தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சட்டவலுவற்றது – விஷேட ஆணையம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது என்ற பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவு சட்டவலுவற்றது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகத்தை 2018ம் ஆண்டில் கோரியிருந்தது.

ஆனால் பிரித்தானிய உள்துறை அமைச்சகம் 2019 மார்ச் மாதம் 8ம் திகதி மேற்குறிப்பிட்ட நாடுகடந்த அரசாங்கத்தின் கோரிக்கையை மறுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது என்ற தங்கள் முடிவை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நாடு கடந்த அரசாங்கத்தின் சார்பில் பிரித்தானியாவில் வாழும் அதன் அங்கத்தவர்கள் சிலர் இம் முடிவுக்கு எதிராக வலுவான பிரித்தானிய சட்ட வல்லுநர்களின் துணையோடு, ஒரு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதன் படி, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் மேன்முறையீடு செய்வதற்கென உருவாக்கப்பட்ட விசேட ஆணையத்தால் இம்மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகள் திறந்த விசாரணைகள், மூடிய விசாரணைகள் என இருவகையாக நடைபெற்றன.

இவ் விசாரணைகள் கடந்த யூலை மாதம் 29, 31 ஆகிய இரு தினங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் படி இம்மேன்முறையீட்டுக்கான தீர்ப்பை மேற்படி ஆணையம் பிரித்தானியாவில் இன்று காலை வெளியிட்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் என்ற பட்டியலில் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சின் முடிவு சட்டவலுவற்றது என்று மேற்குறிப்பிட்ட ஆணையம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில், இது ஒரு முக்கிய முடிவாக இருக்கின்ற போதிலும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கிருந்த தடை நீங்கியது என்று, இதன் மூலம் நாம் பொருள்கொள்ள முடியாது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை நீக்கும் அதிகாரம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குரியதாகும். பிரித்தானிய நாடாளுமன்றம் இது தொடர்பாக எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறது என்பதை எதிர்வரும் நாட்களில் அறியக்கூடியதாகவிருக்கும்.