தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 2)

626 Views

தமிழர் தொல்குடித் தேடலை ஊக்குவித்த உளவியற் காரணிகள்:

1950, 60, 70களில் எமது தாயக நிலங்களில் தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தெளிவான தரவுகளையோ, தகவல்களையோ யாம் எமது இளமைக் காலங்களிற் பெறுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், சூழல்கள் பெரிதாக இருந்ததில்லையென்றே கூறவேண்டும்!

இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில், தமிழர் தேச, தேசியச் சிந்தனைகள் யாவும் முற்றுமுழுதாக சிங்களப் பேரினவாதத்தினின்றும் எம்மை விடுவிக்கும் இலக்கோடும், நோக்கோடும் கருத்தரிப்புற்றுக் கட்டியெழுப்பப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒருகாலத்திலேயே எனது இளமைக்காலம் தாயகத்தில் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு வந்தது! இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களின் இறைமையையும், இருப்பையும் தக்கவைக்கின்ற ஒரு தேச, தேசியம் சார்ந்த அரசியல்  இயக்கமே எமது இரத்த ஓட்டத்தில், எண்ண அலைகளில், இருதயத்துடிப்பில் கலந்து வியாபித்து நின்றதனை நமது சமகாலத்தில் வாழ்ந்த மாணவ உலகம் ஒருபோதும் மறுக்காதென உறுதியாக நம்புகின்றேன்!

எனக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1956இன் தனிச்சிங்கள மசோதாவின் மூலம் எம்மீது திணிக்கப்பட்ட சிங்கள மொழித்திணிப்பும் சரி, அதனைத் தொடர்ந்து 1958இல் நிகழ்ந்து பலதமிழ் மக்களின் உயிர்களை மிகமிகக் கொடூரமான முறையிற் காவுகொண்ட இனவெறிப் படுகொலைகளும் சரி, எமது பிஞ்சு இதயங்களில் ஒரு சிங்களப் பௌத்த அரச பயங்கரவாதத்திற்கெதிரான தேச, தேசிய உணர்வியக்கத்தியக்கத்திற்கான உளவியலுக்குள் இழுத்துச் சென்றதனால், ஒரு கசப்புநிலை கடந்த துன்பவடுக்கள் தொடாத சமநிலைப்பட்ட அறிவியற் பார்வையுள்ள ஒரு தமிழர் தொல்லியல் வரலாற்றுத் தேடலை எம்மால் எமது பள்ளிக்காலங்களிலோ அல்லேல் கல்லூரிக் காலங்களிலோ எதிர்கொள்ள முடியவில்லை!

1956இனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகத் தமிழர்களாகிய யாம் இலங்கைத்தீவில் அனுபவித்து வந்த அரச ரீதியான, அரிசியல் ரீதியான, இன, மத, மொழி, கல்வி, பொருளாதார ரீதியான புறக்கணிப்புகள், புறந்தள்ளல்கள், அவமானங்கள், அவதூறுகள், அலட்சியங்கள், அச்சுறுத்தல்கள், அங்கலாய்ப்புகள், எச்சரிக்கைகள், ஏய்ப்புகள், ஏமாற்றங்கள் என இவையனைத்தும் எமக்கான ஒரு பாதுகாப்புள்ள தேச தேசிய உருவாக்கத்தை நோக்கிய ஒரு தேடற் பயணத்திலேயே எம்மை ஈர்த்தும், ஈடுபடுத்தியும் வந்ததெனலாம்!

இவ்வாறான ஓர் அரசியற் பின்னணியில் எம்மை எமது தேசம் தேசியம் பற்றிய விழிப்புணர்வுக்கு உட்படுத்திய அரசியற் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஒருசிலர் இருந்ததன் விளைவாக யாம் தமிழையும், தமிழரையும் ஓர் உரிமைப் போராட்டக் கோணத்திலேயே எமக்குள் ஏந்தியவாறு எமது வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பப் படிகளில் ஏறி வந்தோம்!

இரத்தத் திலகமிட்டு வரவேற்று உணர்வுபூர்வமான ஒரு சனநாயக நெறிப்பட்ட தேச தேசிய அரசியற் கலாச்சாரமே எம்மை அன்றைய காலத்தின் தேவை நோக்கி வழிநடத்தியதன் விளைவாக ஓர் ஆழமான தொல்லியல் வரலாற்றுத் தேடலை யாம் நாடவில்லையென்றே கருத முடியும்!

