திருச்சி அரசு மருத்துவமனையில் ஈழத் தமிழர்கள் உட்பட 46 பேர் விடுதலை கோரி போராட்டம்

திருச்சி மத்திய சிறையில், ஈழத் தமிழர்கள் 38பேர் உட்பட 46பேர் கடந்த 07ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதேவேளை, இவர்களில் 20பேர் கடந்த 08ஆம் திகதி நஞ்ஞருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் இவர்கள் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வந்திருந்தன.

இந்தக் கைதிகள் நேற்று(09) திருச்சி அரச மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களை மீண்டும் ‘சிறப்பு முகாமிற்கு’ அழைத்துச் செல்லவிருந்த நிலையிலேயே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை விடுதலை செய்யும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறியே 15 நிமிடங்கள்  போராட்டம் மேற்கொண்டனர்.  பின்னர் பொலிஸ் வாகனத்தில் ஏறி சிறப்பு முகாமிற்கு சென்றனர்.

‘சிறப்பு முகாமிற்கு’ சென்று மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து திருச்சி கோட்டாட்சியர், அகதிகளுக்கான தனித்துறை ஆட்சியர், கியூ பிரிவு  பொலிசார் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் தொடர்பாக 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.