திருமலை துறைமுகத்திற்கு வந்த ஜப்பான் போர்க் கப்பல்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜப்பான் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான “டிடி 102 ஹருசாம்“ என்ற கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் 151 மீற்றர் நீளமும், 4550 தொன் நிறையும் கொண்டது. அத்துடன் இக்கப்பலில் 165 அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

இங்கு வருகை தந்த கடற்படைக் கப்பலை, இலங்கைக் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றதுடன், கப்பலின் தளபதி ஒஹ்சிமா டேருஹிசா இலங்கைக் கடற்படை தளபதியுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாட்டு கடற்படையினதும் கூட்டு ரோந்து மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த துறைமுகத்திற்கான பயணத்தை இந்தப் போர்க் கப்பல் ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.