இந்நிலையில், இலங்கையிற் தமிழர்களின் தோற்றம் பற்றியோ, அவர்களது வரலாற்று பண்பாட்டு வாழ்வியற் தடயங்கள் பற்றியோ எமக்குத் தெளிவுபடுத்துவதற்குக்கூட யாரும் முன்வந்ததாகக் கூறுவதற்கில்லை!

உண்மையில் எமது முழுமையான தாயகப் பிரதேசங்களையும் அவற்றின் கிராமங்கள், ஊர்கள், சிற்றூர்கள் பற்றியும் எமது தமிழர் தேச விடுதலைப் போராட்ட காலங்களுக்கு முன்னர் நாம் கொஞ்சமாவது அறிந்திருந்தோமோவெனில் அதற்கான பதில் இல்லையென்றே என் போன்றவர்களிடமிருந்து வருமென நம்புகின்றேன்!

எமது இளமைக் காலத்தில், வடக்கு மாகாணத் தமிழர்களாகிய எமக்கும், கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்குமிடையிற்கூட குறிப்பிடத்தக்க இணைப்பும், புரிந்துணர்வும் இருந்ததாக என்னாற் கூறமுடியாது! எமது பார்வையில் இலங்கையின் தமிழும் தமிழர் வரலாறும், வாழ்வியலும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததென்றே நினைக்கத் தூண்டுகிறது!

ஏன் வன்னி, மன்னார் போன்ற பிரதேசங்கள் பற்றியே எம்முட் பலர் பெரிதாக அறிந்திருந்தோமென்று சொல்வதற்கில்லை!

எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு ஓரிரு தடவைகளே போயிருக்கிறேனென நினைக்கிறேன்! கிளிநொச்சி உருத்திரபுரம் பத்தாம் வாய்க்கால் மாகாவித்தியாலயத்தில் நான் ஆசிரியனாகப் பணிபுரிந்த காலங்களிலே எனக்கு ஏற்பட்ட கல்வி, கலை, கவிதை, இலக்கியப் பிரயாணங்களின் அனுபவங்களினூடாக ஒருசில வன்னிப் பிரதேசங்களிலுள்ள ஊர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததேயன்றி, இவற்றிற்கு அப்பால் ஒரு தேச வரலாற்றுத் தேடலாக இவற்றை நான் கருதியதேயில்லை!

கிளிநொச்சியில் நான் கற்பித்த காலங்களில், என்னுடன் கவிஞரும், இன்றைய திரைப்பட நடிகருமான வ.ஐ.ச.செயபாலன்,  மட்டக்களப்பைச் சேர்ந்த கலியுகன் மற்றும் முத்துசிவன் ஆகிய இளங்கவிஞர்கள் கூடிக் கவியரங்க நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வந்தோம்! இக்காலங்களில், அரங்குகளிற் கருத்தரங்கங்களும் செய்து வந்ததன் விளைவாக மட்டக்களப்பிலிருந்து திமிலைத் துமிலன் மற்றும் ராஜபாரதி என ஒரு சிலரையும் நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது!

அரசியற் களத்தில் நாமெல்லோரும் ஆவலோடும் ஆர்ப்பரிப்போடும் எதிர்பார்த்துக் கேட்டு மகிழ்ந்த சொற்பொழிவாளராக திரு ராஜதுரை அவர்களோடு நான் நேசித்து நெஞ்சு விட்டுப்பழகிய கவிஞர் காசி ஆனந்தன் ஆகிய இருவரும் மட்டக்களப்புடன் எம்மை இறுகப் பிணைத்தவர்களெனக் கூறமுடியும்!

எனவே இலங்கையிற் தமிழர்களின் ஆதிக்குடி வரலாற்றை அன்றைய நிலையில் அறிவதற்கான கல்வி, சமூக மக்கள் தொடர்புச் செல்நெறியை எம்மாற் கண்டுகொள்ள முடியவில்லை என்றே கூறலாம்!

இலங்கையில் அன்றைய காலத்தின் தமிழிலக்கிய ஏடுகள், இதழ்கள், சஞ்சிகை, ஊடக,  வெளிப்பாடுகள்கூட எமது தொல்குடி வரலாறு பற்றியோ, எமது இன அடையாளம் பற்றியோ பெரிதும் பேச முயன்றதாக எனக்கு ஞாபகமிலலை!

