தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டி ப்பதாக என ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றுப் பாதுகாப்பான அமைதி வாழ்வில் வளர்ச்சிகள் கண்டு வாழ அந்நேரம் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசிடம் ஒப்பந்தப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 முதல் 26.09.1987 வரை உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரையே ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் 36வது நினைவு சுமந்த ஊர்தி தாயகப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டுவருகிறது, அவ்வாறு திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தியாகி தீபம் திலீபனின் நினைவூர்தி சர்தாபுரத்தில் ஏ6 நெடுஞ்சாலையில் திட்டமிட்ட முறையில் கற்களைப் போட்டு மறித்து சிங்களவர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டு வாகனமும் அடித்து சேதமாக்கப்பட்டு திருகோணமலைக்குள் செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளது அத்துடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஈழத்தமிழருடன் சேர்ந்து வாழ மறுக்கும் மனோநிலையை உணர்த்துகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலே ” அமைதிப் போராட்டங்களுக்கும், நினைவு நிகழ்வுகளுக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது ” என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி மக்கள் மீதான அதுவும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மீது தலைக்கவசத்தாலும் தடிகளாலும் அடித்து தாக்கிய சம்பவமும் அதனை இலங்கை அரச படைகள் வேடிக்கை பார்த்தனர் என்பதையும் காணொளிகள் மூலம் மீண்டும் சர்வதேசத்திற்கு எமது துணிச்சலான ஊடகவியலார்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
இச்செயற்பாடு மிகத்தெளிவாகச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை என்பது ஈழத்தமிழர்கள் மீது பாராளுமன்றக் கொடுங்கோன்மையாகவும் ஈழத்தமிழின அழிப்புக்குச் சிங்களவர்களுக்குச் சட்டப்பாதுகாப்பு வழங்கி ஈழத்தமிழர்கள் சட்டத்தின் முன் சமம் என்ற பாராளுமன்ற சனநாயக ஆட்சி முறைமைக்கான அடிப்படை உரிமையும் கூட மறுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு மீண்டும் தெளிவுபடுத்தும் நிகழ்வாக உள்ளது. இது ஈழத்தமிழர்கள் இந்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையட்சிப் பாராளுமன்ற முறைமையால் மட்டுமல்ல எத்தகைய சிங்களப் பாராளுமன்ற முறைமையிலும் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது சிங்களவர்களால் இனப்படுகொலைகளுக்கும் இனத்துடைப்புகளுக்கும் பண்பாட்டு இன அழிப்புகளுக்கும் எந்நாளும் ஆளாவார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தவறால் 2009 இல் 146000 பேர் இன அழிப்புக்கு உள்ளானமை போன்ற உலவக வரலாறை மீளவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை உடன் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறே உலகநாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் உங்கள் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய தன்னாட்சியை அவர்கள் பெற நீங்கள் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளை ஈழத்தமிழர்கள் உங்களுக்கு வலியுறுத்துவதற்கான சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சனநாயக வழிகளில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பேரணிகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கும், உலக நாடுகள் மற்றும் உலக அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.
அன்பான தமிழீழ மக்களே! எமது தமிழீழ வரலாற்றில் இவ்வாறான நிகழ்வுகள் புதிதல்ல, முள்ளிவாய்க்காலில் இலட்ச்சக்கணக்கான மக்களை இழந்தவர்கள் நாம். எமது மாவீரர்கள் தமது உயிர்களை எமது விடிவிற்காக ஈகம் செய்திருக்கின்றார்கள். அவர்களை போற்ற வேண்டியது எமது உரிமை. அவர்களின் நினைவுகளை எதிர்கால சந்ததிக்குக் கடத்த வேண்டியது எமது கடமை. தியாகி திலீபன் அவர்களின் ஊர்தி தமிழர் தாயகத்தில் ஊர்வலம் வரும்போது அதனை தாக்க வந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை எம்மை விட குறைவாக இருந்த ஒரு வருத்தமான நிலைமையை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
எமது விடுதலையை தன் உயிரினும் மேலாக மதித்து பன்னிரெண்டு நாட்கள் தனையுருக்கி ” மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தமிழீழ கனவை எம்மில் விதைத்து சென்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வார்த்தையைக் கருத்திற் கொண்டு தமிழர்களின் அமைதி போராட்டங்களுக்கு ஆதரவு நல்குவதே இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக நாம் தரும் பதிலாக இருக்கும்.