தமிழர் தாயகத்தைத் தாக்கிய ‘புரெவி’ புயல் – பல குடும்பங்கள் இடம்பெயர்வு; சிலரை காணவில்லை

311 Views

வங்காள விரிகுடாவில் உருவான “புரெவி”ப் புயல் நேற்றுப் பின்னிரவில் இலங்கையின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத்தாண்டி, முன்னேறி, மன்னாரைக் கடந்து, தமிழகத் திசையை நோக்கி இன்று அதிகாலை நர்ந்தது என வட, கிக்குச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புரவி புயலின் தாக்கத்தினால் வடக்கு மாகாணத்தில் அதிக மழை வீழ்ச்சி ஏற்பட் டது. புயலின் தாக்கமும் எதிர்கொள்ளப்பட்டது. சீரற்ற கால நிலை காரணமாக நேற்று நள்ளிரவு வரை வடக்கில் 750 இற்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ளதோடு 10பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடக்கின் 5 மாவட்டங்களும் அதிகம் பாதிப்புக்களை சந்தித்துள்ளமையோடு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவுக்குப் பின் தாக்கம் காணப்படுகின்றது. இதுவரை முல்லைத்தீவில் களுக்கேணிக் குளம் ஒரு அடி வரையில் வான்பாய்கின்றது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் இருந்த 450 குடும்பங்கள் முன் ஆயத்தமாக நகர்த்தப்பட்டு 3 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளர் .

இதேநேரம் கடும் மழை காரணமாக முல்லைத்தீவு நகரிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. இதில் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதியிலான வீதிகள் இந்த நிலமை காணப்படுகின்றபோதும் கேப்பாபுலவு முல்லைத்தீவு வீதியே தற்போது தப்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதனால் இரு குடும்பங்களும் இடப்பெயர்வை சந்தித்துள்ளன. இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இருந்தது.

தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது பல குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று மீனவர்கள் கடலிற்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர். இதேநேரம் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்களது வீட்டில் தங்கியுள்ளன எனவும், கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் தேவன் பிட்டியில் 15 குடும்பங்களும், நானாட்டனில் 91 குடும்பங்களும் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு இடம்பெயர்ந்தனர். கடற் கரையில் நிறுத்தி வைத்திருந்த இரு படகுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு வடக்கின் அனைத்து இடங்களிளும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் புரெவிப் புயலினால் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்றும் – 140 வீடுகள் வரை பகுதியாகப் பாதிக்கப்படுள்ளன என்றும் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

Leave a Reply