இலங்கை வானொலியில் அவ்வப்போது ஒருசில கிராமிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகுவதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்க நேரின் இவற்றின் வழியாக ஒருசில தகவல்கள் காற்றிற் தவழ்ந்து வந்து செவிவழியேறி மனதிற் காட்சியாக விரிவதுண்டு!

அக்காலங்களில் வீட்டில் வானொலிப் பெட்டி வைத்திருப்பதென்பதே ஓர் அரிய விடயமாக இருந்ததையும் நாம் மறப்பதற்கில்லை! ஏனக்கு இன்றும் பசுமையாக இருக்கிறது, நான் எனது சிறுவயதில் எமது ஊர்ச் சந்தையிலுள்ள ஒரு கடையின் முன்னால் நின்று அக்கடையிலிருந்து வானொலியிலெழும் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுச் சுவைத்து இன்புறுவதுண்டு! நான் கொழும்பிலிருந்த காலங்களில் இலங்கை வானொலியில் எங்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் (காசி அண்ணா) ‘நாளைய சந்ததி’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்! அதிலே நானும் பற்குபற்றியுள்ளேன்! இந்த நிகழ்ச்சியை நான் பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு உணவுக் கடையின் முன்னால் நின்றே முதன்முதலாகக் கேட்டேன்! இதனை நான் கூறுவதற்குக் காரணமென்னவென்றால், நாம் வாழ்ந்த எமது தேசத்தின் அமைப்புப் பற்றியோ, அதனது நிலவரைபு பற்றியோ, அதன் வளங்கள் பற்றியோ கலை, கவிதை, இலக்கியப் பண்பாட்டுப் பரிணாமம் பற்றியோ, அதன் தொல்குடி வரலாறு பற்றியோ, அல்லேல் அதன் தேச உருவாக்கம் பற்றியோ நாம் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவே ஒருகாலத்தில் நாம் வாழ்ந்து வந்துள்ளோமென்ற உண்மையைப் பதிவு செய்வதற்காகவே!

அன்றைய காலகட்டத்தில் தம்மைக் கற்றவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும், அன்று கல்விமான்கள், அறிஞர்களென அரசாலும் கல்விப் பீடங்களாலும் கலை இலக்கியப் பிதாமகர்கள், அவதானிகள், அபிமானிகள், அனுமானிகளாலும்  அங்கீகரிப்பட்டவர்களும் எமது சந்ததிக்குக் கையளிக்க முயன்றதெல்லாம் ருசியாவிலும், சீனாவிலும் தான் சொர்க்கமிருக்கிறதென்பதையும், அங்குதான் மக்கள் சுதந்திரமாகவும், உரிமைகளோடும் வாழ்கிறார்களென்பதையும் அங்கு தான் கவிதை, இலக்கியங்களெல்லாம் மானிடத்தின் உயர்வு நோக்கி ஊற்றெடுக்கின்றன என்பதையும் வலியுறுத்துகின்ற, முற்றுமுழுதாக ஏற்றுக்கௌ்ளுகின்ற ஒரு கருத்துருத்துவாக்க  கல்வி, கலை இலக்கிய வாழ்வியல் சமூக பொருளியல் அரசியல் சித்தந்தாத்தையே என்று கூறின் அது மிகையாகாது!

எமது முன்னோரின் இலக்கியங்களையும், அவற்றின் செய்யுள்களையும், அவற்றை யாத்த புலவர்களையும் ஒரு பொய்மைக் கோலமாகச் சித்தரித்த பெருங்கைங்கரியத்தை ஆற்றியவர்களுட் பலரை நாம் இந்த வட்டத்திலேயே சேர்க்க முடியும்! சித்தர்கள் ஞானியர் பனுவல்களையும், தமிழர் மருத்துவ, சோதிட, வானியல், வணிக, வரலாற்றுப் பதிவுகளையும் கடற்கோள்கள், பற்றிய புலவர் பதிவுகளையும் உதாசீனம் செய்த பலரை நான் சந்தித்திருக்கிறேன்!

(தொடரும்)

-புலவர் நல்லதம்பி சிவநாதன்-

Leave a Reply