தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் அரசு -இந்திரகுமார் பிரசன்னா

159 Views

மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் விடயங்களை மத்திய அரசாங்கம் துரிதமாக செயற்படுத்துகின்றது. அதிலும் மாகாணசபைக்குரிய பாடசாலைகள், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல் என்ற பெயரில் மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடான 13வது திருத்தச் சட்டம். இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டின் அரசாங்கங்கள் கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் இந்தியாவின் உயர்ஸ்தானிகர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்த போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு பூரணமாக ஒத்துழைப்போம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனாலும், இந்தியா இந்த விடயத்தைச் சொல்லிக் கொண்டு மாத்திரம் இல்லாம் முழுமையாகவும், விரைவாகவும் கையாள வேண்டும்.

தற்போதை நிலையில் மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் விடயங்களை மத்திய அரசாங்கம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அதிலும் மாகாணசபைக்குரிய பாடசாலைகள், வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாகாணத்திற்குரிய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குதல் என்ற பெயரிலும், வைத்தியசாலைகள் தரமுயர்த்தல் என்ற பெயரிலும் மத்திய அரசின் கீழ் கையகப்படுத்தி அவற்றின் மீதுள்ள மாகாண அதிகாரங்களைக் குறைப்பதை விட அவற்றுக்கான நிதி ஒதுக்கங்களை அதகரித்து அவற்றினை அபிவிருத்தி செய்து மாகாணசபைகளின் கீழேயே தரமுள்ளனவாக இயங்கச் செய்ய முடியும். ஆனால் அரசாங்கம் அவற்றைச் செய்யாமல் அபிவிருத்தி என்ற மாய வலையின் மூலம் மாகாண அதிகாரங்களைக் குறைக்கவே எண்ணுகின்றது.

எனவே இந்திய உட்பட சர்வதேச நாடுகள் இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அழுல்ப்படுத்துவதற்காக தங்கள் கொள்கை வகுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தி சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் மாகாணசபைகளை நடத்தி அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply