தமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்

தமிழ், நம் தாய்மொழி.  இது, பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களால், பேசப்படுகின்ற பழமையான மொழி. இம்மொழிக்குத் தாய் நிலங்களாகத் தமிழ்நாடும், தமிழீழமும் உள்ளன. மொழி ஆராய்ச்சியின் அடிப்படையில், இத்தமிழ் மொழியை உலகம் செம்மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமற்கிருதம் ஆகியன குறிப்பிடத்தகுந்த செம்மொழிகள். தமிழை, இங்குக் குறிப்பிட்ட செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், தமிழ் இச் செம்மொழிகளுக்கும் மூத்த மொழியாக இருக்கின்ற உண்மை தெரியவரும். அப்படியானால், தமிழ் செம்மொழிகளில் ஒன்று அன்று. அது, செம்மொழிகளுக்கும் மூலமான மொழி. ஆதலால், அதனை உயர்தனிச் செம்மொழி என்று உரைப்பதே பொருத்தம் என்று மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் ஆய்ந்து நூல் எழுதியுள்ளார்.

தமிழ் மக்களுக்குத் தமிழ் பற்றிய இத் தகுதி பெருமைக்குரியதுதான். ஆனால், உலகம் தமிழிற்கு இந்தத் தகுதியை கொடுத்திருக்கின்றதா என்பதும், தமிழன் இந்தத் தகுதியால் பெருமை பெற்றானா என்பதும், நம் முன் நிற்கும் கேள்விகள்.

தமிழின் சிறப்பு, தமிழ் அறிஞர்கள் இடையில் மட்டும் பேசப்படுவதாக உள்ளது. தமிழர்கள், இந்தத் தமிழின் தகுதியை அறிவதும் இல்லை; பேசுவதும் இல்லை. உலகமோ, பெயருக்குத் தமிழைக் குறிப்பிடுகின்றது.  ஆனால், உலக அரங்கில் உலகம் தமிழைச் சிறப்பிப்பதில்லை. கண்முன்  நிலைகொண்டுள்ள இந்த இயல்பான போக்கினைத் தமிழர்களாகிய நாம் மாற்ற வேண்டும்; தமிழ் மக்களுடைய கடமையாக இது விரிய வேண்டும். செல்வாக்குள்ள மொழிகள் பலவற்றிற்கும் நாடுகள் உள்ளன. அதன் காரணமாக அந்தந்த மொழிகள் உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. தமிழ் மக்களும் இச் செல்வாக்குப் பெற்ற மொழிகளின் பின்னால், ஓடுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். தமிழ், மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த மூலமொழியாக இருந்தாலும், அது தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும்கூட உயிர்ப்புடன், மதிப்புடன்  விளங்கவில்லை.

தமிழ்நாடு இந்தியாவிற்குள்ளும், தமிழீழம் சிங்களத்திற்குள்ளும் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான வரலாற்றுச் சூழலில் சிக்கிக் கொண்டு விட்டன.  வரலாறில்லாத இந்தி மொழியும், வரலாறு இல்லாத சிங்கள மொழியும் தமிழர்களை அடக்கி ஒடுக்கித் தமிழ் மொழியைச்  சிதைப்பதை அரசக்கடமையாகச் செய்து வருகின்றன.  உலக அரசுகளும் இந்த இரு அரசுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு துணை போகின்றன. ஆட்சி அதிகாரங்களின் முன், இரு நிலத் தமிழர்களும் மீளமுடியாமல், தங்கள் மொழியை மீட்க முடியாமல் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தி, சமற்கிருத  திணிப்புகளை எதிர்த்துத் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும், சிங்களத் திணிப்பை எதிர்த்துத்  தமிழீழத் தமிழ் மக்களும் கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்தி கற்றும், சிங்களம் கற்றும் நாம் வாழ்ந்தால் என்ன என்று நினைக்கின்ற தமிழ் மக்களும் இவ் இரு நிலத்திலும் உள்ளனர். இத்தகைய போக்கு பெருகினால், எதிர்காலத்தில் இவ் இரு நிலத்திலும் தமிழ் இல்லாமல் போய்விடும். எனவே வயிற்றுப்பாட்டுக்காகத் தமிழர்கள் இந்தி, சிங்களம், ஆங்கிலம் மற்ற மற்ற மொழிகள் எனப் பலவற்றைக் கற்றாலும், தமிழ்தான் தங்களின் அடையாளம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்; தமிழர்கள் தமிழை வளர்க்க வேண்டும். அவ்வாறு தமிழை வளர்க்கத் தவறினால், தமிழ்நாடும், தமிழீமும் எதிர்காலத்தில் தமிழர் நிலங்களாக இல்லாமலே போய்விடும். இவ்விரு நிலத்து மக்களும் எதிர்காலத்தில் இவ்விரு நிலத்திலும் வேறு வேறு இனங்களுக்கு அடிமையாகி வாழ வழியின்றிப் போய்விடுவர்.

உலக வரலாற்றில் விழித்துக் கொண்ட இனங்களே மீண்டு எழுந்து நிலை பெற்றுள்ளன. அந்த வகையில், தமிழ் மக்கள் யாவரும் தங்கள் மொழியின் மாட்சிமையை வரலாற்று அடிப்படையில் ஊன்றிக் கற்று, அம்மொழிவழி தங்கள் வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். உலக மொழிகள் பலவற்றை ஈன்ற நம் தாய் மொழியாகிய தமிழைச் செம்மொழிகள் பேசும் மக்கள் மட்டும் அல்லாமல் உலகின் பிறபிற மொழிகளைப் பேசுகின்ற மக்களும் கற்க விரும்புகின்ற நிலையை வரலாற்றில் உருவாக்க வேண்டும். இது, பிற மொழிகளுக்கோ பிற இனங்களுக்கோ எதிரான முயற்சி அன்று. உலகப் பெரும் சொத்தாகிய தமிழினைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அறிவார்ந்த தேடல் உலகத்திற்கு ஏற்படும் வண்ணம் தமிழர்களின் பணிகள் அமைதல் வேண்டும். அப்பணிகளில் முதன்மையான பணி, இவ்விரு நிலங்களையும் வரலாற்றில் சிக்கியுள்ள சிற்றினங்களின் கையிலிருந்து மீட்பதுதான். தன்னுரிமை பெற்ற நிலங்களாக இந் நிலங்களை மீட்டெடுப்பதைக் கனவிலும் மறவாதிருக்க வேண்டும். அந்தப் பணியின் பின்னர்தான் தமிழிற்கும், தமிழர்க்கும் நிலையான வாழ்வு ஏற்படும். இதனை உலகெங்கும் பரந்து வாழும் பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களும் உணர வேண்டும்.

உலக அரசுகள் இந்தியாவுடனும், இலங்கையுடனும் தொடர்பு கொள்கின்ற போது, இந்தியையும், சிங்களத்தையும் மனதில் கொண்டே செயற்படுகின்றன. இந்தியாவில் வாழும் பத்துக் கோடித் தமிழர்களையும், ஈழத்தின் ஏறத்தாழ இருபத்தி ஐந்து இலக்கம் தமிழர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களின் மொழி, நாகரிக, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு, வாழ்விற்கு எந்தச் சிறு உதவியையும்  செய்வதில்லை. உலக அரசுகளுக்கு அரசியல் ஆதாய, வணிக நலன்கள்தான் முதன்மையானது; அவர்களுக்கு ஞாயம், அறம், தருமம் என்று எதுவும் இல்லை என்று 27 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழீழத் தேசியத் தலைவர் அறிந்து உரைத்தார். எனவே அதிகாரம் யார் கையில் இருக்கின்றதோ அவரின் பக்கம்தான் உலக அரசுகளின் செயலும் அமையும்.

புலம்பெயர் தேசத்தில், தமிழீழப் போராட்டத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஏறத்தாழ பதினைந்து இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் இவ்வளவான தொகையில் புலம்பெயர் தேசங்களில் வாழவில்லை. ஆனாலும், தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் தேசத்தில் உள்ள அரசுகளும் இந்திக்கும், சிங்களத்திற்கும் கொடுக்கின்ற மதிப்பினைத் தமிழிற்குக் கொடுப்பதில்லை. நம் கண்முன் தெரிகின்ற இந்த உண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு அரசுகள் கிடைக்கின்றவரை உலகம் தமிழ் மக்களை, தமிழை ஏறெடத்துப் பார்க்காது   என்பதை ஒவ்வொரு நொடியும் தமிழ் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர் வருமுன் தமிழீழத் தமிழ் மக்களும், தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் தன்னுரிமை பெற்றவர்களாகவே தங்கள் தாய்நிலத்தில் வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேயர் இந்நிலங்களைக் கைவிட்டுச் சென்ற பிறகு இவ்விரு நிலத்துத் தமிழ் மக்களின் குடுமிகள் இந்தியர், சிங்களர் கைகளில் சிக்கிக் கொண்டன. இந்தியாவும், இலங்கையும் பெற்ற விடுதலை என்பது, தமிழ் மக்களுக்கான விடுதலை அன்று. இந்தியர், சிங்களர் விடுதலை போலவே தமிழர் விடுதலையும் வரலாற்றில் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சொந்தத் தாயகத்தில் வாழ்ந்த தமிழீழ மக்கள், சிங்கள அரசினால் மட்டும் அல்லாமல், இந்திய அரசினாலும், உலக அரசுகளாலும் அழித்தொழிக்கப்பட்டனர். உலகில் 12கோடித் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும், ஒன்றேகால் கோடிச் சிங்களர்களுக்கு உலகம் துணை செய்தது; செய்து வருகின்றது.  இந்த வரலாற்றுக் கொடுமையைக் கண்முன் கண்ட பிறகாவது தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும் நாம் சிங்கள அரசின் கீழும், இந்திய அரசின் கீழும் தொடர்ந்து வாழலாம் என்று நினைப்பது மிகப் பெரிய அறியாமையாகும்; அடிமை மனப்பான்மையாகும். தமிழ் வாழவும், தமிழ் இனம் வாழவும் தமிழர்கள் அனைவரும் இன விடுதலையையும், நாட்டு விடுதலையையும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும்;  இரு தமிழ்ப் பேரரசுகளை  மீட்டெடுக்க வேண்டும். இது, வரலாறு நமக்கு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்.

முனைவர் கு.அரசேந்திரன்