தமிழ்க் கட்சிகளின் ‘முடிவு’

339 Views

தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல், அன்றாட  பிரச்சினைகளை உள்ளடக்கிய 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றைத் தயாரித்த, தமிழ் கட்சிகள் இப்போது அதனை அப்படியே போட்டுவிட்டு – தனித்தனியாக செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவுடன் இந்த ஆவணத்தை முன்வைத்து 5 தமிழ் கட்சிகள் இணைந்தபோது, உற்சாகமடைந்த தமிழ் மக்கள் இப்போது மீண்டும் நம்பிக்கை இழந்து போயுள்ளனர். தமிழ் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

கோரிக்கைகளில் இணைந்த தமிழ் கட்சிகள், தனித்தனியான நிகழ்ச்சி நிரல்களை வைத்துக்கொண்டு தான் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களா என்ற கேள்வி இப்போது எழுகின்றது. தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சீற்றமடையச் செய்திருக்கின்றது. “பல்கலைக்கழக மாணவர்களை மட்டுமன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் இந்த தமிழ் அரசியல் கட்சிகள் ஏமாற்றி விட்டன “என மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆதங்கத்துடன் கூறியிருக்கின்றார்கள்.

“தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காகவும், பிரதான பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை தயாரித்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை – தங்களுடைய அரசியலுக்காக முந்திக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பி அடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாளாக்கி உள்ளனர்” என தமிழ் கட்சிகள் மீது அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை. அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாடு தமிழ் கட்சிகளுக்கும் இருக்கின்றது. பொதுவான கோரிக்கைகளில் ஒன்றுபட்ட தமிழ் கட்சிகள் அந்தக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கொண்டுசென்று சேர்க்கவில்லை. அவர்களுடன் பேரம் பேசவும் முயற்சிக்கவில்லை. தமிழ்  மக்கள் கூட்டணியில் செயலாளர் நாயகம் சி வி விக்னேஸ்வரன் மட்டும் அந்தக் கோரிக்கைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரதான வேட்பாளர்கள் அனைவரிடமும் அவற்றை ஒப்படைத்திருந்தார்.

தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பன இந்த கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளரிடம் கொண்டு செல்வதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. “விஞ்ஞாபனங்களைப் பார்த்து தீர்மானம் எடுப்போம்” என்ற நிலைப்பாட்டிற்கு இந்த கட்சிகள் வந்திருந்தன. இறுதியில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. .

தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கோ, அது தொடர்பில் பேசுவதற்கோ தயாராக இல்லாத சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை இந்த கட்சிகள் எடுத்ததற்காகத் தெரிவிக்கும் காரணங்கள் நியாயமானவையாகத் தெரியவில்லை. 13 அம்ச கோரிக்கையை தயாரிப்பதற்கு முன்னதாகவே சஜித்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை இந்த கட்சிகள் எடுத்து இருப்பதாகவே தெரிகின்றது. அதற்குப் பின்னர் தங்களுடைய சுயலாப பேரம் பேசும் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 13 அம்ச கோரிக்கைகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது.

தமிழரசு கட்சியின் மீது அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பது மட்டுமே அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்பது முக்கிய குற்றச்சாட்டு. தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எடுத்துச் சென்று அதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கு கூட்டமைப்பு தயங்கியிருந்தது. 16 எம்.பி.க்கள் என்ற பலம் தமிழர்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டதை விட, அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே அதிகளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தமிழரசுக் கட்சியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தார்கள்.

13 அம்சக் கோரிக்கையில் இணங்கிவந்திருந்ததன் மூலம் தம்மீதான இந்தக் களங்கத்தை – கறையைத் துடைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சி முற்பட்டது. அதற்காக மாணவர்களையும், மக்களையும் முட்டாள்களாக்கியுள்ளார்கள். மறுபக்கம் ஐ.தே.க. தலைமையுடன் தமது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதற்கு இதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆக, தமது அரசியல் நலன்களுக்கு இதனைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாதையில் செல்வதற்கு தமிழரசுக் கட்சி முடிவெடுத்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் முடிவுக்குத் தலையாட்டுபவர்களாகவே ரெலோவும், புளொட்டும் இருக்கின்றன. இந்த நிலையில் இவர்களிடமிருந்து மக்கள் எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

முள்ளிவாய்க்காலின் பின்னர் பத்தாண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய அரசியலை தெளிவான பார்வைகளோடு வழிநடத்த வல்ல தீர்க்கமான தலைமை இன்னமும் தமிழ் மக்களிடமிருந்து தெளிவாக வெளிப்படவில்லை என்பதே மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

தமிழ்த் தேசிய இலக்குக்காக களமாடி விதையாகிய எங்களது மாவீரச் செல்வங்களின் நினைவேந்தல் மாதத்தில் நின்று கொண்டிருக்கின்றோம். தங்களையே ஆகுதியாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுத்தவர்களுக்கு மத்தியில் தங்களது சொந்த நலன்களுக்காக தமிழ்த் தேசியத்தை விலைபேசும் அரசியல் வியாபாரிகளை தமிழினம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியலில் தன்னலமில்லாத தமிழ்த் தலைமைகள் மக்களுக்கான அரசியல் செய்கின்ற காலத்தை எமதாக்க வேண்டும். பல்கலைக் கழக சமூகமும் சிவில் சமூகமும் தெளிவான பார்வைகளோடு ஒரு வலுவான மக்கள் தளத்தை உருவாக்க வேண்டும். எங்களது பலம் எங்களின் கைகளிலேயே என்பதைப் புரிந்து கொண்டு மக்களுக்கான அரசியல் பணிகளை தமிழ்த் தேசிய இலக்கு நோக்கி முன்னெடுக்க உண்மைத் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும்.

நன்றி: இலக்கு மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply