‘தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான்.

கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம்.

இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது.

குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்டமிட்ட வகையில் பேரினவாத அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

batti monk 161116 seithy 3 'தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்' - மட்டு.நகரான்.
தமிழர்களும் இந்த நாட்டின் மக்கள். அவர்களும் தனித்துவமான அடையாளங்கள், மொழி, கலை, கலாசாரங்களைக் கொண்ட மக்கள். அந்த மக்களுக்கான உரிமையினை வழங்க வேண்டும் என்று இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் எந்தப் பெரும்பான்மை அரச தலைவரும் கருதாத வரைக்கும் இந்த நாட்டில் தமிழர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இன்று நடைபெறும் நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்தும் நாங்கள் சுட்டிக்காட்டி வருகின்றோம். அவையெல்லாவற்றினையும் தாண்டிய வகையில் இன்று நெருக்கடிகள் அதிகரித்து வருகின்ற நிலைமையானது தமிழ் மக்களுக்கான அபாய சங்காகவே நோக்க வேண்டியுள்ளது.

2017 06 09 'தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்' - மட்டு.நகரான்.
குறிப்பாக இன்று அரசாங்கம் காணி தொடர்பான செயற்பாடுகளில் அதீத அக்கறை காட்டுவதை காணமுடிகின்றது. குறிப்பாக காணிகளை பகிர்ந்தளிக்கும் விடயத்தினை திறந்த முறையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஒரு இலட்சம் பேருக்கு காணி வழங்குதல், சீர்திருத்த காணிகளை பகிர்ந்தளித்தல், அரச காணிகளை பராமரிப்பவர்களுக்கு அக்காணியை வழங்குதல் என்ற பல செயற்பாடுகளை அரசாங்கம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக இந்த செயற்பாடுகள் தமிழர்களின் பகுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் இன்று அதிகளவில் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ள காடுகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள வளமான காணிகளை கையகப்படுத்தி அங்கு திட்டமிட்ட குடியேற்றங்களை செய்யும் வகையிலான உத்திகளாகவே இவ்வாறான செயற்பாடுகளை பார்க்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் பெரும்பான்மையின மக்கள் வாழும் வனங்களை அரசு பாதுகாக்கும் பகுதியாக அறிவித்து, அவற்றினை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், வடகிழக்கில் உள்ள வனங்களை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவற்றினை அழிக்கும் நிலையினை இன்று உருவாக்கி வருகின்றது.

அதற்கு பல உதாரணங்கள் கிழக்கில் காணப்படுகின்றன. குறிப்பாக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலந்தனை, மாதவனை பகுதியில் காலங்காலமாக வனப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மையினைத்தைச் சேர்ந்தவர்கள் சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்ற தோரணையில் அப்பகுதிகளில் அத்துமீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக காடுகள் அழிக்கப்பட்டு, அம்பாறை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களைக் கொண்டு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்பாடுகளுக்கு பின்புலமாக கிழக்கு மாகாண ஆளுநர் இருப்பதாக தமிழ் கட்சிகளினால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய மற்றும் சோளச் செய்கையினை தற்காலிகமாக இடைநிறுத்தி, குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த பின்னர் தீர்வொன்றினை காணலாம் என அமைச்சர் சமல் ராஜபக்ச குழுவொன்றினை அமைத்து நடவடிக்கையெடுத்துவரும் நிலையிலும், கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாக இந்த விடயத்தில் அமைச்சரின் பணிப்பினை மீறி செயற்படும் நிலையுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகளினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணம் மட்டுமன்றி, வடமாகாணமும் குறிவைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது தமிழர்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழர்களின் பக்கத்தில் இருந்து இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இனிவரும் காலத்தில் வடகிழக்கினை உள்ளடக்கியதாக தமிழர்களின் நிலபுலங்களை பாதுகாத்து முன்கொண்டு செல்லக்கூடியதாக, அவசியமானதுமான அவசரமானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என்று நடைபெற்று வரும் செயற்பாடுகள் எங்களுக்கு கட்டியம் சொல்லி நிற்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் மாதவனை, மயிலத்தமடு பகுதிகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததை தமிழர்கள் காணி விடயங்களில் முன்கொண்ட செயற்பாடுகளின் அனுபவங்கள் பெறப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும், அமைச்சராகவும் கலந்து கொண்டவர்களினால் மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை சட்டவிரோத செயற்பாடுகள் என்று கூறக்கூட முடியாத நிலையில் உள்ளமை, கிழக்கில் அரசசார்பு கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான நிலையில் எதிர்கால செயற்பாடுகள் குறித்த கேள்வி இன்று கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களினால் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியுமே தவிர, இந்த பிரச்சினைக்கான தீர்வு என்ன உண்டு என்பது தொடர்பில் சிந்திக்கும் நிலைமையில் இருந்து அவர்கள் தவறியே வருகின்றனர்.

இந்த நிலையிலேயே வடகிழக்கு மாகாணத்தினை உள்ளடக்கியதாக அல்லது இரு மாகாணங்களிலும் தனித்தனியாக செயற்படக்கூடியதாக சட்ட அறிஞர்கள், காணி தொடர்பான செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகளை உள்ளடக்கியதான குழுவொன்றினை அமைத்து, அதன் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் நடைபெறும் அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91 'தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்' - மட்டு.நகரான்.

அண்மையில் திருகோணமலை, தென்னமரவாடி பகுதியில் காணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான குழுவினர் வழக்காடி, குறித்த தனியார் காணியை பௌத்த விகாரையிடம் இருந்து மீட்டு வழங்கிய செயற்பாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த விடயங்கள் முன்நகர்த்தப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் சரியான முறையில் கையாளப்படாமல் விடுமாகவிருந்தால் இன்னும் பத்து வருடங்களில் தமிழர்களின் தாயகம் என்னும் நிலை மாற்றப்படும் நிலையுருவாகும். கிழக்கு தொடர்பில் நாங்கள் இன்னும் பாராமுகமாக இருப்போமானால், எதிர்காலத்தில் வடக்கின் நிலையும் கேள்விக்குறியாகும் நிலையுருவாகும்.

நாங்கள் இன்று கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் இந்த அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் செல்லும் நிலையுருவானால்,  இந்த மண்ணில் கடந்த 30வருடத்திற்கு மேலாக போராடி ஆகுதியாகிய போராளிகளுக்கு செய்யும் துரோகமாகவே அது அமையும்.