தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் தெரிவித்த இந்தியப் பிரபலங்கள்

இன்றைய தினம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாளாகும். இன்றைய பிறந்தநாளை உள்ளுர் மக்களும்,  புலம்பெயர் தமிழ் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

அதேவகையில் இந்தியப் பிரபலங்கள் தேசியத் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களை அவரது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதவில், “மதுவை நெருங்கவிடா மாவீரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்” என்று குறிப்பிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

Ramathas 1 தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் தெரிவித்த இந்தியப் பிரபலங்கள்அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சித் திறன், மதுவை மக்களிடம் நெருங்கவிடா மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு 65ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். படைகளால் மட்டுமன்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை“ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஓர் வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த் தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக, முகவரியாக விளங்குகின்ற நமது தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என்னுயிருக்கினிய தாய்த் தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன்.

அடிமைத்தனத்திற்கெதிரான உலகப் போராட்டக் களங்களில் எத்தனையோ நாயகர்கள் தோன்றி மண்ணையும், மக்களையும் காப்பாற்றுகின்ற வீரர்களாக வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார்கள். வரலாற்றின் வீதிகளில் வீழ்த்தப்பட்ட இனத்தின் அடிமை விலங்கினைத் தகர்க்க எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

காலங்காலமாய் கண்ணீர் சிந்தும் மக்களின் வேதனையைப் போக்கி, மதிப்புறு வாழ்வு ஒன்றுக்காக தன் வாழ்வையே முன்னிறுத்திப் போராடிய எத்தனையோ அதிமனிதர்கள் இந்த அகிலத்தில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரையும் காட்டிலும் ஆகச்சிறந்த உதாரணத் தலைவனாக, எக்குறையும் சொல்ல இயலா மனிதப் புனிதராக பிரபாகரன் திகழ்ந்தார்.

நம்மினத்தைக் கொன்றொழித்த சிங்களவர்களால்கூட குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்கு காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதி உன்னதப் புனித வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்றுப் பெருநாயகன் பிரபாகரன். மறம் காட்டி நின்றாலும் இறுதி வரை களத்தில் அறம் போற்ற நின்றார் அவர்.

அடிமைத் தேசிய இனத்தின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையையே  அர்ப்பணித்து இந்தப் பூமிப் பந்தில் தமிழர்களுக்கென்ற ஒரு தேசம் படைக்க, சிங்கள இனவாத அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் தாய் நிலத்தை மீட்டெடுக்கத் துப்பாக்கி ஏந்தி துணிந்து நின்றார். “விடுதலை என்பது விற்பனைப் பண்டமல்ல. அது உயிரையே விலையாகத் தந்து போராடிப் பெறுகின்ற புனித உரிமை“ என்பதைத் தெளிவாக உணர்ந்து, “உயிர் உன்னதமானது, ஆனால் அதனிலும் உன்னதமானது எமது உரிமை, விடுதலை, கௌரவம்“ என வீரமுழக்கமிட்டு உயிரை ஒரு குப்பியில் அடைத்து தன் கழுத்திலேயே தொங்க விட்டு விடுதலைத் தாகம் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக, கடலுக்கும், கரைக்குமாக ஆறு படைகள் கட்டிக் களத்தில் பாய்ந்து, உலகமே ஒற்றை அணியில் தனக்கு எதிராய் நின்றாலும் அதனை எதிர்த்து உள்ளம் தளராது தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னலமற்றுக் களத்தில் நின்ற ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன்.

உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை ‘மாவீரன்’ என்று விளிக்க ஒரு போதும் அவர் விரும்பியதில்லை. அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப் போராளிகளையே ‘மாவீரர்கள்’ என்றார். உலக வரலாற்றில் எந்நாட்டின் துணையும் இல்லாமல், எவரது உதவியும் இல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, இராணுவமாகத் திரட்டி அவர்களுக்கு பயிற்சியும், போர்த் திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப் போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் பிரபாகரன் மட்டும்தான். அவர் ஆயுதங்கள் மீதும், இராணுவ பலத்தின் மீதும் தீரா காதல் வன்முறையாளரும் அல்லர்; போர் வெறியரும் அல்லர்.

தன் அன்னை நிலத்தின் மீது படிந்திருக்கும் அடிமைப் புழுதியை அகற்றப் புயலென வீசிய புரட்சிக் காற்று அவர். போர் விதிகளுக்கு மாறாகத் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுக் குண்டுகளையும், கனரக ஏவுகணைகளையும் சிங்கள இனவாதிகள் பயன்படுத்திய போதும், கண்ணசைத்தால் கணநொடியில் எதிரிக்குக் கல்லறை கட்டிவிடும் கரும்புலிகள் தன்னிடம் இருந்தும், “தனக்கு எதிரி சிங்கள இராணுவம் தானே ஒழிய, சிங்கள மக்கள் அல்லர்” என்றறிவித்து அறம் காத்த பெரும் தலைவர் பிரபாகரன்.

உலகமே தனக்கு எதிராய் நின்ற போதிலும் தனது தாய் நிலத்தில் சர்வ இறையாண்மையுள்ள ஒரு சமதர்ம தமிழீழ நாட்டைக் கட்டியமைத்து, அங்கு சனநாயக விழுமியங்கள் போற்றுகின்ற மக்கள் நலன் சார்ந்த ஒரு உதாரண அரசினை நம் கண்முன்னால் நடத்திக் காட்டியவர் பிரபாகரன். பொருளாதாரத் தடையில் இருந்த போதும் கூடத் தன்னிறைவான வாழ்வினைத் தனது மக்களுக்குத் தந்து பொருளாதார விடுதலையை அடைந்து காட்டியவர் பிரபாகரன்.

தாய்மொழிக் கல்வியும், சாதியமற்ற சமூகமும் நமக்கெல்லாம் இங்கே கனவாகவே இருக்கின்றன. ஆனால், தான் உருவாக்கிய ஈழத்திருநாட்டில் தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழிக் கல்விக்கூடங்களை நிறுவி, மருத்துவக் கல்வி முதல் இராணுவக் கட்டளைகள் வரை அனைத்தையம் தமிழ் மொழியிலேயே தந்து, உலகத்தின் மிக மூத்த மொழியான தாய் மொழியைத் தழைக்கச் செய்தவர் பிரபாகரன்.

தாயகத் தமிழகத்தில் பெரும் சாபமாய்க் காலங்காலமாய் நம்மைத் தொடர்ந்து வருகிற சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஈழ சோசலிசக் குடியரசு நாட்டில் ஒழித்துக் காட்டி, ஏற்றத்தாழ்வு நீங்கிய சமதர்மச் சமூகத்தைப் படைத்துக் காட்டியவர் பிரபாகரன். மண்ணடிமையைப் போக்க மறம் பாடி நின்றாலும், பெண்ணடிமையைப் போக்க பெரும் செயல்கள் பல செய்து நிகழ்காலத்தில் ஆணுக்குப் பெண் சமம் என இந்த உலகிற்கு அறிவித்து நடைமுறைப்படுத்தியவர் அவர்.

இந்த உலகில் இதுவரை தோன்றியிருக்கின்ற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்த புறநாநூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர். தன்னலம் கொண்டு, “தான் பெரிது, தன் குடும்பம் பெரிது” என்று தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்றவர்கள் வாழ்கின்ற இக்காலத்தில், தன்னைப் போலவே தன் குடும்பத்தையும் ஈக வாழ்விற்கு அர்ப்பணித்து உலக வரலாற்றில் இதுவரை தோன்றிய மற்ற தலைவர்கள் எவரைக் காட்டிலும் உயர்ந்த உன்னத தியாகத்தை, நினைத்துப் பார்க்க முடியா ஈகப் பெருவாழ்வைக் கொண்டவர்.

என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர் துணைகொண்டே கடக்கின்றேன். இந்த அரசியல் சூழல்கள் தரும் சங்கடங்களில் இருந்தும், பெரும் மன அழுத்தங்களிலிருந்தும், தீரா வேதனைகளிலிருந்தும் என்னை நானே மீட்டக் கொள்ள என் உயிர் அண்ணனிடத்திலிருந்து தான் நான் வாழ்வதற்கான இலட்சிய உறுதியைப் பெறுகின்றேன். அவருடைய பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

அவரது வாழ்வே இந்த உலகத்திற்கு நாங்கள் அறிவிக்கும் எமது கொள்கை சாசனமாக, எமது இலட்சியப் பற்றுறுதியின் அடையாளமாக எம் முன்னால் புகழொளியோடு சுடர்விட்டு நிற்கிறது. வே.பிரபாகரனுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டள்ளார். மேலும் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.