தாய்லாந்தில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை

தாய்லாந்து  அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள்  கொண்டு வரக் கோரி, மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில்  33 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து அறவழியில் போராட்டங்களை நடத்தி வருகிறது.

மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து காவல்துறையினர் போராட்டக் குழுக்களின் தலைவர்களை கைது செய்து அவர்கள் மீது ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனப்படும் முடியாட்சி அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழு தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் உள்ள அரண்மனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்து விடாத வண்ணம் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.  ஆனால் போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளை தாண்டி செல்ல முற்பட்டதால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில்   13 காவல்துறையினர் உட்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதில் 2 பத்திரிகையாளர்களும் அடங்குவர். மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக 30-க்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.