தமிழரின் அரசியல் உரிமைக்கான அபிலாசையின் குறியீடே முள்ளிவாய்க்கால் – அஸ்கிளோப்பியன்

இறைமையும் இயற்கை நீதியும் பின்னிப் பிணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அபிலாஷையின் குறியீடே முள்ளிவாய்க்கால்.  அது வெறுமனே பௌதிக ரீதியானதோர் அம்சமல்ல. அவ்வாறு அதனை சாதாரணமாகக்  கருதிவிட முடியாது.

ஏனெனில்; நிணமும் சதைகளும் சங்கமித்த ஒரு குருதிப் பேராற்றில் இழையோடுகின்ற அபிலாஷைகளின், அழிக்க முடியாததோர் ஆன்ம சக்தியாக, அது திகழ்கின்றது. தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக வியாபித்துள்ள அந்த சக்தியின் வடிவ வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி. அது புனிதமானது. அந்தரங்கம் மிகுந்தது. அதனால் அது மிகமிகப் புனிதமானது.

உணர்வறிவுடைய எவரும் அந்தத் தூபியை நெருங்கிச் சென்று பார்வையிடுகையில் அந்தப் புனிதத்தை உளப்பூர்வமாக உணர்வர். இன, மத, மொழி வேற்றுமை கடந்து இந்த உணர்வுக்குப் பலரும் ஆளாகி இருக்கின்றனர். மனிதாபிமானமும் மனிதநேயமும் கொண்டுள்ள எவரும் ஒரு வணக்கத் தலத்திற்கு – ஓர் ஆலயத்திற்குச் செல்கையில் அடைகின்ற அதே தெய்வீக உணர்வுக் கிளர்ச்சிதான் இது.
இப்போது என்னவென்றால், அந்த நினைவுத்தூபி உடைத்தழிக்கப்பட்டிருக்கின்றது. மனித இயல்பு கொண்ட எவரும் செய்யத் துணியாத இழிநிலையில் இது நடந்தேறி இருக்கின்றது. இது ஒரு மட்டரகமான செயற்பாடு. குரூரர்களே இத்தகைய காரியத்தைச் செய்ய முடியும்.

இதனைச் செய்தது யார்? ஏன் செய்தார்கள்? இவை பெரிய சிந்தனைக்கும் பெரிய கண்டுபிடிப்புக்கும் உரிய கேள்விகள் அல்ல. அது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்யக் கூடாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அது அரசினுடைய இராணுவமயச் சிந்தனையில் தோய்ந்த அடாவடியான அழுங்குப் பிடி. மே மாதம் 18 ஆம் திகதி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதுவொரு தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக – இறந்தவர்களை நினைவுகூர்கின்ற மனித இயல்பு சார்ந்த மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அது மறைந்து போனவர்களுக்கான பொதுவானதோர் ஆன்மீகக் கடப்பாடு. மனித நேயமாக மனிதாபிமானச் செயற்பாடாக அது உலக மக்கள் அனைவராலும் கைக்கொள்ளப்படுகின்ற பண்பாடு.

இந்த முள்ளிவாய்க்காலின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெறுவதற்குச் சரியாக ஆறு நாட்கள் இருக்கையில் மே மாதம் 12 ஆம் திகதி இந்த நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் அதனைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி உள்ளார்கள். கேவலப்படுத்தி உள்ளார்கள். நிந்தனை செய்திருக்கின்றார்கள். ஆனால் அந்த ஆன்மீக சக்தியின் வலிமைக்கு முன்னால் அவர்களுடைய முயற்சி முழுமை பெற வில்லை.

அந்த நினைவுச் சின்னத்தின் கைப்பகுதியை உடைத்தழித்தவர்களினால் நினைவுத் தீபம் ஏற்றுகின்ற அமைப்பை உடைக்க முடியவில்லை. அதன் வலிமைக்கு முன்னால் அவர்களது கோரச் செயற்பாடு தளர்ந்து தோற்றுப் போனதே அதற்குக் காரணம்.

அதேவேளை 12ஆவது நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினரால் அங்கு கொண்டு செல்லலப்பட்டிருந்த  நடுகல்லையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். மறுநாள் காலை அங்கு சென்று பார்வையிட்டவர்களுக்கு நினைவுத் தூபி  உடைப்பும் நடுகல் காணாமல் போயிருந்தமையும் அதிர்ச்சியை அளித்தன.

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபியும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியும்

யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முறையான அனுமதியுடன் கட்டுப்படவில்லை என்ற காரணத்திற்காக இடிக்கப்பட்டபோது பொது நிலையில் எழுந்த கிளர்ச்சியையும் ‘சத்திய ஆவேசத்தையும்’ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின தருணத்தில் அதன் நினைவுத்தூபி உடைக்கப்பட்டபோது காண முடியவில்லை.

