ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுமாறும் இந்திய உள்துறை  அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி கடந்த 5ம் திகதி எழுதிய கடிதத்தில், இந்திய உள்துறை கடைசியாக கடந்த டிசம்பர் 28ம் திகதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நடிகர் விஜய்யும் அவர் நடித்து வரும் மாஸ்டர் திரைப்பட குழுவினரும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா திரிபு தீவிரமாகி வருவதால், அங்கு முழு பொது முடக்கத்தை அந்த நாட்டு அரசு சமீபத்தில் அமுல்படுத்தியது.

இதற்கிடையே, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுமார் 20 பேருக்கு புதிய வகை கொரோனா திரிபுவின் தாக்கம் இருப்பது தெரிய வந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதில், தமிழகத்துக்கு வந்த ஒருவருக்கும் புதிய திரிபுவின் தாக்கம் இருப்பது தெரிய வந்ததால, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இத்தகைய சூழலில், கொரோனா பரவலுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதித்திருப்பதாக, பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.