தமிழர் பிரதேசத்தில் தமிழர்களின் அடையாளங்களை நிலை நிறுத்துவதற்கு எந்த முயற்சிகளையும் கடந்த காலங்களில் முன்னெடுக்கவில்லைஎ

சிங்கள ஆக்கிரமிப்புகள் என்பது மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும்.இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுவதற்கு முன்பாகவே சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தமிழர்கள் பகுதிகளில் ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துள்ளது.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இந்த நாட்டில் தம்மை பெரும்பான்மையினம் ஏனைய இனங்கள் இந்த நாட்டில் வந்தேறுகுடிகள் என்று நிரூபிப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் சிங்கள அரசுகள் முன்னெடுத்துவரும் நிலையில் இந்த நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் பல பகுதிகளிலும் வெளிக்கிளம்பியுள்ள நிலையில் அவற்றினை ஒருங்கிணைத்து முறையான வரலாற்று ஆய்வினை முன்னெடுப்பதற்கு தமிழர் தரப்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தமிழர்கள் பாரம்பரியமாகவும் தமது ஆதிகால வரலாற்று நினைவுகளாகவும் உள்ள பல்வேறு இடங்கள் இன்று அகற்றப்பட்டு அவை சிங்கள மயப்படுத்தப்படுகின்றது என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளபோதிலும் அவற்றினை வெளிக்கொணர்வதற்கான எந்தவிதமான முயற்சிகள் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரியதாகவே இருந்துவருகின்றது.

தமிழர்களைப்பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்ற ஒன்றை பேசினால் மட்டும்போதும்,சிங்கள அரசுகளிடமும் சர்வதேசத்திடமும் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டால் மட்டும்போதும் தமது செயற்பாடுகள் அந்த வரையறைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுவருவரும் இன்று இந்த நாட்டில் தமிழர்களின் வரலாறுகள் அழிந்துசெல்வதற்கான காரணமாக இருக்கின்றது.

உரிமைக்காக ஆயுதம் தாங்கிய போராடிய காலப்பகுதியிலும் நாங்கள் உரிமையினைப்பெறுதற்காக முழு மூச்சாக செயற்பட்டோமே தவிர எமது பகுதிகளில் தமிழர்களின் வரலாற்றினை வெளிப்படுத்தும் நிலையிலிருந்த பகுதியை முறையாக அடையாளப்படுத்தி அவற்றினை வரலாற்றாக வெளிக்கொணரும் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மதம் என்ற காரணத்தைக்காட்டி நாங்கள் கவனம் செலுத்தாமலிருந்த விடயங்கள் இன்று பௌத்தம் என்ற பெயருடன் வடகிழக்கில் தனது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முயன்றுவருகின்றது.

அண்மையில் காலமான வவுனியாவினை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் ஐயா அவர்கள் என்னை ஒரு நாள் தொடர்புகொண்டு எனது கட்டுரைகள் குறித்து பேசினார்.கிழக்கிலிருந்து விடயங்களை எழுதுவதை பாராட்டிய அவர் கிழக்கில் காணப்படும் பழமையான விடயங்கள் வெளிக்கொணரப்படவேண்டும்.

தமிழர்களின் வரலாறுகள் அங்கு பரவிக்கிடக்கின்றன.அது வெளிக்கொணரப்பட்டால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது மேலும் ஆதாரங்களுடன் நிரூபனமாகும்.அதனை செய்வதற்கு வழிவகைககள் செய்யுங்கள் என்று எனக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

உண்மையில் கிழக்கு மாகாணத்தினை திட்டமிட்டு அபகரிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது தமிழர்கள் தமது வரலாற்றினை பாதுகாப்பதற்கு தவறியதாகும்.அம்பாறை மாவட்டம் இன்று பெரும்பான்மையாக சிங்களவர்கள் வரும் வரையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வரலாறுகள் இல்லாமல்செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை நகரினை எடுத்துக்கொண்டால் இன்றும் அங்கு அம்பாறைப்பிள்ளையார் ஆலயம் அதனோடு இணைந்த வரலாற்று ரீதியான பல்வேறு ஆதாரங்கள் சுமார் 2000வருடங்களுக்கு முற்பட்டவையாக யாரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றன.தமிழர்களின் வரலாற்றின் மிக முக்கியமானவையாக கருதப்படும் அவை இன்று சிங்கள பௌத்தமயமாக்கலுக்குள்ளாகிய நிலையில் காணப்படுகின்றன.

1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்லோயா திட்டம் கொண்டுவரப்பட்டபோது தெற்கில் இருந்த சிங்கள காடையர்களை கொண்டுவந்து அம்பாறையில் குடியேற்றி அப்பகுதியில் தொடர்ச்சியான வன்முறைகள் நடாத்தப்பட்டு அங்கிருந்து தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.அம்பாறை நகரம் என்பது தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாக காணப்படும் நிலையில் இன்று அம்பாறை நகரில் ஒரு பாடசாலையும் ஆலயமும் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில் அங்கு எந்த தமிழர்களும் இல்லாத நிலையே உள்ளது.