அது ஏன்? பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைப்பின்போது முறுக்கேறிய நரம்பு நாடிகள் தளர்ந்து போய் விட்டனவோ? அல்லது அப்போது கிளர்ந்து எழுந்தவர்களின் நரம்புகளும் உணர்ச்சிகளும் செத்துப் போய்விட்டனவா?

இது குறித்து இணைந்து சிந்தித்தபோது ஒருவர், ‘பல்கலைக்கழக சம்பவம் நகரத்துக்குள் பெரிய எலி ஒன்று செத்துப் புழுத்து நாறியது போன்றது. ஆனால் இது ஒரு மூலையில்  முள்ளிவாய்க்காலில் நடந்ததுதானே’ என்றார். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தீவிர நிலையில் அது பற்றிய முக்கியத்துவம் பல்வேறு அரச சட்டச் செயற்பாடுகளில் மூழ்கடிக்கப்பட்டு விட்டது அதுதான் காரணம்’ எனக் கூறினார். அவர் கூறிய காரணத்தை என்னால் எழுந்தமானமாக நிராகரிக்க முடியவில்லை.

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைக்கப்பட்டபோது பரந்துபட்ட நிலையில் எழுந்த எதிர்ப்புணர்வு நியாயமானது. நீதியானது. தமிழகம் மட்டுமல்லாமல் சர்வமேச அளவில் புலம்பெயர் தேசத் தரப்பில் இருந்தும் அந்த எழுச்சி தீப்பிழம்பாக எழுந்திருந்ததே. ஆயினும் அதன் பல்வேறு நிலைகளில் அரசியல் சங்கமித்திருந்ததை மறுக்க முடியாது. ஆயினும் அதன் உண்மைத் தன்மை ஐயப்பாட்டிற்கு உரியதல்ல.

ஆனால் அத்தகைய எழுச்சியையும், எதிர்ப்புணர்வையும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டு அதற்கான நடுகல் காணாமல் ஆக்கப்பட்ட போது காண முடியவில்லையே. தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்திருந்தன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இத்தகைய கீழ்த்தரமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று கோரியதுடன், அரசாங்கத்தைக் கடும் தொனியில் எச்சரிக்கை செய்திருந்ததையும் காண முடிந்தது.

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபியிலும் பார்க்க முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அங்குதானே தமிழின சங்காரம் நிகழ்த்தப்பட்டது? அந்தப் பேரழிவு நிகழ்ந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி அங்கு உயிரழிக்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களினதும் ஒருங்கிணைந்த அடையாளம் அல்லவா?அந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட அராஜகத்திற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க முடியும்;?

அரச மறுப்பும் தடையும்

இந்த சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் சம்பந்தமில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மறுப்பு தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மீது வீணாகக் குற்றம் சுமத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார அது மட்டுமல்லாமல் இறந்தவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நடத்தக் கூடாது என்றும் இறந்தவர்களை வீடுகளில்

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து  முடிவுறுத்தப்பட்ட இறுதிப்போரில் இந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அரசப் படைகளுக்கு இவரே தலைமை தாங்கி வழி நடத்தி இருந்தார். அப்போது இடம்பெற்ற அத்துமீறிய செயற்பாடுகளுக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் போர் முறை மீறிய சம்பவங்களுக்கும் இவர் பொறுப்பேற்க வேண்டும், பொறுப்பு கூறவேண்டும் என இவர் மீது ஏற்கனவே சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலான ஆதாரங்களும்கூட திரட்டப்பட்டிருப்பதாக சர்வதேச பிரபல்யம் மிக்க மனித உரிமை சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளாhர்.

அது மட்டுமல்ல. ஊடகங்களுக்கான இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, இராணுவத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைக்க வேண்டிய தேவை இல்லை என கூறி உள்ளார். பல வருடங்களாக இருக்கின்ற அந்தத் தூபியை இராணுவம் எதுவும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்த மறுப்புரைகள் வெறும் சப்பைக் கட்டுக்களாக உள்ளனவே தவிர, காரண காரியங்களுடன் கூடிய நியாயத்தன்மையைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நினைவேந்தல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ‘முள்ளிவாய்க்காலில் கொல்லபப்பட்டவர்களை நினைவுகூர்ந்தால் பயங்கரவாதிகளாகிய விடுதலைப்புலிகள் உயிர் பெற்று விடுவார்கள். நாட்டில் புலிப் பயங்கரவாதம் தலையெடுத்து நாடு பிளவுபட்டுவிடும் என்று அரசாங்கம் இதற்குக் காரணம் கூறியது. காரணம் காட்டியது. அதனையோர் அரசியல்  பிரசாரமாகவே மேற்கொண்டது.

பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தiiயெடுக்க அனுமதிக்கப் போவதில்லை. ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் மீளுருவாக்கம் பெறவோ தேசிய பாதுகாப்புக்கு அதனால் குந்தகம் ஏற்படவோ அனுமதிக்கப் போவதில்லை என அரசு திட்டவட்டமாகக் கூறி தமிழர்களின் சகல நினைவேந்தல்களையும் தடை செய்தது.

என்ன நடந்தது?

இந்தப் பின்புலத்த்தில்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12 ஆம் திகதி ஆரமம்பமகியபோது, முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் தமது தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். சிவிலுடைப் புலனாய்வாளர்கள் எல்லா இடங்களிலும நடமாடினார்கள். இவர்களுடைய நடமாட்ட வேளையிலேயே, 2020 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிடப்பட்ட பிரகடன வாசகங்கள் பொறிக்கப்பட்ட நடுகல் ஒன்றை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக நிiவேந்தல் குழுவினரால் கொண்டு செல்லப்பட்டது.

ஆறடி உயரமும் மூன்று அடி அகலமும் 2000 கிலோ எடையும் கொண்ட அந்த நினைவுகல் ஒரு கனரக வாகனத்தில் இருந்து இறக்கப்படவிருந்த வேளை, அங்கு பிரசன்னமாகி இருந்த புலனாய்வாளர்களின் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு இhhணுவத்தினர் விரைந்தனர். அந்த இடத்தில் அந்த நடுகல்லை இறக்க முடியாது என்று சிவிலுடையினர் தெரிவித்தனர். அதற்கிடையில் அந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன், பொலிசாரும் அங்கு சென்றடைந்தனர்.

கொவிட் 19 சட்டம் நடைமுறையில் இருப்பதனால் மக்கள் ஒன்று கூடுவது தடை  செய்யப்பட்டிருக்கின்றது. எனவே அந்த இடத்தில் எவரும் கூட முடியாது. எந்தப் பொருளையும் கொண்டு சென்று இறக்க முடியாது என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினருக்குப் பொலிசார் தெரிவித்தனர்.

அதனை ஏற்க மறுத்த அந்தக் குழுவினர் நாங்கள் நாலைந்து பேரே நிற்கிறோம். நீங்கள் தான் எண்ணிக்கையில் அதிகமாக இங்கு குழுமி இருக்கிறீர்கள். குருந்துமலையில் தடை உத்தரவுக்கு மத்தியிலும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலரும் ஒன்று கூடவும் நெருநங்கி இருக்கவும் அனுமதிக்கின்ற பொலிசாராகிய நீங்கள் எங்களைத் தடுக்க முடியாது என்று நினைவேந்தல் குழுவினர் பொலிசாருடன் வாதிட்டார்கள். ஆனாலும் அந்த இடத்தில் அவர்கள் கூடி இருக்கவோ அல்லது எதனையும் செய்யவோ முடியாது. அதற்கு அனுமதி இல்லை எனக் கூறி பொலிசார் தடுத்து விட்டனர்.
இதற்கிடையில் அங்கு ஏற்றிச் செல்லப்பட்ட நடுகல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இறக்கப்பட்டு அதற்கான இடத்தில் நடுகை செய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஜேசிபி கனரக வாகன சாரதி அங்கு செல்வதற்கு அஞ்சி வராமல் விட்டுவிட்டார். இதனால் கொண்டு சென்ற நடுகல்லை நினைவேந்தல் குழுவினரால் உடனடியாகவே நடுகை செய்ய முடியாமல் போயிவ்ட்து. நடுகல் கெண்டு செல்லப்பட்டதையும், அது தொடர்பில் பொலிசார் உள்ளிட்ட படையினர் அங்கு குவிக்கப்பட்டதையும் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் அங்கு சென்று நிலைமையை அவதானிக்க முற்பட்டபோது படையினர் அவர்களை அனுமமதிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நிiவேந்தல் வாரத்தையொட்டி பொது நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபடக் கூடிய செயற்பாட்டாளர்களாகிய முல்லைத்தீவு பிரதேசத்தின் அரசியல்வாதிகள்  நினைவேந்தல் குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இராணுவ புலனாய்வாளர்களின் தீவிர மோப்பத்திற்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்கள் பின்தொடரப்பட்டு விசேட கண்காணிப்புக்கும் நெருக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் படையினரது அச்சுறுத்தலுக்கு மத்தியில், பொலிசாரின் கண்டிப்பான செயற்பாட்டையடுத்து, நினைவேந்தல் குழுவினர் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
மறுநாள் காலை அங்கு சென்ற தங்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்ததாக நிநைவேந்தல் குழுவினர் தெரிவித்தனர்.

