திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம்

261 Views

ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம்,  திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன.

திருக்கோணேஸ்வரம்,  இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது.  மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால், அது திரிகோணமலை என்று இந்த நகரம் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் கோணேஸ்வரம் ஆதலால், திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது. இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனித வழிபாட்டுத் தலமாக இருந்து வந்ததைப் புராண, இதிகாச வரலாறுகள் கூறுகின்றன. எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தினாலே இந் நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது.

IMG 9191 1 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா...? -	ஹஸ்பர் ஏ ஹலீம்

போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கால்தடம் பதித்தனர். போர்த்துக்கேயரின் வருகையின் பொழுது திருகோணமலை மாவட்டம் நான்கு பிரிவுகளாக இருந்தது.  அவை கொட்டியாரம்பற்று,  தம்பலகாமம்பற்று,  கட்டுக்குளப்பற்று, திருகோணமலை நகர் ஆகிய நான்கு பிரிவுகளாகும். இவற்றை தமிழ் வன்னிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்குள் திருகோணமலை உட்பட்டிருந்தது. ஆனாலும் கொட்டியாரம்பற்று காலத்திற்கு காலம் கண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் இருந்தது. 1551 ஆம் ஆண்டில் சங்கிலியனின் ஆட்சி அஸ்தமிக்கத் தொடங்கிய பொழுது கண்டி எழுச்சி பெற்றது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய போர்த்துக்கேயரை அகற்றுவதற்காக கண்டிய மன்னன் செனரத் விடா முயற்சி மேற்கொண்டான். அதற்காக ஒல்லாந்தருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். இச் சூழ்நிலையில் ஒல்லாந்தர் திருகோணமலையை கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு போர்த்துக்கேயர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கோட்டை ஒன்றை கட்டுவதற்கு போர்த்து க்கேய தளபதி கொன்ஸரன்ரைன் டி சா, கோணேஸ்வர ஆலயம் அமைந்திருந்த மலைப் பகுதியை தெரிவு செய்தான் என்பது வரலாறு.

இந்த நிலையில் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் புராதன வரலாற்றுச் சாசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. காலத்தால் இன்றும் பேசப்படும் ஒரு விடயத்தை பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சடையவர் மகன் வீரபாண்டியன் இலங்கை அரசனான முதலாம் புவனேகபாகுவை அடக்கித், திருகோணமலையில் தன் கயற்கொடியைப் பதின் மூன்றாம் நூற்றாண்டிற் பொறித்தான் என்று தென்னிந்தியக் கோயிற் சாசனங்களிலொன்றான குடுமியாமலைச் சாசனம் கூறுகின்றது.

FB IMG 1479053264547 1 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா...? -	ஹஸ்பர் ஏ ஹலீம்

இவ் வினைக்கயல் மீன்கள் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலின் இரு மருங்கிலும் இப்பொழுதும் காணப்படுகின்றன. அத்துடன் அன்று ஆயிரங்கால் ஆலயம் என்று அழைக்கப்பட்ட கோணநாதர் கோயிற் தூண் ஒன்றிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் சிறு பகுதியொன்றை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள மீன் சின்னத்திற்கு கீழே இன்றும் காணலாம். இக் கல்வெட்டானது குளக்கோட்ட மன்னன் காலத்து தீர்க்கதரிசன கல்வெட்டாகும்.

“முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியைப்

பின்னே பறங்கி பிரிக்கவே- மன்னாகேள்

பூனைக்கண், செங்கன், புகைக்கண்ணன். ஆண்ட பின்

தானே வடுகாய் விடும்.’’

என்று அக் கல்வெட்டில் காணப்படுகின்றது. எனவே திருகோணமலையின் வரலாற்றுடனும், ஈழத்தில் தமிழரின் அடையாளச் சின்னமாகவும் இவ் விடயம் திகழ்வதுடன், திருக்கோணேஸ்வரத்தின் வரலாறுகளை விபரிப்பதாகவும் காணப்படும் இச் சாசனங்களின் இன்றைய நிலை பற்றி பார்க்கின்ற போது, மிகவும் கவலை அளிக்கின்றது.

IMG 9193 1 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா...? -	ஹஸ்பர் ஏ ஹலீம்

வீதிகளுக்கு பூசப்படும் வர்ணங்கள் இச்சாசனக்கல் மீது பூசப்பட்டிருப்பதால், சாசனங்களின் தொன்மை சிதைக்கப்பட்டு இருப்பதுடன், அதன் சிறப்பும், அதன் அழகும் அழிக்கப்பட்டிருக்கின்றது. இச்சாசனம் அமைந்துள்ள பிரட்ரிக் கோட்டை வாசலின் ஊடாக தினமும் வாகனங்கள் பயணிப்பதால், அதன் அதிர்வுகளாலும், வாகன புகைகளினாலும் சாசனங்கள் சேதம் ஆவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உண்டு.

IMG 9197 1 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா...? -	ஹஸ்பர் ஏ ஹலீம்

எனவே இச்சாசனங்களை பாதுகாக்க திருக்கோணேஸ்வரத்தின் ஆலய பரிபாலன சபையினரும், திருகோணமலை மண்ணின் தமிழ் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும், இவ்விடயத்திலாவது இவர்கள் கவனம் எடுப்பார்களா……?

Leave a Reply