தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு  நாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்  இன்று 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில்  காவல்துறை நேற்று முன் தினம் (13.09.2024) வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று கட்டளையிட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 5 அம்சக்கோரிக்கை…..

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.