அன்றிரவு முள்ளிவாய்க்கால் முற்றப்பிரதேசத்தில் அதிகமான ஆள் நடமாட்டம் உணரப்பட்டது. கனரக வாகனங்களின் ஓசையையும் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சூழ்ந்த வீடுகளில் உறங்கிய மக்களால் கேட்க முடிந்தது. வீட்டு நாய்கள் அச்சத்தில் உறைந்து எச்சரிக்கை அடைந்து பெருங்குரலில் குரைத்தன. ஒரு சிலர் வீடுகளில் வெளிப்பக்க லைட்டுகளை ஒளிரவிட்டு வெளியில் வந்து பார்த்தனர். கண்காணிப்புக் காவலில் நிறுத்தப்பட்டிருந்த சிப்பாய்கள், இராணுவமே வந்துள்ளது என்றும் ஊர் மக்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் வெளிச்சத்தை எல்லாம் அணைத்துவிட்டு உறங்குமாறு கூறினர்

இரவிரவாக இருந்த ஆளரவமும் கனரக வாகனங்களின் ஓசையும் நள்ளிரவு அளவில் அடங்கிப் போயின. பொழுது விடிந்தது. முள்ளிவாய்க்கால் முற்றம் வெறிச்சோடிக் கிடந்தது
அங்கு சென்ற நினைவேந்தல் குழுவினர் தங்களது நடு கல்லைக் காணாது விக்கித்து நின்றனர். அதேவேளை நினைவுத் தூபி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்து உணர்வொடுங்கிப் போயினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் நிலைமையை அவதானித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர்.

இதற்கிடையில் 7 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நினைவேந்தல் குழுவினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட 27 பேருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் நினைவேந்தல் தடை உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து செய்யப்பட்ட மனுத்தாக்கல்களையடுத்து,  ;முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார விதிகளை கடைபிடித்து மேற்கொள்ளலாம் எனவும் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டாத வண்ணம் மேற்கொள்ளவேண்டும்’ எனவும் நீதிமன்றம் கட்டளை வழங்கியது,
ஆனாலும் நீதிமன்ற உத்தரவுக்கமைய கட்டுப்பாடான வகையில் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டுவிடும் என்று அரசாங்கமும் இராணுவத்தினரும் அஞ்சியிருக்க வேண்டும். அல்லது அத்தகைய முயற்சியில் தமிழ் மக்கள் நிச்சயமாக ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆகவேதான் எந்த வழியிலாவது பொது வெளியிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று அரசு கங்கணம் கட்டிச் செயற்பட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு வெளியாகிய உடன் 17 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர  சில்வா கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவர் என்ற அதிகார ரீதியில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு சட்டமுறைப்படி இடமளிக்கபப்ட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீற முடியாதே. அதனால் ஒரு கோட்டை சிறியதாக்க வேண்டுமானால் அதன் மீது கை வைக்காமலே அருகில் ஒரு பெரிய கோட்டைக் கீறிவிடுவது போன்று நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்பட வல்ல கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புச் சட்டத்தை அரசு கையில் எடுத்துச் செயற்பட்டிருந்தது.

இந்த அரசியல் போக்கிரித்தனத்தின் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எத்தகைய சட்டச்சிக்கலுமின்றி மிகச் சாதாரணமாக அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
இதில் இன்னுமொரு ஆபத்தும் சூழ்ந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்தழித்ததன் மூலம் அதனை மீண்டும் கட்டியெழுப்ப விடாமல் அரசாங்கம் தனது தந்திரோபாயச் செயற்பாடுகளின் மூலம் நிச்சயமாகத் தடை போடவே செய்யும்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவிடமாமல் முற்றாகத் தடுத்துவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் இலகுவில் நிறைவேறிவிடும. கூட்டு நினைவேந்தலை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டிருக்கின்றது. நாளடைவில் அந்த நினைவு முற்றத்தை இராணுவத்தின் பாவனைகக்கான காணியாக சுவீகாரம் செய்யவும் அரசு முற்படவும் கூடும்.

இத்தகைய ஆபத்துக்களுக்கான ஒரு முன்னோட்டமாகவே முள்ளிவாய்க்கால் நினைமூத்தூப் இடிக்கப்பட்டிருக்கின்றது. அங்கு நிறுவப்படவிருந்த நடு கல்லும் அங்கிருந்து கவர்ந்து செல்லப்பட்டிருக்கின்றது. இதனை சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமிழத்தில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவு சக்திகளும் புலம் பெயர்ந்தவர்களும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மிகப் பொறுப்போடும், தீவிரத்தன்மையுடனும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

நன்றி- வீரகேசரி

Leave a Reply