தமிழர்கள் மீதான சிங்கள காடையர்களின் கொலை வெறித்தாக்குதல் கண்டனத்துக்குரியது – வ.கௌதமன்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதாக தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“தியாக தீபம்” அண்ணன் திலீபனின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடத்திய நினைவு ஊர்தி பயணத்தில் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களின் மீதும் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள காடையர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் நாள் பொத்துவில் தொடங்கிய பயணம் இரண்டாம் நாள் மட்டக்களப்பில் நிறைவடைந்து மூன்றாம் நாளான இன்று திரிகோணமலையில்பயணித்துக் கொண்டிருந்த பொழுது 50க்கும் மேற்பட்ட ராணுவ புலனாய்வாளர்களைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போதிலும் கப்பல்துறை முக சந்திக்கு அருகில் வந்து கொண்டிருந்த நிலையில் முதலாவதாக கல்வீச்சும் அதனை தொடர்ந்து சந்தாபுர சந்தியில் “தியாக தீபம்” திலீபனின் ஊர்தியை தாக்கியும் அதனை தடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களையும்  சட்டத்தரணி நா.காண்டீபன் அவர்களையும் சிங்களக் கொடி பொருத்திய தடிகளால் கொலை வெறி தாக்குதல் நடத்திய காணொளிகளை கண்ட பொழுது நெஞ்சம் துடிதுடித்து மனம் தாங்க முடியாத துயரத்தை அடைந்தது.

thileepan 2023 3 தமிழர்கள் மீதான சிங்கள காடையர்களின் கொலை வெறித்தாக்குதல் கண்டனத்துக்குரியது - வ.கௌதமன்புலனாய்வாளர்களும் சிங்கள காவலர்களும் சுற்றி சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காடையர்கள் நடத்தி இருப்பதென்பது ராஜபக்சே என்கிற கொடூரமானவருக்கு எந்த விதத்திலும் தான் சளைத்தவர் அல்ல என உலகத் தமிழினத்திற்கு ரணில் விக்கிரமசிங்கே அவர்கள் மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லி சவால் விட்டிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திட்டமிட்ட இன அழிப்பு நடந்து 14 ஆண்டுகள் கடந்த பின்பும் இவ்வுலகம் எங்களுக்கு நீதி தராத நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இலங்கை தேசத்தில் இத்தகைய ஒரு நிலை என்கிறபோது எங்களது சாமானிய தமிழர்கள் அங்கு எப்படி வாழ முடியும் என்பதை இனியாவது ஐநா போன்ற உலகின் பெருமன்றங்கள் சிந்தித்து இதற்கெல்லாம் ஒரே தீர்வு “தனித் தமிழீழம்” ஒன்றுதான் என்று முடிவெடுக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து எங்கள் மீது அதிகார அத்துமீறலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள காடையர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிற செய்தி ஒன்றே ஒன்றுதான்.

“ஒவ்வொரு வினைக்கும்

எதிர்வினை உண்டு”

வெல்வோம்.

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்.

வ. கௌதமன்

பொதுச் செயலாளர்

தமிழ்ப் பேரரசு கட்சி

“சோழன் குடில்”

  1. 09. 2023