இதேபோன்று அம்பாறையில் மற்றுமொரு ஆலயமாக கருதப்படும் உகந்தை முருகன் ஆலயம் சிங்கள மயமாக்கலுக்குள் முற்றாக சிக்கியுள்ளது.அதன் நிர்வாக கட்டமைப்பு தமிழர்களிடம் உள்ளபோதிலும் ஆலயமும் ஆலய சூழலும் இன்று முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுவருகின்றன.

நாங்கள் எமது உரிமைப்போராட்டத்திலும் எமக்கான நீதியை கோருவதிலும் காட்டிய ஆர்வத்தினையும் வேகத்தினையும் எமது வரலாறுகளை பாதுகாப்பதில் தவறிவிட்டோம் என்பது மிகவும் கவலையானது விடயமாகும்.கடந்த காலத்தில் கதிர்காமம் முருகன் ஆலயம் எவ்வாறு தமிழர்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்டு பௌத்தமயமாக்கப்பட்டதோ அதே பாணியே இன்று வடகிழக்கில் தொல்பொருள் என்ற தோனியில் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம்,உகந்தை முருகன்ஆலயம்,திருகோணேஸ்வரர் ஆலயம் என்பனவற்றின் சூழல் முற்றுமுழுதாக பௌத்தமயமாக்கப்பட்டுள்ளதுடன் அவை தொல்பொருள் என்ற அடையாளத்துடன் பௌத்தம்சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கபடுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இதுபோன்ற பல ஆலயங்களை எதிர்காலத்தில் தொல்பொருள் என்ற அடையாளத்துடன் பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவருவதானது கிழக்கு தமிழர்கள் மட்டுமல்ல நித்திரையில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாண ஆளுனர் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் குறித்து தமிழர்கள் அச்ச நிலையில் உள்ளதையும் காணமுடிகின்றது.கிழக்கில் மாபெரும் சிங்கள பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கான முன்னாயத்தங்கள் கிழக்கில் நடைபெற்றுவருகின்றன.
தொல்பொருள் செயலணி ஊடாக கிழக்கில் உள்ள தமிழர்களின் வரலாற்றுசிறப்புகள்கொண்ட ஆலயங்களை பௌத்த மயமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கும் நிலைமையும் காணப்படுகின்றது.

ஏற்கனவே திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பகுதியை பௌத்தம் சார்ந்த இடம் என தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ள அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் தொல்லியல் இடம் என்ற ரீதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரம் மட்டக்களப்பில் எந்த சிங்கள மக்களும் இல்லாத நிலையில் மட்டக்களப்பு பார் வீதியில் தற்போது இராணுவ முகாமாக காணப்படும் சிங்கள மகா வித்தியாலத்தினை மீள இயங்கச்செய்வதற்கான தீவிர முயற்சியை கிழக்கு மாகாண ஆளுனர் முன்னெடுத்துவருகின்றார்.சிங்களர்களே இல்லாத பகுதியில் எதற்கு சிங்களவர்களுக்கான பாடசாலையென்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு பலமானதாக எழுந்துள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் சுமார் 3000வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்று ஆதாரங்கள் புதைந்து கிடக்கும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலோடிய மலை மற்றும் குசனார் மலை ஆகியவற்றில் தொல்லியல் திணைக்களம் தனது வேலையை காட்ட முற்பட்டபோது குறித்த செயற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புகளினால் பல தடவைகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் பௌத்த பிக்குகளுடன் வந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதி மக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் துரத்தியடிக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன.

2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் என்னும் பகுதியில் நிலத்திற்கு கீழ் இருந்து சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி.390வருடங்களுக்கு முற்பட்ட காசிலிங்கேஸ்வரர் ஆலயம் என அடையாளம் காணப்பட்டதுடன் அந்த ஆலயத்தின் கட்டிட சிதைவுகள் அனுராதபுர காலத்திற்கு முற்பட்டது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.இலங்கையிலிருந்து ஆறு ஈச்சரங்களில் ஒன்றாகயிருந்ததாகவும் தற்போது ஐந்து ஈச்சரங்களே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் தொல்லியல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் மாற்று இனங்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு தொல்லியல் திணைக்களமானது உண்மையாக ஆய்வுகள் செய்வதை விடுத்து கிழக்கில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை மட்டும் முன்னெடுத்துவரும் நிலையில் கிழக்கில் காணப்படும் தமிழர்களின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பதற்கு கட்டமைப்பு ஒன்றை உடனடியாக முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

நான் கட்டுரை ஊடாக தொடர்ச்சியாக இந்த விடயங்களை எழுதுவதற்கு காரணம் கிழக்கு பாரிய ஆபத்தினை எதிர்கொண்டுள்ளது என்பதுடன் கிழக்கில் காணப்படும் தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்ட வரலாறுகள் வெளிக்கொணரப்படவேண்டும்.அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு உடனடியாக அவை வெளிக்கொணரப்படவேண்டும் என்பதுடன் இது தொடர்பான தகவல்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.