தரமற்ற சிறீலங்கா வான்படை விமானங்கள் – பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து

கடந்த வெள்ளிக்கிழமை (03) சிறீலங்காவின் கப்புத்தளை பகுதியில் சிறீலங்கான வான்படையின் வை-12 விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவமானது சிறீலங்கா வான்படை மற்றும் தனியார் வானூர்தி சேவைகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும் என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கெர்பியன் வை-12 மற்றும் சியான் எம்.ஏ-60 ரக விமானங்களை சிறீலங்கா வான்படையினர் பயன்படுத்தும் போதும், அவற்றை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளாது பொதுமக்களுக்கான சேவைகளுக்கும் பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ந்து நெருங்கிய விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்துள்ளதாக சிறீலங்கா வான்படை தெரிவித்தாலும், அது பறப்பதற்கு தகுதியற்ற விமானம் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

2015 ஆம் ஆண்டே இந்த விமானங்களின் பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் கேள்விகளை எழுப்பிய போதும் சிறீலங்கா அரசும் அதன் வான்படையும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா வான்படையினரிடம் தற்போது இரண்டு வை-12 விமானங்கள் உள்ளன. எனினும் அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதன் மூலம் வருமானத்தை பெறுவதற்காக Helitours என்ற நிறுவனத்தின் இணையத்தளத்தின் மூலம் தற்போதும் விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பலாலி, திருமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளுக்கு சேவைகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனத்தில் மக்கள் தற்போதும் ஆசனங்களைப் பதிவுசெய்து வருவது மிகவும் கவலை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா தயாரிப்பான கெர்பியன் வை-12 விமானம் மற்றும் சியான் எம்.ஏ-60 ஆகிய விமானங்களுக்கு Certificates of Airworthiness (COA) என்னும் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.